சென்னை எம்.ஜி.ஆர் நகர், திரு.வி.க தெருவைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரின் சொந்த ஊர் திண்டிவனம் தாலுகா, கீழ்மாவிலங்கை. இவரின் கணவர் பெருமாள் மீன்வெட்டும் வேலை செய்து வருகிறார். நாகலட்சுமி, வீட்டு வேலை செய்து வருகிறார். நாகலட்சுமியின் தம்பி ராஜதுரை (28). இவர் பி.காம் படித்து விட்டு வேலையில்லாமல் இருந்துவந்தார். மது அருந்தும் பழக்கமும் ராஜதுரைக்கு இருந்துள்ளது. அதனால் பெற்றோரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளான் ராஜதுரை. இந்தச் சூழலில் விபத்து ஒன்றில் சிக்கிய ராஜதுரைக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குப் பிறகு திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு வந்த ராஜதுரை, நாகலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்தார். சென்னையில் தங்கியிருந்த ராஜதுரை, உணவு டெலிவரி உள்ளிட்ட கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். மது அருந்தும் பழக்கத்தால் எந்த வேலையிலும் அவர் நிரந்தரமாக இருக்கவில்லை. இந்தநிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று ராஜதுரை தான் காதலித்த இலக்கிய செல்வி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப்பிறகு நாகலட்சுமியின் வீட்டின் அருகிலேயே ராஜதுரை குடியிருந்தார். அப்போதும் அவன் வேலைக்குச் செல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ராஜதுரை மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும் பகலிலேயே மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளான். அதையெல்லாம் ராஜதுரையின் அக்காள் நாகலட்சுமியிடம் இலக்கிய செல்வி கூறி அழுதாள். அவளை சமதானப்படுத்திய நாகலட்சுமி, எல்லாம் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறினார். இந்தநிலையில் கடந்த 28-ம் தேதி அதிகாலையில் நாகலட்சுமியின் வீட்டின் கதவை ராஜதுரையின் மனைவி இலக்கிய செல்வி தட்டினாள். அப்போது அவள் பதற்றமாக இருந்துள்ளாள். கதவைத் திறந்த நாகலட்சுமி, என்ன தகவல் என்று கேட்டதற்கு, ``உங்க தம்பி (ராஜதுரை) வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்” என கதறியப்படி இலக்கியசெல்வி கூறினாள். அதைக்கேட்டு நாகலட்சுமி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் வீட்டுக்குச் சென்று ராஜதுரையின் சடலத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கீழே இறக்கினர். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், ராஜதுரையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜதுரையின் இறப்பில் எந்தவித சந்தேகமும் இல்லை என அவரின் சகோதரி நாகலட்சுமி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து பிரேத பரிசோதனைக்குப்பிறகு ராஜதுரையின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
காதலர் தினத்தில் திருமணம் செய்த பட்டதாரி, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.