Published:Updated:

`குடிக்கப் பணம் இல்லை!' - நெல்லையில் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்த இளைஞர்கள்

உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்

குடிப்பதற்கும் செலவு செய்வதற்கும் பணம் தேவைப்பட்டது. வீட்டில் பணம் கிடைக்காததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக பிடிபட்ட இளைஞர்கள் வாக்குமூலம்.

நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள், சுந்தர்ராஜ் மற்றும் முத்து.  23 வயது நிரம்பிய இருவரும் பள்ளிக் காலம் முதலாகவே ஒன்றாகவே படித்ததால் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இருவரும், இன்று அதிகாலை சாந்தி நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருந்தபோது போலீஸாரிடம் பிடிபட்டுள்ளனர். 

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சுந்தர்ராஜ், முத்து
கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சுந்தர்ராஜ், முத்து

இதுபற்றி பாளையங்கோட்டை போலீஸார் கூறுகையில், ``பிடிபட்ட இருவரும் நண்பர்கள். இவர்களுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி குடித்துவிட்டு ஊர்சுற்றிவந்த இவர்களுக்கு, பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இருவரும் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

நெல்லை மாநகரம் முழுவதும் சுற்றிவந்த இவர்கள், காவலாளி இல்லாத ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள பகுதியை நோட்டமிட்டிருக்கிறார்கள். அப்போது, சாந்தி நகர் பகுதியில் இயந்திரம் இருக்கும் இடத்தில் ஆள் நடமாட்டம் குறைவாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதிகாலை மக்கள் உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்
உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரம்

அதன்படி, இன்று காலை ஹெல்மெட் அணிந்தபடி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த இருவரும், கையோடு கொண்டு சென்றிருந்த கடப்பாறையால் இயந்திரத்தை உடைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தால், தனியார் வங்கியின் தலைமை அலுவலகத்தில் `எச்சரிக்கை ஓசை’ கேட்டுள்ளது. அவர்கள், அங்கிருந்து சிசிடிவி மூலம் பார்த்தபோது, கொள்ளையடிக்க நடக்கும் முயற்சி தெரியவந்திருக்கிறது.

வங்கிப் பணியாளர்கள் உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரியப்படுத்த, காவல் நிலையத்தி லிருந்து அந்தப் பகுதியில் உள்ள ரோந்து வாகனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ரோந்து வாகனம் அருகில் இருந்ததால், உடனடியாகச் சென்று இருவரையும் கைது செய்துவிட்டோம்” என்று போலீஸார் தெரிவித்தனர். 

சுந்தர்ராஜ் மற்றும் முத்து
சுந்தர்ராஜ் மற்றும் முத்து

கொள்ளை முயற்சியில் சிக்கிய சுந்தர்ராஜ், முத்து ஆகியோர் போலீஸார் விசாரணையின்போது, ``குடிப்பதற்குப் பணம் கிடைக்காததால் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டோம். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஏடிஎம் மையங்களைத் தேர்வுசெய்து, தொடர்ச்சியாகக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், முதல் முயற்சியிலேயே போலீஸாரிடம் சிக்கிக் கொண்டோம்” என்று தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு