Published:Updated:

`நேர்காணலில் பாதியில் எழுந்து சென்ற திரௌபதி பட இயக்குநர்’ - கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்ற புகார்

திரௌபதி படம்
திரௌபதி படம்

திரௌபதி பட இயக்குநருடன் நடந்த நேர்காணலின்போது பாதியில் அவர் எழுந்து சென்ற பிரச்னை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குப் புகாராகச் சென்றுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள கலாட்டா டாட் காமின் தொகுப்பாளர் விக்ரமன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், ``நான் ``கலாட்டா டாட் காம்” என்ற இணைய ஊடகத்தில் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். இதற்குமுன்னர், பிரபலமான செய்தி ஊடகங்களில் தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளேன். நான் பணியாற்றும் ஊடகத்திற்காக, அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பிற துறைகளின் பிரபலங்களை நேர்காணல் செய்துள்ளேன்.

அந்த வகையில், கடந்த 05.03.2020 அன்று வெளியாகி தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கம் ``திரௌபதி” என்ற படத்தின் இயக்குநர் ஜி.மோகன் என்பவரை நேர்காணல் செய்தேன். இந்த நேர்காணல், மேற்கண்ட முகவரியில் உள்ள என் அலுவலகத்தில் நடைபெற்றது. நேர்காணலின் தொடக்கத்தில் என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளித்த மோகன், ஒரு கட்டத்தில் என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், என்னை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதி என்று அடையாளப்படுத்த தொடங்கினார்.

விக்ரமன்
விக்ரமன்

நான் அதைப் பெரிதுபடுத்தாமல், என்னுடைய பணியை மட்டுமே செய்ய வேண்டும் என்ற நோக்கில், தொடர்ந்து கேள்விகளைக் கேட்டேன். ஆனால், அதற்கு பதிலளிக்காத இயக்குநர் ஜி.மோகன், நேர்காணலிலிருந்து பாதியிலேயே எழுந்து வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நானும், என்னுடைய தயாரிப்பாளரும் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரை சமாதானம் செய்ய முயன்றோம். எங்கள் தரப்பில் எந்தத் தவறும் இல்லாதபோதும், எங்கள் அலுவலகத்திற்கு, எங்கள் அழைப்பை ஏற்று வந்த ஒருவர், இவ்வாறு பாதியிலேயே செல்வது எங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியது என்ற அடிப்படையிலேயே அவரை சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால் அவர் என்னை மீண்டும் ஒரு சமூகத்துடன் தொடர்புபடுத்திப் பேசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

என்னை மிரட்டி விட்டுச் சென்ற அடுத்த சில மணி நேரத்தில் இயக்குநர் மோகன், @mohandreamer என்ற அவருடைய ட்விட்டர் பக்கத்தில், கலாட்டா டாட்காமில் வெளியான அவருடைய நேர்காணலை இணைத்து, அந்த நேர்காணலிலிருந்து அவர் பாதியிலேயே வெளியேறவில்லை என்றும், அவ்வாறு தான் வெளியேறியதாகப் பொய்யான செய்தியைக் கலாட்டா டாட்காம் வெளியிட்டுள்ளதாகவும், அதற்கு நான்தான் காரணம் என்றும், உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலைப் பதிவிட்டார். அடுத்த சில மணிநேரத்தில், கலாட்டா டாட்காம் அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியாற்றிய ஊழியர்களை மிரட்டிய வீடியோவின் ஒரு பகுதியைத் தன் ட்விட்டரில் பதிவிட்ட இயக்குநர் மோகன், அந்தப் பதிவிலும், தான் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறவில்லை என்ற பொய்யான செய்தியைப் பதிவிட்டதுடன், ஒரு ஊடகத்தின் அலுவலகத்திற்குள் குண்டர்களுடன் அத்துமீறி நுழைந்து அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களை மிரட்டியதைப் பெருமையாகப் பதிவிட்டிருந்தார். அத்துடன், நான் அவரிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும் என்று என்னைப் பொதுவெளியில் மிரட்டும்வகையில் பதிவிட்டிருந்தார்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

07.03.2020-ல் என்னுடைய படத்தையும் மற்றொரு அடையாளம் தெரியாத நபரின் படத்தையும் இணைத்து ``நாடகக் காதல் கும்பல்” என்று தலைப்பு கொடுத்து, ஒரு படத்தை @ragavakamalraj என்ற ட்விட்டர் கணக்கில் ஒருவர் பதிவு செய்திருந்தார். ஒரு பத்திரிகையாளரைப் பொதுவெளியில் தரக்குறைவாக விமர்சிக்கும் அந்தப் பதிவை இயக்குநர் ஜி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் மீள்பதிவு செய்தார். அன்றைய தினம் தொடங்கி என்னுடைய மொபைல் போனுக்குத் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அழைப்பவர்கள் அனைவரும், என்னை மிகவும் தரக்குறைவாகப் பேசுவதுடன், இயக்குநர் ஜி.மோகனின் நேர்காணலை வெளியிட்டதற்காக என்னைக் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர்.

இயக்குநர் ஜி.மோகன் நான் பணியாற்றும் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து எனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததால் நான் மிகுந்த அச்சமடைந்துள்ளேன். அத்துடன், மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் என்னைப் பற்றிய அவதூறான செய்திளை மீள்பதிவிட்டது முதல், தொலைபேசி வாயிலாக விடப்படும் கொலை மிரட்டல்களும் அவதூறுகளும் என்னை மேலும் அச்சமடையச் செய்துள்ளது. இதனால், என்னுடைய அன்றாடப் பணிகளைச் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளேன். இதைக் கண்டு என்னுடைய குடும்பத்தாரும் மிகுந்த மனஉளைச்சலடைந்ததுடன், அச்சமடைந்துள்ளனர்.

வாக்குவாதம்
வாக்குவாதம்

ஆகவே, என் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து எனக்குக் கொலை மிரட்டல் விடுத்தது. அந்த வீடியோவின் ஒரு பகுதியை வெளியிட்டு எனக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது. என்னைப் பற்றிய அவதூறான செய்தியை மீள்பதிவு செய்து சமூகத்தின் ஒரு பிரிவினரை எனக்கு எதிராகத் திருப்பியது. இவை அனைத்தின் மூலமும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது ஆகிய குற்றங்களுக்காக இயக்குநர் ஜி.மோகன் மீது உரிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குநர் ஜி.மோகன் வெளியிட்ட வீடியோ மற்றும் ட்விட்டர் பதிவுகளின் நகல்களை இதனுடன் இணைத்துள்ளேன். அதோடு இந்த நேர்காணலைப் பயன்படுத்தி இரு கட்சியினரிடையே பிரச்னையை உண்டுபண்ணி தன் படத்திற்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளப்போவதாகவும், ``விக்ரமனை விடமாட்டேன்" என்றும் என் சக ஊழியரிடம் இயக்குநர் மோகன் தொலைபேசியில் பேசியிருப்பதன் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விக்ரமனிடம் கேட்டதற்கு ``இயக்குநர் மோகனின் நேர்காணல் நிகழ்ச்சியை ஒளிபரப்பியபோது வாக் அவுட் என்று கூறியிருந்தோம். அதற்கு மோகன், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன்பிறகுதான் என்னை மிரட்டினார். இந்தச் சம்பவத்துக்குப்பிறகு ஒரு தரப்பினரிடமிருந்து எனக்கு தொடர்ந்து மிரட்டல் அழைப்புகள் வருகின்றன. மேலும் சமூக வலைதளத்தில் என்னுடைய புகைப்படத்தைப் பதிவு செய்து நாடகக் காதல் தலைவன் என்று குறிப்பிட்டுள்ளார். அதனால்தான் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தேன்" என்றார்.

மோகன் பதிவிட்டுள்ள வீடியோ
மோகன் பதிவிட்டுள்ள வீடியோ

இதுகுறித்து விளக்கம் கேட்க திரௌபதி படத்தின் இயக்குநர் மோகனை பலதடவை தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில், பரிசீலனைக்குப்பிறகு அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.

அடுத்த கட்டுரைக்கு