Published:Updated:

நான் கொஞ்சம் டீசன்ட்டாதான் பேசியிருக்கேன்! - போலீஸாரை அதிரவைத்த யூடியூபர் மதன்

யூடியூபர் மதன்
பிரீமியம் ஸ்டோரி
யூடியூபர் மதன்

‘ஏழைகளுக்கு உதவுங்கள் ப்ரோ, நோயால் பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு ஹெல்ப் பண்ணுங்க’ என்று மதன் லைவ் வீடியோவில் சொல்வான்.

நான் கொஞ்சம் டீசன்ட்டாதான் பேசியிருக்கேன்! - போலீஸாரை அதிரவைத்த யூடியூபர் மதன்

‘ஏழைகளுக்கு உதவுங்கள் ப்ரோ, நோயால் பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு ஹெல்ப் பண்ணுங்க’ என்று மதன் லைவ் வீடியோவில் சொல்வான்.

Published:Updated:
யூடியூபர் மதன்
பிரீமியம் ஸ்டோரி
யூடியூபர் மதன்

பப்ஜி லைவ் விளையாட்டில் காதுகூசும் ஆபாசப் பேச்சுகளைப் பேசி, சிறார்களை மூளைச்சலவை செய்த யூடியூபர் மதனைக் கைதுசெய்த தகவல் கிடைத்ததும், உடனடியாக கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்தோம். நாம் சென்ற அரை மணி நேரத்தில் போலீஸார் புடைசூழ வந்திறங்கினான் மதன். அங்கிருந்த போட்டோகிராபர்கள் அவனைச் சுற்றிவளைத்து போட்டோ எடுத்தபோது, ‘‘நானென்ன பி.எம்-மா?” என்று கிண்டலாக மதன் கேட்க, அருகிலிருந்த காவலர், ‘‘நீ பி.எம் இல்ல... அக்யூஸ்ட்’’ என்று பதிலடி கொடுத்தார். மதனை எப்படிச் சுற்றிவளைத்தார்கள், விசாரணையில் அவன் என்ன சொன்னான் என்று மதனைக் கைதுசெய்த குழுவிலிருந்த அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம்.

நான் கொஞ்சம் டீசன்ட்டாதான் பேசியிருக்கேன்! - போலீஸாரை அதிரவைத்த யூடியூபர் மதன்

‘‘கிருத்திகாவைக் கைதுசெய்து விசாரித்தபோதுதான், மதன் பற்றிய முழு விவரங்கள் எங்களுக்குத் தெரியவந்தன. கிருத்திகாவின் மொபைலில் மேக்கப் இல்லாத அவனது ஒரு போட்டோவை எங்கள் குழுவுக்கு அனுப்பிய பிறகுதான், தருமபுரியில் அவனை அடையாளம் காண முடிந்தது. இல்லையென்றால், அவனைப் பிடிப்பது சிரமமாகியிருக்கும். மதன், கிருத்திகா இருவருமே சேலத்தைச் சேர்ந்தவர்கள். மதனைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்புவரை சென்னையிலுள்ள பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் நல்ல சம்பளம் வாங்கிவந்திருக்கிறார் கிருத்திகா. ஆனால், அதைவிட யூடியூப் சேனல் மூலம் கோடிக்கணக்கில் பணம் கிடைத்த பிறகு, வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். மதனின் மோசடி வேலைகள் கிருத்திகாவுக்குத் தெரிந்தும், அதைக் கண்டிக்காமல் அவனுக்கு உதவியாகவே கிருத்திகா இருந்திருக்கிறார். கிருத்திகாவின் செல்போன் மற்றும் லேப்டாப்பிலிருந்து சில வீடியோக்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கிருத்திகாவின் வங்கிக் கணக்கைத்தான் மதன் பயன்படுத்தி, நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தி வந்திருக்கிறான்.

கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய் உள்ளது. இதுதவிர, ‘ஏழைகளுக்கு உதவுங்கள் ப்ரோ, நோயால் பாதிக்கப்பட்ட இந்தச் சிறுமிக்கு ஹெல்ப் பண்ணுங்க’ என்று மதன் லைவ் வீடியோவில் சொல்வான். அவனால், மூளைச்சலவை செய்யப்பட்ட அவனின் ரசிகர்கள், ரசிகைகள் 1,000 ரூபாய் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை நன்கொடையாக கூகுள் பே மூலம் அனுப்பி வைப்பார்கள். அதிகமாகப் பணம் கொடுப்பவர்களின் பெயரை மதன் லைவ் வீடியோவில் பெருமையாகச் சொல்வான். அதில் பெரும்பாலான பணத்தை யாருக்கும் உதவாமல் மதன் மோசடி செய்திருக்கிறான். ராணி என்ற பெண்ணின் பெயரைச் சொல்லி 5 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்ற மதன், அந்தப் பெண்ணுக்கு வெறும் 5,000 ரூபாய் கொடுத்ததோடு, தன்னைப் பற்றிப் பெருமையாக வீடியோவில் பேசவைத்து அதையும் வெளியிட்டிருக்கிறான். தற்போது ராணியும் புகார் கொடுத்திருக்கிறார். பண மோசடி என்றே நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதையாக யூடியூப் மூலமாகவும், நன்கொடை மூலமாகவும் வந்த வருமானம் எதற்கும் மதன் வரி கட்டவில்லை.

கிருத்திகா கைதுசெய்யப்பட்ட பிறகு மதனின் நண்பர்கள், குடும்பத்தினரின் செல்போன் சிக்னலை ரகசியமாகக் கண்காணித்தோம். அப்போது, தருமபுரி குண்டல்பட்டி கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் மதன் பதுங்கியிருப்பது தெரிந்தது. அங்கு சென்றபோது எப்படியோ அங்கிருந்தும் எஸ்கேப் ஆகிவிட்டான். தொடர்ந்து சுற்றுவட்டாரத்திலுள்ள விடுதிகளில் தேடியதில், விடுதி ஒன்றில் அவன் பிடிபட்டான். நாங்கள் அவனைப் பார்த்தபோது அவனின் பழைய போட்டோவுக்கும் அவனுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை. மீசையை வழித்துவிட்டு, டிராக் பேன்ட்டும் பனியனும் அணிந்திருந்த மதன் எங்களைப் பார்த்ததும் காலில் விழுந்து ‘சார், என்னை மன்னிச்சுருங்க. நான் பண்ணினது தப்புதான்’ என்று அழத் தொடங்கிவிட்டான்” என்றவர், விசாரணையில் மதன் சொன்ன தகவல்கள் சிலவற்றையும் பகிர்ந்துகொண்டார்...

“வேனில் சென்னைக்கு அழைத்துவரும் வழியில் விசாரணையைத் தொடங்கினோம். `பப்ஜி’ பற்றிக் கேட்டால் அவன் முகத்தில் அத்தனை உற்சாகம். ‘சார், கொஞ்சம் நேரம் என் போனைத் தர முடியுமா... பப்ஜி விளையாடிக்கிறேன். ஜெயில்ல போட்ட பிறகு விளையாட முடியாது சார்’ என்று அவன் கேட்டபோது அவனிடமிருந்த பதற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டோம். தொடர்ந்து அவன், ‘சார்... என் மேல பெரிய கேஸ்லாம் போட்டுடாதீங்க, நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை’ என்று வடிவேல் டயலாக்கைக் கூறினான்.

நான் கொஞ்சம் டீசன்ட்டாதான் பேசியிருக்கேன்! - போலீஸாரை அதிரவைத்த யூடியூபர் மதன்

ஆபாச அரட்டை பற்றிக் கேட்டபோது, ‘சார், அதெல்லாம் ஒரு விஷயமா... இன்னும் மோசமா பேசுவோம் சார். எங்க பப்ஜி குரூப்ல கெட்ட வார்த்தை பேசுறதுதான் பேஸிக் ரூலே. நீங்க கேட்டதெல்லாம் கொஞ்சம்தான். அதுவும் நான் கொஞ்சம் டீசன்ட்டாதான் பேசியிருக்கேன். சிங்கிள் ரூம்ல உட்கார்ந்துக்கிட்டு பப்ஜி ஆடும்போது ரொம்ப ரொம்பக் கெட்ட வார்த்தையைச் சொல்லி விளையாடுறவங்களுக்குத் தான் கெத்து அதிகம்’னு அவன் சொன்னதைக் கேட்டபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். மதன், கிருத்திகா நடத்தி வந்த 700 வீடியோக்கள் அடங்கிய இரண்டு யூடியூப் சேனல்களை முடக்கியிருக்கிறோம்’’ என்று நம்மிடம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.

தங்கள் விசாரணையில், மதனுக்கு உதவியாக இருந்த நான்கு யூடியூபர்களை போலீஸார் கண்டறிந்திருக்கிறார்கள். விரைவில் அவர்களிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளது. இதற்கிடையில், மதன் பற்றிய தகவல்களைச் சேகரித்து சைபர் க்ரைம் போலீஸாருக்கு ஆதாரங்களுடன் கொடுத்த ஜெய்சன் சாமுவேலுக்கு மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். அது பற்றியும் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் சலிக்காமல் பப்ஜி கேம் விளையாடிய யூடியூபர் மதன், சிறைக்குள் என்ன செய்யப்போகிறானோ தெரியவில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism