Published:Updated:

`ஒரேஒரு ஆடி கார் தான்; சேனல் முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு!’ -பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா

பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா
பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பேட்டி அளித்த பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், `` யூடியூப் சேனலை தொடங்கிய மதன், அதில் பப்ஜி கேம் விளையாடி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் எந்தச் சொத்துக்களையும் வாங்கவில்லை. எங்களிடம் இரண்டு சொகுசு கார்கள் இருப்பதாக தவறான தகவல்கள் வெளியாகி வருகிறது. சொகுசு கார்கள் என் பெயரிலும் அவரின் பெயரிலும் இல்லை. அதற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஆடி ஏ6 கார் மட்டும்தான் மதன் வைத்திருக்கிறார்.

மதன்
மதன்

நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். சொந்த வீட்டில் கூட குடியிருக்கவில்லை. தினமும் 20 மணி நேரம் யூடியூப் சேனலில் வேலைப்பார்த்து வந்தார். ஒரு நாளைக்கு 4 மணி நேரம்தான் ஓய்வு எடுப்பார். பார்வையாளர்கள், சூப்பர் சார்ட்டிங் மூலம்தான் எங்களுக்கு வருமானம் கிடைத்தது. தற்போது யூடியூப் சேனலை முடக்கம் செய்து விட்டார்கள். என்னுடைய டெபிட் கார்டு, வங்கி கணக்கு, வீட்டின் சாவி எல்லாம் போலீஸாரிடம்தான் இருக்கிறது. அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய வங்கி கணக்கை மதன் பயன்படுத்தியதால்தான் இந்த வழக்கில் என்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நான், 8 மாத கைக்குழந்தையுடன்தான் விசாரணைக்கு சென்றேன். விசாரணையின்போது நான் சொன்னதை போலீஸார் காதுகொடுத்து கேட்கவில்லை. நான் பப்ஜி கேம் விளையாடியதில்லை. மதனுடன் லைவ் சாட்டிங்களில் நான் பேசுவதாக தகவல் வெளியானது. அது, என்னுடைய வாய்ஸ் இல்லை. நான் லைவ்வில் அவருடன் பேசியதில்லை எங்கள் மீது 200-க்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்ததாக சொல்கிறார்கள். அதற்காகத்தான் நான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தேன். இங்கு வந்தபோதுதான் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் மதனை போலீஸார் கைது செய்த தகவல் கிடைத்தது. அவர் மீது எப்படி குண்டாஸ் போட்டார்கள் எனத் தெரியவில்லை. அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். நாங்கள் பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள். எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் யாரும் புகாரளிக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்றவரிடம் நிருபர்கள் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு சில கேள்விகளுக்குப்பதிலளித்த அடுத்தடுத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஓகே என்று கூறியபடி வெளியேறினார்.

நான் கொஞ்சம் டீசன்ட்டாதான் பேசியிருக்கேன்! - போலீஸாரை அதிரவைத்த யூடியூபர் மதன்
யூடியூபர் பப்ஜி மதன், கிருத்திகா
யூடியூபர் பப்ஜி மதன், கிருத்திகா

``மதனின் யூடியூப் சேனல் தற்போதுதான் முடக்கம் செய்யப்பட்டது. அவர் வீடியோக்களில் ஆபாசமாக பேசியிருக்கிறாரே?”

``வீடியோவில் உள்ள வாய்ஸ்களை ஆய்வு செய்து வருகிறோம். 4 பேர்தான் எங்களை சிக்க வைத்திருக்கிறார்கள். அந்த 4 பேரிடமும் நீங்கள் கேள்வி கேட்கவேண்டும். பல வாய்ஸ்கள் சித்தரிக்கப்பட்டவை. மதனை 4 பேர் ட்ரிகர் பண்ணி பேச வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் இந்தக் கேள்வி கேளுங்கள். அந்தவீடியோக்களின் கீழே உள்ள கமெண்ட்ஸ்களைப் பாருங்கள்.”

``ஆடி கார் சொகுசு கார் இல்லையா?”

``நான் சொல்லியதை நீங்கள் கேட்கவில்லையா.... ஆடி ஏ6 கார் மட்டும்தான் எங்களுடையது. நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு முன் எந்த கார் இருந்தாலும் அதை எங்கள் கார் என்று சொல்ல முடியுமா, அந்தக் கார் எங்களுடையது என்று ஆதாரங்கள் சொல்லுங்கள். காரை வாங்க வேண்டும் என்றால் அதற்கான ப்ரூப்களை கொடுத்துதானே வாங்க முடியும்.”

பறிமுதல் செய்யப்பட்ட கார்கள் உங்களுடையதில்லையா என்ற கேள்விக்கும் நீங்கள் மதனின் யூடியூப் சேனலின் அட்மின் இல்லையா என்ற கேள்விகளுக்கு கிருத்திகா பதிலளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கிருத்திகாவிடம் கேட்கப்பட்ட அடுத்தடுத்த கேள்விகளை அவரால் சமாளிக்க முடியாமல் புறப்பட்டுச் சென்றார்.

அடுத்த கட்டுரைக்கு