Published:Updated:

பெங்களூரு:`விரைவில் கவர்னர் பதவி!’ - ஓய்வுபெற்ற நீதிபதியிடம் மோசடி; போலி ஜோதிடர் கைது

போலி ஜோதிடர் யுவராஜ் சுவாமி
போலி ஜோதிடர் யுவராஜ் சுவாமி ( TheHindu )

ஓய்வுபெற்ற நீதிபதியான இந்திரகலா, கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி வில்சன் தோட்டம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரிலுள்ள நாகர்பாவியைச் சேர்ந்த யுவராஜ் சுவாமி (52) என்பவர், தனக்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் பெரும்புள்ளிகளிடம் செல்வாக்கு இருப்பதாகவும், கவர்னர் பதவி வாங்கித் தருவதாகவும் கூறி பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதியிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக, தற்போது போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

பெங்களூரிலுள்ள வில்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரகலா. இவருக்குக் கடந்த 2018-ம் ஆண்டு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான பாப்பையா மூலம் யுவராஜ் சுவாமி அறிமுகமாகியிருக்கிறார்.

க்ரைம்
க்ரைம்

பின்னர், இந்திரகலாவிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகத் தொடங்கிய யுவராஜ். தான் ஒரு பிரபல ஜோதிடர் என்றும், `உங்களுடைய ஜாதகத்தை கணித்ததில் உங்களின் எதிர்காலம் அமோகமாக இருக்கிறது. விரைவில் உங்களுக்காக கவர்னர் பதவி காத்துக்கொண்டிருக்கிறது. எனக்கு மத்திய அரசில் அதிக செல்வாக்கு இருக்கிறது. அதைக்கொண்டு நான் உங்களுக்கு அந்தப் பதவியை வாங்கித் தருகிறேன்’ என்று கூறியிருக்கிறார். யுவராஜின் வார்த்தைகளை நம்பிய இந்திரகலா, அவர் கேட்ட 8.8 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறார்.

இந்தச் சூழலில், யுவராஜிடம் ஏமாற்றப்பட்ட இந்திரகலா, கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி வில்சன் தோட்டம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பின்னர், விசாரணை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்குக் கைமாறியது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யுவராஜ் ஒரு போலி ஜோதிடர் என்றும், அவர் ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு எனப் பல வேலைகளில் ஈடுபட்டு பண மோசடி செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், தன்னை வலதுசாரிக் கட்சியின் உறுப்பினர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு பலரை ஏமாற்றியிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து யுவராஜ் சுவாமி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.1 கோடி ரொக்கப் பணம், ரூ.91 கோடி மதிப்பிலான காசோலைகள், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், ரூ.1.7 கோடி மதிப்பிலான மூன்று சொகுசு கார்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும், இந்திரகலாவை ஏமாற்றியதுபோலப் பலரையும் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்.

யுவராஜ் சுவாமி
யுவராஜ் சுவாமி

போலீஸாரின் தொடர் விசாரணையில் பிரபல நடிகையும், கர்நாடக மாநில முன்னாள் முதல்வரின் மனைவியுமான குட்டி ராதிகா, யுவராஜிடம் பணம் பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து, குட்டி ராதிகாவிடம் போலீஸார் நடத்திய பல மணி நேர விசாரணையில், யுவராஜ், குமாரசாமி குடும்பத்தினருக்கு நன்கு பழக்கப்பட்டவர் என்றும், குட்டி ராதிகா, யுவராஜ் சுவாமி தயாரிக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்காக அவரிடம் முன்பணமாக ரூ.75 லட்சம் பெற்றிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் கர்நாடகா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் சிலர் தொடர்புகொண்டிருப்பதால், இது குறித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிடம் கேள்வியெழுப்பியபோது, அவர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு