Published:Updated:

cyclone tauktae: 4 நாட்களாக குமரியை மிரட்டும் கன மழை - வீடு இடிந்து 2-வயது குழந்தை பலி!

தாக்டே புயல் காரணமாக கன்னியாகுமரியில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தாக்டே புயல் அரபிக்கடலில் உருவான காரணத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக இரவுபகல் பாராமல் மழை பெய்து வருகிறது. கனமழையால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிபாறை அணை 43.13 அடியைத் தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைக்கு 2,485 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், வினாடிக்கு 4,245 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிதறால், திக்குறிச்சி, குழித்துறை, ஞாறாம்விளை, அஞ்சாலிகடவு, வைக்கலூர் போன்ற பகுதிகளில் சுமார் எட்டாயிரம் ஏக்கர் வாழைகள், 200 ஏக்கர் ரப்பர் மரங்கள் தண்ணீரில் மூழ்கின. வைக்கலூர் பகுதியில் வீடுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மழை வெள்ளம் நீடித்தால் அந்த பகுதியில் உள்ள 25-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆற்று நீரில் அடித்து செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திக்குறிச்சி - சிதறால் சாலை, வள்ளக்கடவு பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சாலையில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

25-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. சில வீடுகளில் வெள்ளம் புகாமல் இருக்க மணல் மூட்டைகளில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழையால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

குமரியை மிரட்டும் மழை
குமரியை மிரட்டும் மழை

தேங்காய்பட்டணம் அருகே இராமன்துறை பகுதியை சேர்ந்தவர் டயானா பெக்மீர் (42). மீன்பிடி தொழில் செய்யும் இவருக்கு கவிதா என்ற மனைவியும், மைக்கில் ராஜா (6), ஆரோக்கிய ரக்ஷன் (5), மற்றும் ரெஜினா என்ற 2 வயது பெண் குழந்தையும் இருந்தனர். இவர்கள் வசிக்கும் வீடு கடற்கரையை ஒட்டி உள்ளது. ஆஸ்பெஸ்ட்டாஸ் ஷீட்டுகளால் மேற்கூரை போடப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் இரவு டயானா பெக்மீர் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது மழையுடன் திடீரென பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது. பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் ஓடிச் சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டுள்ளனர். இந்த விபத்தில் அவர்களது 2 வயது பெண் குழந்தை ரெஜினாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் அதிகமாக வெளியேறியுள்ளது.

வீடு இடிந்துவிழுந்ததில் இறந்த குழந்தை ரெஜினா
வீடு இடிந்துவிழுந்ததில் இறந்த குழந்தை ரெஜினா

உடனே குழந்தையை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த ரெஜினாவின் தாயார் கவிதா மற்றும் அவரது இரண்டாவது மகன் ஆரோக்கிய ரக்ஷன் ஆகியோர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு