Published:Updated:

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் 16 ஸ்பாட்கள்! நெடுஞ்சாலைத்துறையின் கவனத்துக்கு

விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் 16 ஸ்பாட்கள்!  நெடுஞ்சாலைத்துறையின் கவனத்துக்கு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தை ஏற்படுத்தும் 16 ஸ்பாட்கள்! நெடுஞ்சாலைத்துறையின் கவனத்துக்கு

.

ந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் சாலைவிபத்தில் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இவர்களில் ஒன்றரை லட்சம் பேர் இறக்கின்றனர். தமிழகத்தில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர், சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களில் 20 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்த விபத்துகளில் 28.4 சதவிகிதம், தேசிய நெடுஞ்சாலைகளிலேயே ஏற்படுகின்றன" என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம், அதிக வேகம், மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல், டிரைவரின் கவனக்குறைவு போன்றவைதாம் என்று தெரிய வந்துள்ளது. எனினும், இந்தக் காரணங்கள் மட்டுமே விபத்துகளை ஏற்படுத்துகின்றனவா என்றால், இல்லை என்பதுதான் பதில். "தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அமைந்திருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு அரசு அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள அணுகு சாலைகள்தான் பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணம்" என்கிறார்கள் விவரம் அறிந்த நெடுஞ்சாலைத்துறை வல்லுநர்கள்.

நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் குறித்து, தமிழர் தேசிய முன்னணியின் மாநில இளைஞரணி அமைப்பாளர் தமிழ் வேங்கையிடம் பேசினோம், "சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் விழுப்புரம் மாவட்டத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையானது (என்.எச்.45), ஓங்கூர் கிராமத்தில் தொடங்கி ஆசனூர் வரை சுமார் 110 கிலோமீட்டர் தொலைவுக்கு விழுப்புரம் மாவட்டம் வழியாகவே செல்கிறது. இந்தச் சாலைகளில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் நான்காயிரம் பேர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். அதாவது, மொத்த விபத்தில் 5 சதவிகித விபத்து இந்த மாவட்டத்தில் நடந்துள்ளது. முறையற்ற அணுகுசாலைகளால், வாகனங்களைக் கண்ட இடங்களில் நிறுத்துவதும், அந்தச் சாலைகள் ஒழுங்கற்ற முறையில் பிரதான சாலையை வந்தடைவது அல்லது பிரிவதால், அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன..


 

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சாலையோர ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் அரசிடமிருந்து முறையான அனுமதியைப் பெற்றபிறகே அணுகுச் சாலைகளை அமைக்க வேண்டும். அந்தச் சாலையில் வந்து செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுக்கு வரி செலுத்த வேண்டும். இதன்படி பார்த்தால், பல லட்சம் ரூபாய், அந்த ஓட்டல்கள், வணிக வளாகங்களின் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிவரும், அதுமட்டுமல்லாமல், தார்ச் சாலைகளில் மழைநீர் தேங்காமலிருக்க கான்கிரீட் கால்வாய், வாகனங்கள் வந்துசெல்வதற்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை பலகைகள் போன்றவற்றை சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் சொந்தச் செலவில் அமைக்க வேண்டும் என்பது விதி.

இதைக் கருத்தில் கொண்டு, அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியைக் கவனித்து விடுகிறார்கள். அதிகாரிகளுக்குக் கோடிக்கணக்கில் லஞ்சம் கிடைப்பதால், அவர்கள் அணுகுச் சாலைகளுக்கான அனுமதியைப் பற்றி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் சாலையோரங்களில் வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டுவது, சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டும்போது ஒரு சில மரங்களுக்கு மட்டுமே அனுமதி வாங்கிக் கொண்டு, அப்பகுதியில் உள்ளள மொத்த மரங்களையும் வெட்டுவது போன்ற செயல்களில் அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலையைப் பராமரிக்கக்கூடிய டோல்கேட்டுகளும் வாகன ஓட்டிகளிடம் பணத்தைக் கரப்பதை மட்டுமே தங்களின் வேலையாகக் கருதுகிறார்கள். நெடுஞ்சாலை அமைச்சகமானது, ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் வகையிலான விபத்து ஏற்படும் ஸ்பாட்கள் 700-ஐ, அகற்ற ரூ 600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம், ஜக்கம்பேட்டை, அரசூர், எல்லிசத்திரம், ஜானகிபுரம், கூட்டேரிப்பட்டு என 16 ஸ்பாட்கள் உள்ளன. அவற்றை அகற்ற இதுவரை நடவடிக்கைகள் எடுக்காததால், ஆறு மாதத்திற்க்கு முன் முண்டியம்பாக்கத்தில் நடந்த கோர விபத்து ஒன்றில், ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர். விபத்துகளைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள். உண்மையில், விபத்துகளுக்குக் காரணமாக உள்ள அதிகாரிகள், ஓட்டல் மற்றும் வணிக வளாக உரிமையாளர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

அணுகுச் சாலைக்கு அனுமதி பெறாமல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஏராளமான ஹோட்டல்களும், வணிக வளாகங்களும் உள்ளன. விழுப்புரத்தில் உள்ள ஓட்டல்களுக்கு வரும் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களை, சாலையின் ஓரத்திலேயே நிறுத்துவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி, ஹோட்டலுக்குச் செல்லும் வழியை அடைத்தார்கள். ஆனால், ஓட்டல் உரிமையாளர், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநரைச் சந்தித்து தங்கள் ஓட்டலுக்கான வழியைத் திறந்து கொண்டார். வழி மீண்டும் திறக்கப்பட்டது. விழுப்புரத்தில் மட்டுமே இந்த நிலையெனில், தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளின் லட்சணம் எப்படியிருக்கும்" என்று தெரிவித்து கிறுகிறுக்க வைத்தார்.

.
நெடுஞ்சாலைத்துறையினரின் நோட்டீஸ் குறித்து சாரா ஓட்டல் உரிமையாளர் ராயரிடம் பேசினோம், "அணுகுச் சாலைக்கு அனுமதி இல்லை என்று, ஓட்டலின் வாசலில் பொக்லைன் வைத்து நெடுஞ்சாலைத் துறையினர் பள்ளம் வெட்டியது உண்மைதான். நாங்கள் அனுமதி கேட்டிருக்கிறோம். அதற்குண்டான பணத்தையும் வரைவோலையாக எடுத்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறோம். அதற்கான ஆதாரத்தையும் அவர்களிடம் கொடுத்தோம். அதைப் பார்த்துவிட்டு, அவர்களே வழியைத் திறந்துவிட்டார்கள். அவ்வளவுதான்..." என்றார்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து அந்தத் துறையின் திட்ட இயக்குநர் பீமா சிம்ஹா, "ஓட்டல் சாரா விவகாரம் விசாரணையில் உள்ளது. பழைய ஓட்டல்கள் வேண்டுமானால் அப்படியிருக்கலாம். புதிய ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அணுகுச் சாலைக்கான அனுமதியோடுதான் கட்டப்படுகின்றன. முறையற்ற அணுகுச்சாலைகளால் பெரும் விபத்து ஏற்படுவதாகத்  தெரிவிப்பது பொய்யான குற்றச்சாட்டு" என்றார்.