Published:Updated:

சிறுவன் கொலை வழக்கு: பூவரசிக்கு ஆயுள் தண்டனை!

சென்னை, பிப்.15,2011

சிறுவன் கொலை வழக்கு: பூவரசிக்கு ஆயுள் தண்டனை!

சிறுவன் ஆதித்யா கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ##~~##

சென்னையைச் சேர்ந்த காப்பீட்டு நிறுவன அதிகாரி ஜெயக்குமார். இவரது மகன் ஆதித்யா (வயது 4). ஜெயக்குமாருக்கும், அவருடன் பணியாற்றிய பூவரசி என்ற இளம் பெண்ணுக்கும் இடையே தவறான நட்பு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதித்யாவின் உடல், நாகை அருகே சூட்கேசில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை எஸ்பிளனேட் போலீஸார் விசாரித்தனர்.

ஆதித்யா கடைசியாக பூவரசியுடன் காணப்பட்டார் என்பதை அடுத்து, அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன்னை ஜெயக்குமார் திருமணம் செய்ய மறுத்ததாலேயே அவரது மகனைக் கொன்றதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு சென்னை 6-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

200 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 50 பேர் அரசு தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். பூவரசி சார்பில் 6 பேர் சாட்சி அளித்தனர்.

ஏற்கெனவே அரசுத் தரப்பில் வழக்கறிஞர் எம்.பிரபாவதி, வழக்கின் இறுதி விவாதத்தை முடித்திருந்தார். பூவரசி தரப்பில் வக்கீல் ஜே.சி.வசந்தகுமார் வாதிட்டார். இரு தரப்பு வாதமும் முடிந்தது.

இந்நிலையில், பூவரசி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் குற்றவாளி என்று சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி சேதுமாதவன் இன்று தீர்ப்பளித்தார்.

பூவரசிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி,  ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

இந்த ஒரு லட்ச ரூபாயில் 90 ஆயிரம் ரூபாயை சிறுவன் ஆதித்யாவின் தாயார் ஆனந்திக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.