Published:Updated:

14 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது... அன்புச்செழியனின் கந்துவட்டி ஃப்ளாஷ்பேக்!

14 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது... அன்புச்செழியனின் கந்துவட்டி ஃப்ளாஷ்பேக்!
14 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது... அன்புச்செழியனின் கந்துவட்டி ஃப்ளாஷ்பேக்!

கந்துவட்டிக் கொடுமையின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட அசோக்குமாரின் மரணம் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இசக்கிமுத்து என்பவரும் அவரது குடும்பத்தாரும் செய்துகொண்ட தற்கொலையில் இருந்தே இன்று யாரும் மீளாத நிலையில், இந்தத் தற்கொலைச் சம்பவம் மேலும் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அசோக்குமார் அவர்களின் தற்கொலைச் சம்பவத்துடன் நெருங்கியத் தொடர்புடையவர் என்று கூறப்படும் அன்புச்செழியன், கடந்த 2003-ம் ஆண்டு, தயாரிப்பாளர் ஜி.வி.,யின் தற்கொலையிலும் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்படடார். ஜி.வி., தற்கொலை தொடர்பாக 2003-ம் ஆண்டு மே மாதம் அவர் ஜுனியர் விகடனிற்கு அளித்த பேட்டி:

"என்னைப் பற்றி உங்கள் காதுக்கு வந்த விவரங்கள் அத்தனையும் வேடிக்கையானவை. விபரீதமானவை. எப்படி இந்த மாதிரியெல்லாம் துளிகூட அடிப்படையில்லாத வதந்திகள் உலவ ஆரம்பித்திருக்கின்றன என்று புரியவில்லை.

முதலாவதாக, நான்  வட்டிக்குக் கடன் கொடுத்ததே இல்லை. நான் ஒரு சினிமா விநியோகஸ்தர். கடந்த பத்து வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். இதன்மூலம் யாராவது எனக்குப் பணம் பாக்கித் தரவேண்டி இருக்கலாம். அவ்வளவுதான். அதற்காக அடியாள் வைத்து மிரட்டுகிறேன் என்றெல்லாம் குற்றம் சாட்டுவது அபாண்டம். மறைந்து வாழும் நிழல் தாதா போல என்னைச் சித்தரிப்பதும் கொடுமையாக இருக்கிறது. நான் இன்றுவரை வெளிப்படையாக நடமாடிக்கொண்டுதான் இருக்கிறேன். சினிமாஉலகப் புள்ளிகளிடம் நல்லுறவு வைத்திருக்கிறேன்.
 
இதெல்லாம் யாரோ சில வட இந்திய மார்வாடிகள் கிளப்பிவிடும் புரளியோ என்று கூடச் சந்தேகமாக இருக்கின்றது. சினிமா தொழிலில் இருப்பவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கும் அவர்கள், தங்கள் தொழிலுக்குப் போட்டியாக யாரும் வரக்கூடாது என்பதற்காகவே இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது. தெரியாமல்தான் கேட்கிறேன்... தேவையில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு மார்வாடிகள் கடன் கொடுத்ததால் அவர்கள் பெயர் 'பைனான்சியர் ', அதுவே நம்மூர்க்காரர்கள் கொடுத்தால் அவர்களுக்குப்பெயர் கந்துவட்டிக்காரர்களா?" என்று கேட்ட அன்புச்செழியன், அடுத்து ஜி.வெங்கடேஸ்வரன்  விஷயத்திற்கு வந்தார்.

“ஜி.வி சார் 'தமிழன்' படம் எடுக்க ஆரம்பித்த சமயத்தில்தான் எனக்கு அவரோடு பழக்கம் ஏற்பட்டது. மதுரை ஏரியாவிற்கான விநியோக உரிமையை நான் பெற்றுக்கொண்டேன். அதோடு தியேட்டர்காரர்களிடம் ஒரு பெருந்தொகையை வசூலித்து அதையும் ஜி.வி சாரிடம் கொடுத்தேன். ஆனால், அந்தப் படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் வந்தது. அதைத் தொடர்ந்து நஷ்டத்தை ஈடுகட்டும்படி ஜி.வி. சாரிடம் நேரடியாகக் கேட்டேன்.


அடுத்து 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' படத்தை எடுப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கிற லாபத்தில் 'தமிழன் ' நஷ்டத்தை ஈடுகட்டுவதாகவும் ஜி.வி சார் சொன்னார். அவர் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருந்தேன். ஆனால், அதிலும் எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்பட்டது. கடைசியாக, 'சொக்கத்தங்கம்' படத்தை நம்பியிருந்தோம். அதில் ஓரளவுக்குத்தான் பணம் கிடைத்தது. அது எங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுவதாக இல்லை. இதைத் தொடர்ந்துதான் ஜி.வி சாரிடம் பணம் கேட்டு வற்புறுத்த ஆரம்பிதேன். இந்தச் சூழ்நிலையில் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அந்தப் பணத்தை வாங்கிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஜி.வி சாரிடம் இருந்து சில செக்குகளையும் வாங்கிக்கொடுத்தார். அதில் ஒன்றிரண்டு செக்குகளை மட்டுமே பணமாக்க முடிந்தது. மற்றவை திரும்பி வந்துவிட்டன.
 
எனக்குத் திரும்ப வரவேண்டிய தொகையும் ரொம்ப அதிகமில்லை. ஜி.வி சாரின் அலுவலகத்தை நடத்துவதற்கான ஒரு மாத செலவுதான் என் தொகை. ஜூன் மாதம் இறுதிக்குள் அதை செட்டில் செய்வதாகக்  கடைசி வாக்குறுதி கொடுத்தார் ஜி.வி சார். அதற்குள் அவர் இப்படியொரு முடிவைத் தேடிக்கொண்டு விட்டார். இறுதி நாளன்று நான் அவருக்கு போன் செய்தேன் என்றும், இறுதி எச்சரிக்கை விடுத்து மிரட்டினேன் என்றும் உங்கள் காதுக்கு வந்திருக்கும் குற்றச்சாட்டில் துளிகூட உண்மை இல்லை. அப்படி அந்தக் கடைசி நாள் அன்று நான் போன் செய்து பேசி இருந்தால் அதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாதா என்ன?

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 
அதுமட்டுமல்ல.. நான் கந்துவட்டிக்குக் கடன் கொடுத்தேன், கொடுமைப்படுத்தினேன் என்று ஜி.வி சார் குடும்பத்தில் இருந்து யாரையாவது கைநீட்டி குற்றம்சாட்டிடச் சொல்லுங்கள் பார்ப்போம். இந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு துக்கம் உண்டோ, அவ்வளவு துக்கம் எனக்கும் உண்டு. நான் ஜி.வி சார்  அலுவலகத்துக்குப் போயிருந்தபோதெல்லாம், கத்தை கத்தையாக செக்குகளில் கையெழுத்து போட்டுக்கொண்டே இருப்பார். 'யாருக்கு, எதற்கு' என்று நான் கேட்டால், ஒரு புன்சிரிப்பை  மட்டுமே பதிலாகத் தருவார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பல்வேறு தரப்பினருடன் அவர் எத்தனையோ கோடிகளுக்குப் பணப்போக்குவரத்து  வைத்திருந்தார். நான் கடன் கொடுத்துவிட்டு பயங்கரமாக மிரட்டியது உண்மையானால், அவராலேயே அந்தத் தொகையை செட்டில் செய்திருக்க முடியும். அவருடைய சகோதரர்கள் நல்ல வசதியுடன்தான் இருக்கிறார்கள் . அவர்களிடம் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். நஷ்டப்பட்ட சொற்பத் தொகையை அவரிடமிருந்து வாங்க முடியாமல் நான் தவித்துக்கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை!", என்று அப்போது  கூறினார். 

ஆனால், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக அன்று உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் இன்றோ, தற்கொலை செய்துகொண்ட அசோக் குமாரின் கடிதத்தில் 'கந்துவட்டி' அன்புச்செழியனின் கொடுமை பற்றித் தெளிவாகக் எழுதிவைத்திருக்கிறார். இம்முறையாவது அன்புச்செழியன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதனை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.