Published:Updated:

ஜெயலலிதா மரண விசாரணையின் கடைசி சாட்சி!  - என்ன சொல்லப் போகிறார் விவேக் ஜெயராமன்? 

ஜெயலலிதா மரண விசாரணையின் கடைசி சாட்சி!  - என்ன சொல்லப் போகிறார் விவேக் ஜெயராமன்? 
ஜெயலலிதா மரண விசாரணையின் கடைசி சாட்சி!  - என்ன சொல்லப் போகிறார் விவேக் ஜெயராமன்? 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறு விவேக் ஜெயராமனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். ' அப்போலோ மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பாக, போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்ற விவரம் விவேக்குத் தெரியும். இவ்வளவு தாமதமாக அவரை விசாரணைக்கு அழைத்திருப்பதன் மர்மம்தான் புரியவில்லை' என்கின்றனர் மன்னார்குடி குடும்பத்தினர். 

முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்தில் சர்ச்சை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணைக் கமிஷனை அமைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னை, எழிலக வளாகத்தில் செயல்படும் விசாரணை ஆணையத்தின் முன், அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதா அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபக், தீபா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக இவர்கள் அளித்த வாக்குமூலங்கள் அனைத்தும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை இரண்டு சூட்கேஸ்களில் கொண்டு வந்து தாக்கல் செய்தது மருத்துவமனை நிர்வாகம். இதில், சசிகலாவையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பப்பட்டது. 

இதற்குப் பதில் அளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், ' விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் அனைவரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்'எனக் கோரிக்கை வைத்தனர். முதலில், இந்தக் கோரிக்கையை நிராகரித்த விசாரணை ஆணையம், பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த ஒப்புதல் அளித்தது. இதற்காக, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையையும் 15 நாள்களுக்கு ஆணையம் நிறுத்தி வைத்தது. இதன்பிறகும், ஆணையத்தின் முன்பு சசிகலா தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்தது. அதில், ' ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்த 22 பேரில் சாட்சியங்களையும் அவர்கள் அளித்த ஆவணங்களையும் அளிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் கிடைத்த 10 நாள்களில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்படும்' எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், விசாரணை ஆணையத்தின் கடைசி சாட்சியாக அழைக்கப்பட்டிருக்கிறார் இளவரசியின் மகனும் ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓவுமான விவேக் ஜெயராமன். வரும் 13-ம் தேதி ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராக இருக்கிறார். 

" ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை தொடங்கிய காலத்திலேயே, முதல் சாட்சியாக விவேக்கை அழைத்திருக்க வேண்டும். மிகவும் காலதாமதமாகத்தான் அழைத்துள்ளனர். குறிப்பாக, அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக கார்டனில் என்ன நடந்தது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருக்கிறது. அந்தநேரத்தில், கார்டனில் இருந்தவர்களில் முக்கியமானவர் விவேக். கார்டன் முகவரியில்தான் அவருக்கு ரேஷன் கார்டும் இருக்கிறது. அப்போலோவுக்கு ஜெயலலிதாவைக் கொண்டு சென்ற வாகனத்திலும் அவர் இருந்தார். எனவே, கார்டனில் ஜெயலலிதா மயக்கமடைவதற்கு முன்னால் நடந்த விவரங்களை அவர் அறிவார். ஆணையத்தில் சாட்சி அளித்த மற்றவர்களைப் போல விவேக்கிடம் இருந்து அவ்வளவு எளிதில் தகவல்களை வாங்கிவிட முடியுமா என்ற சந்தேகமும் ஆளும்கட்சிக்கு இருக்கிறது. காரணம், குடும்ப உறுப்பினர்களை அவர் எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை" என விவரித்த மன்னார்குடி குடும்பத்துக்கு வேண்டிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

" எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைந்த பிறகு, அவருடன் எந்தவித மோதல் போக்கையும் விவேக் கடைபிடிக்கவில்லை. தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்பான அனைத்து செய்திகளும் ஜெயா டி.வியில் வெளியானது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்துக்குப் பிறகு நிலைமைகள் மாறிவிட்டன. குக்கர் சின்னத்தில் தினகரன் போட்டியிட்டபோது, விவேக்கின் செயல்பாடுகளில் மாற்றத்தை உணரத் தொடங்கினர் குடும்ப உறவுகள். ' தேர்தல் செலவுக்குக்கூட அந்தப் பையன் பணம் தரவில்லை. எதைக் கேட்டாலும் சின்னம்மாவிடம் கேட்டுச் சொல்கிறேன் எனச் சொல்கிறார். அவரால் நிர்வாகத்தை சரிவரக் கையாளத் தெரியவில்லை' என சசிகலாவை நேரில் சந்தித்துப் புகார் கூறினார் தினகரன். கூடவே, விவேக் அளித்த பேட்டி தொடர்பான செய்திகளையும் சசிகலாவிடம் காட்டியிருக்கிறார். இதன்பிறகு விவேக்கை அழைத்துக் கடிந்து கொண்டார் சசிகலா. இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெயா டி.வி நிர்வாகத்தில் விவேக் தலையிடுவதில்லை. கடந்த 15 நாட்களாக அவர் ஜெயா டி.வி அலுவலகத்துக்கும் செல்வதில்லை. குடும்ப உறவுகளிடம் இருந்து தனித்து இருக்கும் அளவுக்கு தனக்கான சூழல்களை மாற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருப்பதுதான் உற்றுக் கவனிக்க வைக்கிறது" என்றார் விரிவாக. 

இதுகுறித்து விளக்கம் கூறும் ஆளும்கட்சியின் முக்கிய பிரமுகர்களோ, " விவேக்கை அழைத்து விசாரிப்பது என்பது முன்பே எடுத்த முடிவு. காலவரிசைப்படிதான் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. குடும்ப சண்டைக்கும் ஆணையத்தின் சம்மனுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தற்போது சசிகலா குடும்பத்துடன் ஒட்டுமொத்தமாக முரண்பட்டிருக்கிறார் விவேக். அவர் மூலமாக சில தகவல்கள் கிடைக்கலாம் என நினைக்கிறோம். அவர் கூறும் தகவல்களால் ஆணையத்தின் விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கலாம். சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறது சசிகலா தரப்பு. விவேக்கின் வாக்குமூலத்தையும் அவர்கள் குறுக்கு விசாரைண செய்ய வாய்ப்பு இருக்கிறது. தினகரன் தரப்பு வழக்கறிஞர்களின் குறுக்கு விசாரணையை விவேக் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதும் முக்கியமானது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட மனக் கசப்புகளின் மூலம், ஜெயலலிதா மரணம் தொடர்பான சில மர்மங்கள் அகலவும் வாய்ப்பிருக்கிறது" என்றார் விரிவாக. 
 

அடுத்த கட்டுரைக்கு