Published:Updated:

Worthless, Helpless, Hopeless... அதிகரிக்கும் டீன் ஏஜ் தற்கொலைகள்..!

Worthless, Helpless, Hopeless... அதிகரிக்கும் டீன் ஏஜ் தற்கொலைகள்..!
Worthless, Helpless, Hopeless... அதிகரிக்கும் டீன் ஏஜ் தற்கொலைகள்..!

டீக்கடையில் பேப்பரை அலசுபவர்கள் முதல் ஹெவி டிராஃபிக்கின் இடையிலும் குறுஞ்செய்தி வாசிப்பவர்கள் வரை அனைவருக்கும் `தற்கொலை' என்பது பற்றி வெவ்வேறு கோணங்கள். முதியவர்கள்/விவசாயிகள் தற்கொலை என்றால் `குடும்பப் பிரச்னையா இருக்கும்பா' என்ற மனக்குரல், இளைஞர்கள் தற்கொலை என்றால் `கண்டிப்பா காதல் பிரச்னையாகத்தான் இருக்கும்' வகையான கிசுகிசு, திருமணமான பெண் தற்கொலை என்றால், `காலம் ரொம்ப மாறிப்போச்சு, நிச்சயமா இது கள்ளக்காதல் தகராறுதான்' என்ற வாதம் என ஒவ்வொரு தற்கொலைக்கும் ஒவ்வொரு திரைக்கதை. தனக்கென்று வரும் வரை எல்லாமே சுலபம்தான், சுவாரஸ்யம்தான். நன்றாகப் பேச கற்றுக்கொண்ட நாம், பேசாமல் சிந்திக்கும் நாள் வரும் வரை இவை அனைத்தும் மற்றவர்களின் பிரச்னையே!

இளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் காரணங்களைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் மனநல மருத்துவர், காவல்துறை அதிகாரி மற்றும் பேராசிரியர் ஆகியோரை அணுகினோம்.

ஆசிரியர் தண்டித்ததால் தற்கொலை, நண்பர்கள் பேசாததால் தற்கொலை, காவல் அதிகாரி அவமானப்படுத்தியதால் தற்கொலை என வெவ்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்குக் காரணம் பெற்றோர்களா, ஆசிரியர்களா இல்லை சமூகமா என்ற பல கேள்விகளுடன் மனநல மருத்துவர் சிவசைலத்துடன் முதலில் உரையாடினோம்.

``13 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள்?''

``பொதுவாக 13-லிருந்து 20 வயதுக்குட்பட்ட வளர் இளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ள எளிதில் முடிவெடுத்துவிடுகிறார்கள். உயிரியல்ரீதியாக, இந்தப் பருவத்தை சார்ந்தவர்களுக்கு மூளையின் மிக முக்கியமான பகுதி prefrontal cortex-ன் வளர்ச்சி குறைவாக இருக்கும். இதனால் அவர்களுக்கு எது சரி, எது தவறு என யோசிக்கும் திறன் சற்று மங்கியிருக்கும். கோபம், ஆவேசம், பயம் போன்றவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் குறைவாக இருக்கும். இந்தக் காரணத்தினால்தான் மிகவும் எளிதாக தவறான முடிவெடுப்பவர்களாக இருக்கிறார்கள். மனநல மருத்துவர்கள் தற்கொலையை `Disorder' அதாவது `ஒருவிதமான மனக்கோளாறு' என்போம். உளவியலாளர்கள், இதை `உளவியல் சிக்கல்' என்பார்கள். சுற்றுச்சூழலால் எடுக்கப்படும் முடிவு என்று சமூகவியலாளர்கள் கூறுவார்கள். இந்த மூன்று கோணங்களிலும் ஆராய்ந்து பார்க்கலாம்"

``எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் 10 வருடத்துக்கு முன்பு காதல் தோல்வியினால் தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்கள்தான் அதிகம். ஆனால், இப்போது பெற்றோர் திட்டினால், ஆசிரியர்கள் தண்டித்தாலே தற்கொலை செய்துகொள்கிறார்களே! இதை எப்படி உளவியல்ரீதியாகப் பார்க்கிறீர்கள்?''

``ஒரு விஷயத்தைப் பார்த்துக் கத்துகிறதுதான் உளவியல். ஒவ்வொரு வீட்டுலயும் வளர்க்கிற விதம் மாறுபடுது. அந்தக் காலத்துல நமக்கு ஒரு விஷயம் வேணும்னா அதுக்கான மெனக்கெடல் நிறைய இருக்கும். ஒரு சின்ன சாக்லேட் வாங்கணும்னாலே 1 கி.மி தூரம் நடப்போம். ஆனா, இப்போ இருக்கிற நிலைமை அப்படியல்ல. நினைப்பது அனைத்தும் அடுத்த நொடியே கையில் இருக்கும் அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டன. தொழில்நுட்பம் அவ்வளவு வேகமா வளர்ந்து யோசிப்பதுக்கு ஓய்வு கொடுத்தாச்சு. இதனால் தோல்விகளை ஏற்கும் மனப்பான்மை பலருக்கு இல்லை. தப்புப் பண்ணா தண்டனை கிடைக்கும்னு பயந்துட்டு இருந்த காலம் போய், இப்போல்லாம் தப்புப் பண்ணா அதுக்கான தண்டனையை அவமானமா பார்க்கிறதால தவறான முடிவை சிலர் எடுக்கிறார்கள்."

``எப்படிப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள் தற்கொலை முயற்சியில் அதிகம் ஈடுபடுவார்கள்?''

``தற்கொலைகளில் மூன்று பிரிவுகள் உள்ளன. `Worthless, Helpless, Hopeless' அதாவது சிலர், தான் எதுக்கும் லாயிக்கு இல்லை என யோசிக்கும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். அவர்கள் Worthless வகையில் சேர்வார்கள். தனிமையாக இருப்பதாக நினைத்துக்கொண்டு, உதவிக்கு யாரும் இல்லை என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள் சிலர். இவர்கள் Helpless வகையைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது Hopeless. இந்த வகையைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கை, சமூகம் போன்றவற்றின் மீது எந்த நம்பிக்கையும் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வார்கள். இந்த மூன்று மனநிலையில் ஏதேனும் ஒன்றினால் பாதிக்கப்பட்டிருந்தால்கூட, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு அதிக வாய்ப்புண்டு. முன்பெல்லாம், `தற்கொலை என்பது கோழைத்தனம்' என்பார்கள். ஆனால் இப்போது, ஆத்திரத்தாலும் பழிவாங்குதலுக்காகவும் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.''

``சிலர் `நான் தற்கொலை செஞ்சுபேன்னு எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பவன், நிச்சயமா செய்துகொள்ள மாட்டான்' எனச் சொல்வார்களே, இதைப் பற்றிய உங்கள் கருத்து?''

``இந்தக் கருத்தை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். சதா தற்கொலை பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயமா பாதிக்கப்பட்டவர்கள்தான். இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களுடன் நிறைய உரையாடல்கள் தேவை. இவர்கள் தற்கொலை பண்ணிப்பாங்க, இவர்கள் பண்ணிக்க மாட்டாங்க என நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அதிகப்படியான பதற்றம், பயம், கோபம், பொறுமையின்மை போன்ற செயல்பாடுகள் மூலம் ஓரளவுக்கு இவர்கள் தற்கொலைக்குள்ளாவார்கள் எனக் கணிக்க முடியுமே தவிர, நிச்சயம் தற்கொலை பண்ணிப்பாங்கனு யாராலும் சொல்லவே முடியாது."

``திரைப்படங்களில் தற்கொலை செய்வதுபோல் காட்சிகள் அமைப்பதால் ஏதேனும் பாதிப்புகள் இருக்கின்றனவா?''

``தற்கொலைக்கான சூழ்நிலையையும், தற்கொலைகளை எவ்வாறு செய்துகொள்ளலாம் என்பதையும் திரைப்படங்கள் மூலம்தான் பலர் தெரிந்துகொள்கிறார்கள். Stalking பிரச்னையில் உள்ளவர்கள், கேலி, கிண்டல், நையாண்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், காதல் தோல்வியால் தீயவழிக்குச் செல்லும் இளைஞர்கள், அவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் இதுபோன்ற காட்சிகளைப் பார்ப்பதால், ஏற்கெனவே மனமுடைந்திருக்கும் இளைஞர்கள் தற்கொலைக்கும், கொலைசெய்வதற்கும், பழிவாங்குவதற்கும் தள்ளப்படுகிறார்கள். திரைப்படங்களை பொழுதுபோக்குக்காகவும், நல்விஷயங்களை மட்டும் எடுத்துகொள்வதற்காகவும் பார்ப்பவர்களின் இளம் வயதினரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.''

``பெற்றோர் திட்டினாலும், ஆசிரியர் கண்டித்தாலும் தற்கொலை செய்துகொள்கிறார்களே. இந்த நிலை நீடித்தால், பெற்றோர் மற்றும் ஆசிரியர் தங்களின் கருத்தைச் சொல்லவோ, தவறு செய்தால் கண்டிக்கவோ முடியாத நிலை ஏற்படுமே. இதை எவ்வாறு சரிசெய்வது?''

``பெற்றோர், ஆசிரியர் இருவரும் மாணவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தவறு செய்தால் முடிந்தவரை நட்புடன் பழகி, அன்புடன் பேசி புரியவைக்க வேண்டும். பிரச்னை என்று ஒரு மாணவன் சொல்ல வந்தால், அதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அவர்களின் எந்த ஒரு சொல்லையும் செயலையும் அலட்சியப்படுத்தக் கூடாது. பயமின்றி கூச்சமின்றி எந்த விஷயத்தையும் பெற்றோரிடமோ ஆசிரியரிடமோ ஒரு மாணவன் பகிர்ந்துகொள்கிறான் என்றால், அவன் ஒருபோதும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட மாட்டான்".

`` `பேரன்ட்டிங் (Parenting)' முறை எவ்வாறு இருக்க வேண்டும்?''

``பெற்றோர்களின் வளர்ப்புமுறை, குழந்தைகளின் பிரச்னைகளைத் தைரியமாக அவர்களிடம் பகிரும்படியாக இருக்க வேண்டும். நட்பு அதே சமயம் கண்டிப்பு கலந்த உரையாடல்களாக இருக்க வேண்டும். பொதுவாக Parenting முறையை Authority , Sub - Missive மற்றும் Friendly என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மிகவும் கண்டிப்புடன், ஹிட்லர் போல ரூல்ஸ் போட்டு, குழந்தைகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் Authority முறையைக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களின் குழந்தைகள் தவறான முடிவெடுப்பதற்கு அதிகம் வாய்ப்புண்டு. கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து, கஷ்டம் என்பதையே அறியாமல் சிலர், தங்களின் குழந்தைகளை வளர்ப்பார்கள். இவர்கள் Sub - Missive பேரன்ட்டிங் வகையைச் சார்ந்தவர்கள். இவர்களின் குழந்தைகள்தான் தண்டனையை அவமானமாக நினைக்கும் பண்பை வளர்த்துக்கொள்ளும். இதுவும் தவறான வளர்ப்பு முறையே.

Friendly வளர்ப்புமுறைதான் சரியானது. முதலில் பெற்றோர் தங்களின் வாழ்க்கைமுறைகளைக் பகிர்ந்து, அவர்களிடம் நட்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்றாட வாழ்வில் நடப்பதை பெற்றோர் பகிர்வதன் மூலம், அவர்களும் தங்களின் பள்ளி/கல்லூரியில் நடப்பது, தங்களின் விருப்பு வெறுப்புகளைப் பகிர ஆரம்பிப்பார்கள். இதுபோல் பகிர்வதனால், எது தவறு... எது சரி என்பதை அவர்களுக்குச் சொல்லி புரியவைக்க வாய்ப்பு ஏற்படும். ஊக்கப்படுத்துதல், தைரியமாக எதையும் எதிர்நோக்கும் திறன்வளர்ப்பு, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது போன்றவற்றையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதைப் பெற்றோர் மட்டுமல்ல ஆசிரியரும் பின்பற்ற வேண்டும்."

``தற்கொலை தடுப்பு ஆலோசனை மையங்கள் எந்த அளவு செயல்படுகின்றன?''

``சென்னை போன்ற முக்கிய இடங்களில் மட்டுமே இதுபோன்ற மையங்கள் செயல்பட்டுவருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால் நிச்சயமாக இதுபோன்ற பிரச்னைகள் குறையும். நம்ம நாட்டில் ஒருவர் மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றாலே பைத்தியம் என முத்திரை குத்திவிடுகிறார்கள். இந்த நினைப்பு முதலில் நீங்கவேண்டும். இந்த அவசர உலகத்தில் ஆலோசனை என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. தனிநபரின் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்பதற்கு ஆள் இல்லாமலும் பகிர்தல் இல்லாமலும் போவதால்தான் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களிடம் அரை மணி நேரம் பேசினாலே போதுமானது. நெகட்டிவ் சிந்தனைகளை அகற்றினாலே தவறான எண்ணம் தோன்றாது. அதற்கு ஆலோசனை மையங்களின் செயல்பாடு மிக முக்கியமான ஒன்று. எனவே, பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் தற்கொலைகளை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். தவறு செய்துவிட்டால், அந்தப் பிரச்னையை எப்படி அணுக வேண்டும், குழந்தைகளை எவ்வாறு வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் அறிந்து நடந்துகொள்ளவேண்டியது அவசியம். அதற்கான பயிற்சிகளை அனைவரும் ஏற்க முன்வர வேண்டும்" என்கிறார் மருத்துவர் சிவசைலம்.

காவல்துறை தற்கொலை வழக்குகளை எவ்வாறு அணுகுகிறார்கள், இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ஏதேனும் முயற்சிகள் எடுத்தனரா என்ற கேள்விகளுடன், காவல்துறை நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது...

``காவல்துறை பார்வையில் `இளைஞர்கள் தற்கொலை' எதனால் நடக்கிறது?''

``நாங்க பார்க்கிற வழக்குகள்ல அதிகப்படியான இளைஞர்கள் தற்கொலைகள் தீயப்பழக்கத்தால் எடுக்கும் முடிவுகளாகத்தான் இருக்குது. ரொம்பச் சின்ன வயசுலேயே கஞ்சா, மது போன்ற தீயப்பழக்கத்துக்கு அடிமையாகி, வாழ்க்கையில் இருக்கும் எல்லா சந்தோஷங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற எண்ணமே அவனை கொஞ்சம் கொஞ்சமா கொன்றுவிடுகிறது. திருமணம் ஆனவர்கள், மாமியார் மாமனார் கொடுமைகள், சின்னச் சின்ன சண்டைக்காகவும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்."

எத்தனை நல்வழிகாட்டிகள் வந்தாலும் மாமியார், மருமகள் கொடுமைகள் போன்ற குடும்பப் பிரச்னைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறதோ என்ற என் மனக்குரலுடன் எழுந்த கேள்வி,

``மாணவர்கள்/இளைஞர்கள் அதிக நேரம் பள்ளியிலோ/கல்லூரியிலோதான் நேரத்தைச் செலவிடுகிறார்கள். அங்கே ஆசிரியர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும்?''

``மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதில் ஆசிரியரின் பங்கு அதிகம். ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் இருக்காங்கனா, நிச்சயமா ஒவ்வொருத்தருடைய மனநிலை மற்றும் குடும்பப் பின்னணி அறிந்து அவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும். ஏற்கெனவே ஏகப்பட்ட பிரச்னைகளைச் சுமந்திருக்கும் மாணவனை மேலும் கஷ்டப்படுத்தும்போது செய்வதறியாது, இப்படி ஒரு முடிவுக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, ஆசிரியர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பையோ, அவர்களின் சொந்தப் பிரச்னைகளின் விளைவான கோபத்தையோ மாணவர்களின் மீது திணிக்கக் கூடாது."

``காவல் துறையினரின் அலட்சிய மற்றும் அதிகாரப்போக்காலும் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்களே. இதைப் பற்றிய உங்களின் கருத்து?''

``காவல் துறையினர், தங்களின் பிரையாரிட்டி என்னவென்று அறிந்து செயல்பட வேண்டும். எதுபோன்ற வழக்குக்கு முக்கியத்துவம் தர வேண்டும், எந்த கேஸுக்கு இரண்டாம் மூன்றாம் முன்னுரிமை தரலாம் என்பதை அவர்கள் நன்கு அறிந்துவைத்திருக்க வேண்டும். தனிநபரின் தற்கொலைக்கு, நிச்சயம் காவல்துறை எந்தவிதத்திலும் காரணமாய் அமைந்துவிடவே கூடாது. பெற்றோர் முதற்கொண்டு முதலில் தங்களின் கடமைகளையும் முக்கியத்துவத்தையும் நன்கு அறிந்துவைத்திருந்தால் நிச்சயம் இதுபோன்ற சூழ்நிலைகள் மாறும்."

``இதுபோன்ற பிரச்னைகளைத் தடுக்க இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்?''

``நண்பர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இந்த வயதில் உள்ளவர்கள் மனம்விட்டு பகிர்ந்துகொள்ளும் நபர், நண்பர்கள் மட்டுமே. ஒருவர் பிரச்னையில் இருக்கும்போது அவர்களுக்குச் சரியான முடிவெடுக்கும் பக்குவம் இருக்காது. நண்பர்களிடமோ, பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ அல்லது நம்பிக்கையானவர்களிடமோ பகிரும்போது, அந்தப் பிரச்னைக்குச் சரியான தீர்வு சொல்ல வாய்ப்புகள் அதிகம். எனவே, தனிமையை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும்."

``முன்பைவிட இப்போது தற்கொலைகளின் எண்ணிக்கை பெருகக் காரணம்?''

``நிச்சயம் தொழில்நுட்ப வளர்ச்சிதான். புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக வலைதளங்களில் பகிர்வதால் ஏற்படும் விபரீதங்கள் ஏராளம். மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் என சில இணைய க்ரிமினல்களிடம் சிக்கித்தவிக்கும் பெண்கள் அதிகம். ஒருவரிடம் இருக்கும் பொருள் மற்றவரிடம் இல்லை என்ற நிலை வரும்போதும், விவரம் அறியாத சிறுவர்கள்/இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அனைவரும் கவனமாக இருப்பதே சமூகத்துக்கு நல்லது" என்றார் அந்தக் காவல்துறை நண்பர்.

"நட்புடன் பழகும் ஆசிரியர்களே இல்லையா? அப்படி என்ன தவறு நமது கல்வி முறையில்! என்று மனதில் எழுந்த கேள்விகளுடன், சேலம் மாவட்டம், கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திருமஞ்சனம் அவர்களிடம் கேட்டோம்

கடுமையான தண்டனையை ஏன் மாணவர்களுக்குக் கொடுக்கிறீர்கள்? இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். இதைத் தடுக்க ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

"கடுமையான தண்டனை என்பது தவறான செயல்தான். 10 நிமிடம் ஒரு மாணவன் தாமதமாய் வருகிறான் என்றால், அவனை அடித்து உதைப்பது மிகவும் தவறான செயல். அவனுக்குக் கோபம்தான் அதிகம் வருமே தவிர, அந்தத் தவறைத் திருத்திக்கொள்ள ஒரு போதும் நினைக்க மாட்டான். முதலில் ஏன் தாமதமாய் வருகிறான் என்பதை தெரிந்து அதை சரிசெய்ய வேண்டும். வெவ்வேறு குணம்கொண்ட மாணவர்கள், தவறு செய்தால் எவ்வாறு திருத்த வேண்டும் என்பதை ஆசிரியர்கள் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனின் திறன், பிரச்னை போன்றவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை".

கடுமையான தண்டனை கொடுப்பதால், மிகவும் பயந்து கோழையாக தற்கொலைக்கோ அல்லது கோவம் அதிகரித்து கொலையாளியாகவோ இளைஞர்கள் மாறிவிடுகிறார்கள். இவற்றைத் தடுக்க ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

"ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், மாணவர்களின் மனதில் ஆசிரியர்கள் இடம் பிடித்துவிட்டாலே போதும். இதற்காக ஆசிரியர்கள் அதிகமாய் உழைக்க வேண்டும். புதுப்புது பாடங்களை எவ்வளவு எளிமையாய் புரிய வைக்க முடியுமோ, அதற்கேற்றதுபோல பாடம் நடத்த வேண்டும். சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளை உபயோகிக்கலாம்.  இதுமூலமா பாடத்தின் மீதும், அதை சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மீதும் ஈர்ப்பும் மரியாதையும் வரும். சந்தேகம் எழுந்தாலோ, வேறு பிரச்னையாக இருந்தாலும் தைரியமாய் ஆசிரியர்களை அணுகி அதற்கான தீர்வைக் கேட்டு தெரிந்துகொள்வார்கள். ஆனால், பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களுக்காகக் கூடுதல் முயற்சி எடுப்பதில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. இதனால் மாணவர்களும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். நன்றாகப் படிக்கிற மாணவன்மீது அதிகக் கவனமும், சுமாராகப் படிக்கும் மாணவனை கண்டுகொள்ளாமல் இருப்பதும் தவறான செயல். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். இவ்வாறு செய்தாலே மன அழுத்தமின்றி, அச்சமின்றி மாணவர்கள் இருப்பார்கள்".

அனைத்து ஆசிரியர்களுக்கும், அவர்கள் பயிலும் போதே 'உளவியல்' ரீதியான பாடமும் உள்ளதல்லவா? அதை நடைமுறை படுத்துகிறீர்களா?

"ஆம், உளவியல் பாடம், நாங்கள் பயிலும் காலத்தில் உள்ளது. ஆனால் அதை வெறும் பாடமாக மட்டும் பார்க்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கைதான் அதிகம். பரிட்சையில் பாஸ் பண்ணணுமேன்னு படிக்கிறாங்களே தவிர, நடைமுறை வாழ்க்கைக்குப் பெரிதும் உதவும் என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்" என்று கோபம் கலந்த வேதனையுடன் முடித்தார் திருமஞ்சனம்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நல்வழி ஆலோசனை வகுப்பு எடுப்பதன் மூலம் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் இளைஞர்களிடையே அதிகரிக்கும்.