Published:Updated:

லிபியாவில் தமிழர் பலி: அரசு நிதியுதவி அறிவிப்பு

சென்னை, பிப்.24,2011

லிபியா நாட்டில் உயிரிழந்த நெல்லை தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கிட தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். ##~~## 
 
இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம், தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா என்பவர் லிபியா நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை செய்து வந்தார். அவர் அங்கு அண்மையில் நேர்ந்த விபத்து ஒன்றில் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்த முதல்வர் கருணாநிதி உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், உயிரிழந்த முருகையா குடும்பத்தின் வறுமைநிலை கருதி அக்குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிட முதல்வர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.
 
இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.