Published:Updated:

"பொம்பளைங்களை போலீஸ் அடிக்க மாட்டாங்கன்னு நினைச்சுதான் போனோம், ஆனா..." ஸ்னோலினின் தோழி

"பொம்பளைங்களை போலீஸ் அடிக்க மாட்டாங்கன்னு நினைச்சுதான் போனோம், ஆனா..." ஸ்னோலினின் தோழி
"பொம்பளைங்களை போலீஸ் அடிக்க மாட்டாங்கன்னு நினைச்சுதான் போனோம், ஆனா..." ஸ்னோலினின் தோழி

மே 22... தமிழகத்தின் கறுப்பு நாள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் சொல்லி, தங்களின் நூறாவது நாள் போராட்டத்தை முன்னெடுத்த மக்களை அரசு சுட்டுக்கொன்ற நாள். சதை கிழிய, ரத்தம் வழிய அவர்களை விரட்டியடித்த நாள். காவல்துறை துப்பாக்கிகளால் உயிர் பறிக்கப்பட்ட 13 பேரில், ஸ்னோலின்தான் வயதில் மிகவும் இளையவர். 18 வயதுப் பெண். சுடுகாடாகிப்போன போராட்ட நிலத்தில், அந்தச் சிறுமியின் இறுதி நிமிடங்களைச் சொல்கிறார், களத்தில் அவருடன் இருந்த தோழி, கல்லூரி மாணவி. 

``ஸ்னோலின் இந்த வருஷம்தான் பத்தாவது எழுதியிருந்தா. 450க்கு மேல மார்க் எடுத்ததாச் சொன்னாங்க. 99 நாள்கள் நடந்த போராட்டத்துல, ஸ்கூல், காலேஜ் போறதால அப்பப்போதான் நாங்க கலந்துகிட்டோம். அப்படிப் போகும்போது எங்களை உட்காரவெச்சு, 'ஸ்டெர்லைட்' ஆலையைப் பற்றி சொல்வாங்க. அதுவரைக்கும் எங்க ஊர்ல நோயால பலர் செத்துப்போனதுக்கு, அந்த ஆலைதான் காரணம்னு போராட்டக் களத்துலதான் தெரிஞ்சுக்கிட்டோம். 100-வது நாள், எங்க ஊர்ல கேன்சர் நோயால பாதிக்கப்பட்டிருந்த ஒரு அண்ணன் இறந்துடுச்சு. போராட்டத்துல இருந்த எல்லோருமே அந்த அண்ணனை அடக்கம் பண்ணிட்டுதான், கலெக்டர் ஆபீஸுக்குக் கிளம்பினோம். சாவு வீட்டுக்குப் போனதாலேயும், போராட்டத்துக்குப் போறதாலேயும் கறுப்பு டிரெஸ் போட்டுட்டுப் போனோம். 


நான், ஸ்னோலின், எங்க கூட்டாளிங்க எல்லோரும் போராட்டத்துல ஒண்ணாதான் இருந்தோம்; கலெக்டர் ஆபீஸை நோக்கிப் போனோம். ஸ்னோலின் என்கிட்ட, 'அக்கா, இந்த மாதிரி கூட்டத்துல நான் கலந்துக்கிட்டதே இல்ல, இது புது அனுபவமா இருக்கு, ரொம்ப உணர்ச்சிபூர்வமா இருக்குல்ல..?!'னு சொல்லிட்டே வந்தா. எங்க எல்லோருக்குமே அதுதான் முதல் போராட்டக் களம். கலெக்டர் ஆபீஸ் போயிட்டு மனு கொடுத்துட்டு வந்துடுவோம்னுதான் நினைச்சிட்டு இருந்தோம். நாங்க போயிட்டு இருக்கும்போதே போலீஸ்காரங்க கல்லை எறிஞ்சாங்க. அதுல ஒண்ணு என் மேல பட்டு காயமாகிடுச்சு. அதையும் பொருட்படுத்தாம, 'ஒரு நாளைக்குதானே, முன்னேறி போவோம்'னு பேசிட்டே நடந்தோம். அதே மாதிரி எங்களுக்குள்ளேயே, 'போலீஸ்காரங்க நம்மளை அடிக்கமாட்டாங்க. அப்படியே அடிச்சாலும் தரையில்தான் அடிப்பாங்க'ன்னு பேசிக்கிட்டே தைரியமாப் போனோம். 

பாலம் இறக்கத்துல கண்ணீர் புகை குண்டுகளை வீசினாங்க. 'என்னல புகைக் குண்டுகளை எல்லாம் வீசுறாங்க? இப்படியெல்லாம்கூட இருக்கா'ன்னு எங்களுக்கு வியப்பா இருந்துச்சு. இதெல்லாம் நாங்க படத்துலதான் பார்த்துருக்கோம். நேர்ல முதல் முறை பார்க்குறதுனால பயமாவும் இருந்துச்சு. நிறைய பேர் சின்னக் குழந்தைங்களை எல்லாம் வெச்சிருந்தாங்க. அதனால, அப்படியே திரும்பிப் போயிடலாம்னு நினைச்சோம். அப்போ எங்க பின்னாடி இருந்த ஆம்பிளை ஆளுங்கயெல்லாம், 'நம்மளை பயமுறுத்ததான் இதை பண்றாங்க. பயப்படாம போங்க, பொம்பளை ஆளுங்களை எதுவும் பண்ண மாட்டாங்க'ன்னு சொன்னாங்க. அதுக்கப்புறமா அதையும் தாங்கிட்டு கலெக்டர் ஆபீஸ்கிட்ட போனோம். 

அந்தக் கூட்டத்துல கோஷம் போட்டவங்கள்ல, எங்க சத்தம்தான் பெருசா கேட்டுச்சு. எல்லாம் இந்த ஸ்னோலின் புள்ளதான். 'ஏ புள்ள ஸ்னோலின், மெதுவா கத்து'ன்னு சொன்னேன். அவ, 'அக்கா ஒருநாள்தானே... நல்லா கத்துங்க அக்கா...'னு சொன்னா. நாங்க கத்தினது மட்டும் தனிச்சுக் கேட்கிற அளவுக்கு உற்சாகமா கோஷம் போட்டோம். கத்திக்கிட்டே கலெக்டர் ஆபீஸ்கிட்ட போனோம். பொம்பளைங்கதான் முன்னாடி போனோம். முதல்ல திருநங்கைகள் போனாங்க. அவங்க பின்னாடி இளவட்ட பிள்ளைங்க, அதுக்கப்புறம் பெரிய பொம்பளை ஆளுங்க, அவங்க பின்னாடி ஆம்பளை ஆளுங்கனு போனோம். 


கல் அடி பட்டதால வலிக்குதுனு, நான் மரத்தடிகிட்ட உட்கார்ந்துட்டேன். என் கூட்டாளிங்களையும் உட்காரச் சொன்னேன். அவளுங்கதான், 'கலெக்டர் ஆபீஸ் எப்படி இருக்கும்னு பார்த்ததே இல்லக்கா, நாங்க பார்த்துட்டு வர்றோம்'னு சொல்லிட்டுப் போனாளுங்க. கொஞ்ச நேரத்துலேயே அவளுங்க பதறி ஓடிவந்தாளுங்க. அப்போதான் துப்பாக்கி குண்டோட சத்தம் காது கிழியக் கேட்டுச்சு. அதுக்கு முன்னாடிவரை துப்பாக்கிச் சத்தம் எப்படி இருக்கும்னுகூட எங்களுக்குத் தெரியாது. நாங்க ஓட ஆரம்பிச்சோம். 

'அக்கா, நாம மூணு பேரும் கையை இறுக்கிப் பிடிச்சிப்போம். என்ன ஆனாலும் கையை விட்டுறாதீங்க'ன்னு சொன்னா ஸ்னோலின். அதுதான் என் ஸ்னோலின் பேசின கடைசி வார்த்தை. நாங்க ஓடும்போது ஒரு பொண்ணு கீழே விழுந்துட்டா. அவ நெஞ்சில அடிபட்டுருச்சு. அவளைத் தூக்க நான் கீழே குனிஞ்சேன். என் பக்கத்துல குண்டு சத்தம் கேட்டுச்சு. பார்த்தா... ஸ்னோலின் கீழே சரிஞ்சு விழுந்தா. வேகமா போய் அவளை எழுப்பினேன். அந்த இடத்துல அவ்வளவு நேரம் சிரிச்சு பேசிக்கிட்டு இருந்த பொண்ணு, நிமிஷத்துல செத்துக் கிடந்தா. என்ன நடந்துச்சுன்னு சுதாரிக்கவே எனக்கு சில நிமிஷங்கள் ஆச்சு. 

கலெக்டர் ஆபீஸ் பக்கத்துல நிறைய மரங்கள் இருக்கும். அந்த மரத்துல ஒழிஞ்சு நின்னுதான் திடீர்னு ஸ்னோலினை சுட்டாங்க. என் கையை விட்டு ஓடினவ, தப்பிச்சு ஓடுவான்னுதான் விட்டேன்; இப்படி சாவான்னு தெரிஞ்சிருந்தா கையை விட்டிருக்கவே மாட்டேன். 'இன்னைக்கு ஒரு நாள் தானேக்கா'னு சொல்லிட்டே வந்தவளுக்கு, அதுவே கடைசி நாளாகிடுச்சு. 

ஒரு ஆம்புலன்ஸ்ல, ஸ்னோலின் உடலை அள்ளிப் போட்டுட்டுப் போனாங்க. கீழே விழுந்த இன்னொரு பொண்ணை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போக, ஆம்புலன்ஸ் கிடைக்கல. அங்க அடிபட்டுக்கிடந்த பல பேரையும், ஆம்புலன்ஸ்காரங்க ஏத்தவே இல்ல. எங்க ஆம்பளையாளுங்க அவங்களோட சண்டைபோட, அப்போ அங்கே வந்த போலீஸ்காரங்க என்ன, ஏதுன்னு கேட்காம எல்லோரையும் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஏற்கெனவே அடிபட்டிருந்தவங்களுக்கும் அடி விழுந்துச்சு. அப்போ அங்கே நின்னுட்டு இருந்த என்னையும் அடிக்க கை ஓங்குனாங்க. 'என்னை ஏன் சார் அடிக்கிறீங்க? நான் என்ன பண்ணேன்?'னு கேட்டதும், 'நீயும் அந்தப் போராட்டத்துலதானே கலந்துக்கிட்ட? அதனாலதானே கறுப்பு டிரெஸ் போட்டுருக்க?'னு கேட்டாங்க. 'ஆமா, அதுக்கு ஏன் அடிக்க வர்றீங்க? இந்த கறுப்பு டிரெஸ்தான் உங்களுக்குப் பிரச்னையா?'னு கேட்டுட்டு, கோபத்துலேயும், ஆற்றாமையிலேயும், அழுகையிலேயும் நான் போட்டிருந்த கறுப்பு துப்பட்டாவை தூக்கி எறிஞ்சேன். அதுக்கப்புறம், 'போம்மா'ன்னு விரட்டுனாங்க. ஒரு வழியா அந்தப் பொண்ணை ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு ஸ்னோலின்  உடம்பைப் பார்க்குறதுக்கு ஓடிவந்தேன். 

மார்ச்சுவரியில நிறைய பிணம் கிடந்துச்சு அதுல அவளைத் தேடிக் கண்டுபிடிச்சு, முதல்ல என் மொபைல்லதான் போட்டோ எடுத்தேன். அதுக்கப்புறம் யாரையும் பிணவறைக்குள்ள விடல. மூணு நாள் கழிச்சு ஸ்னோலின் உடம்பை பார்க்கிறதுக்குப் போன அவ சித்தி, 'உருக்குலைஞ்சுட்டாம்மா'னு வந்து கதறினாங்க. சிரிச்சுக்கிட்டே திரிஞ்ச பொண்ணை, இப்போ கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ல பார்க்கிறது அவ்வளவு ரணமா இருக்கு.
 

13 பேர் பலினு சொல்றாங்க. ஆனா, நிறைய ஆளுங்களைக் காணோம், உடல்களைக் காணோம். நான் மட்டும் ஸ்னோலினை போட்டோ எடுக்காம இருந்திருந்தா, அவ சாவையும் மறைச்சிருப்பாங்க. நாங்க கடல்ல மீன் பிடிக்கக்கூட அரசாங்கம் அத்தனை சட்டம் போடுது. ஆனா, மனுச உயிரை இப்படி கேள்விகேட்பாறில்லாம பலி வாங்குதே? அந்தப் போராட்டத்துல கலந்துக்கிட்டப்போகூட எங்களுக்கு விஷயங்கள் முழுசா புரியலை. ஆனா, எங்களைக் கொன்னு போட்டுட்டு, அதுக்கு அப்புறம் அவங்க நடத்துற ஒவ்வொரு விஷயத்தையும் பார்க்கும்போது, எப்படியெல்லாம் நாடகம் போடுறாங்கனு இவங்க பண்ணுற அரசியல் எல்லாம் நல்லா புரியுது. அந்த ஆலையைப் பூட்டுறதுக்கு இத்தனை உயிர்களைக் காவு கொடுத்திருக்கோம். மறுபடியும் அதைத் திறந்தா, நிச்சயம் மறுபடியும் போராடுவோம். நாங்க அவங்க கொடுக்குற நோட்டுக்கு அடிமையாகாம, எங்க கோபத்தையெல்லாம் ஓட்டுல காட்டுவோம். 

வரட்டும்." 

அடுத்த கட்டுரைக்கு