Published:Updated:

50 இளம் பெண்கள் மர்ம மரணம் - விசாரணை கேட்கும் நேரு யுவகேந்திரா

50 இளம் பெண்கள் மர்ம மரணம் - விசாரணை கேட்கும் நேரு யுவகேந்திரா
50 இளம் பெண்கள் மர்ம மரணம் - விசாரணை கேட்கும் நேரு யுவகேந்திரா

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக்காவில் ஆண்டுக்கு சுமார் ஐம்பது இளம் பெண்கள் மர்மமான முறையில் இறக்கிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகளிர் தின விழாவில் பரபரப்பு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

நேரு யுவகேந்திரா சார்பில் திருவாடானையில் நேற்று சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. நாட்டுபுற‌ப் பாடகி தஞ்சை செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்த விழாவில், அதிர்ச்சிகரமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:

50 இளம் பெண்கள் மர்ம மரணம் - விசாரணை கேட்கும் நேரு யுவகேந்திரா

திருவாடானை தாலுக்காவில் ஆண்டுக்கு சராசரியாக ஐம்பது இளம் பெண்கள் இறக்கிறார்கள். இந்த மரணங்களில் பெரும்பாலானவை மர்மமான முறையில் நடந்தாலும் அதுகுறித்து முறையாக விசாரணை நடத்தாமல் இயற்கை மரணங்களாக கணக்குக் காட்டி உடலை புதைத்து வழக்கை முடித்து விடுகிறார்கள். கலப்பு திருமணங்களை ஏற்காத சிலர் கௌரவ கொலைகள் உள்ளிட்ட காரியங்களிலும் ஈடுபடுவதால் இளம் பெண்களின் மர்ம மரணங்கள் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

இவற்றை தடுத்து நிறுத்த, இளம் பெண்கள் மர்ம மரணங்கள் குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விதவைகளுக்கு தமிழக அரசு சார்பில் சலுகை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. ஆனால், கணவனால் கைவிடப்பட்டவர்களும் ஆதரவற்றவர்கள் தான். ஆனால், அவர்களுக்கு விதவைகளுக்கு கிடைக்கும் அரசின் சலுகைகள் கிடைப்பதற்கு சில தடங்கள் இருக்கின்றன அவற்றை சரி செய்து கணவால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் அரசின் சலுகை திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட‌ பதினோரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகத்தின் இரண்டாவது நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுகின்ற திருவாடானை தாலுக்காவில் இளம் பெண்கள் மர்ம மரணங்கள் குறித்த தீர்மானம் திகிலை கிளப்பி இருக்கிறது.

படம்: சாய் தர்மராஜ்