Published:Updated:

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டில் என்ன நடக்கிறது?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டில் என்ன நடக்கிறது?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டில் என்ன நடக்கிறது?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டில் என்ன நடக்கிறது?

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டில் என்ன நடக்கிறது?

Published:Updated:
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலின் வீட்டில் என்ன நடக்கிறது?

ஸ்னோலின்... பள்ளிச் சோலையை முடித்து, கல்லூரிச் சாரலில் நனைய கனவு கண்டுகொண்டிருந்த மாணவி. தான் வாழும் ஊரின் வாழ்வுக்காகவும் வருங்காலத் தலைமுறையின் நலனுக்காகவும் போராடி,  துப்பாக்கித் தோட்டாக்களுக்குப் பலியான மாணவி. நச்சு கக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில், தன் உயிரைக் கொடுத்து, `வீர மங்கை'யாக அனைவரின் மனங்களிலும் வாழ்பவர்.

கிட்டத்தட்ட நாற்பது நாள்களுக்குப் பின்னர், ஸ்னோலினின் வீட்டுக்குச் சென்றோம். அந்த வீடு முழுக்க ஸ்னோலினின் ஆத்மா நிறைந்திருந்ததை உணரமுடிந்தது. ஸ்னோலினின் அம்மாவும் அண்ணனும் இருந்தனர். யார் என விசாரித்து அமரவைத்தனர்.

ஸ்னோலின் அம்மா வனிதா, ``இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஸ்னோலின் ஞாயிற்றுக்கிழமையில் கறிச்சோறு இல்லைன்னா சாப்பிடவே மாட்டா. அவளுக்காகவே வார வாரம் கறி எடுப்போம். அவள் போனதுக்கு அப்புறம் எல்லாமே போச்சும்மா. ஞாயிற்றுக்கிழமையில் எங்க வீடு இப்படி அமைதியா இருந்ததே கிடையாது. துருதுருனு ஏதாவது பண்ணி, வீட்டைக் கலகலப்பா வெச்சுப்பா. எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. என் பொண்ணு மேலதான் ரொம்ப உசுரா இருப்பேன். வீட்டுல எல்லோருக்கும் எஜமானி அவள்தான். அன்பைத் தவிர என் ஸ்னோலினுக்கு எதுவுமே தெரியாதும்மா. அந்த அன்புக்காகவே உசுரைக் கொடுத்துட்டாளே'' எனக் கொட்டும் கண்ணீருடன் தொடர்ந்தார்.

``அன்னைக்குப் போராட்டத்துக்குப் போகுறதுக்கு முன்னாடிகூட அண்ணன் பொண்ணுக்கு நல்லா டிரெஸ் பண்ணி ஃபோட்டோ எடுத்தா. சிரிச்சுட்டே கிளம்பினவள், பொணமாத் திரும்பி வருவாள்னு தெரியாமப் போச்சேம்மா. நானும் அவளோடு போயிருந்தேன். கைக்குழந்தையை வெச்சிருந்ததால் கலெக்டர் ஆபீஸ் வாசலிலே நின்னுட்டேன். அவளும் என் மருமவளும் உள்ளே போனாங்க. என் மருமவ கையைவிட்டு ஸ்னோலின் போனதும், வெளியில தப்பிச்சுப் போயிருப்பான்னுதான் என் மருமவ நினைச்சிருக்கா. துப்பாக்கிச் சூடு நடந்தப்பவும், சும்மா பயமுறுத்த மேலே சுடறாங்கன்னு நினைச்சேன். என் பொண்ணைச் சுட்டு ஆம்புலன்ஸ்ல ஏத்திட்டுப்போனதே எனக்குத் தெரியலை. எங்கேயோ ஒளிஞ்சுட்டு இருப்பான்னு நினைச்சேன். அநியாயமா கொன்னுட்டாங்களே. எங்க வீட்டு மாகாராணியை எங்ககிட்ட இருந்து பிரிச்சுட்டாங்களே. சாவற வயசாம்மா என் பொண்ணுக்கு'' எனக் கதறியவரை, தேற்றுவதற்கு வார்த்தை இல்லை.

``ஸ்னோலின் வக்கீலுக்குப் படிக்க ஆசைப்பட்டா. கடன் வாங்கிப் படிக்கவைக்க அவள் அப்பா ஏற்பாடு பண்ணியிருந்தார். தையல், பியூட்டிஷியன் படிப்பும் படிச்சிருக்கா. அவளுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும். என் புள்ளைக்கு 18 வயசாகிட்டாலும், அவளா சாப்பிட்டா சரியா சாப்பிடறதில்லைன்னு நான்தான் சோறு ஊட்டுவேன்மா. பார்த்து பார்த்து வளர்த்த புள்ளையை இப்படிப் பறிகொடுத்துட்டு நிக்கோமே. அவளுக்கு ஊட்டாம நான் சாப்பிட்டதே இல்லே. சோத்தை எடுத்து ஒரு வாய் வெக்கப்போனாலும் புள்ளை நினைப்புதான் வருது. அவள் இல்லாத உலகத்துல நான் ஏன் வாழணும்னு தோணுது. ஆனாலும், மத்த ரெண்டு பசங்களுக்காக இந்த உசுரைக் கையில புடிச்சுட்டிருக்கேன்.ஸ்னோலின் டைரியில் நிறைய எழுதிவெச்சுருக்கா. என்னைப் பற்றி கவிதையும் எழுதியிருக்கா. அவளுடைய எழுத்துகளை தொகுத்து, 'ஸ்னோலின் நாட்குறிப்புகள்'னு ஒரு புத்தகம் (தமுஎகச) வெளியிட்டுருக்காங்க. அதில், நிறைய இடத்துல என்னைக் கோபப்படக் கூடாதுன்னு எழுதியிருக்கு. அவள் அப்பா குடிப்பாக, அவங்களை மனசுலவெச்சு குடிக்காதப்பான்னு எழுதியிருக்கா. முன்னாடி இரண்டு வேளை குடிச்ச மனுஷன் இப்போ பொண்ணை நினைச்சு நாலு வேளையும் குடிக்கிறார். அவள் அண்ணன் பொண்ணை எப்பவுமே கொஞ்சிட்டே இருப்பா. அந்தக் குழந்தை அத்தையைக் காணும்னு ஏக்கத்தில் நொடிஞ்சி கிடக்கும்மா. வீட்டு சந்தோஷமே போயிடுச்சு. அவள் சாவுக்கு நியாயம் கிடைக்கிற வரை உடம்பை வாங்கக் கூடாதுன்னு நினைச்சோம். ஆனால், சின்னப் பொண்ணு இவ்வளவு நாள் பிணவறையில் இருக்கிறது நல்லதில்லே. பாடி தாங்காதுன்னு சொன்னாங்க. அப்புறம்தான் வாங்கினோம். அரசாங்கத்திலிருந்து 20 லட்சம் கொடுத்தாங்க. என் பொண்ணோட உசுருக்கான மதிப்பு 20 லட்சமா?'' என்ற அந்தத் தாயின் கண்கள், மீண்டும் மீண்டும் கண்ணீரைக் கொட்டியது.

நடிகர் விஜய் தூத்துக்குடி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆறுதல் சொன்னபோது ஸ்னோலின் வீட்டுக்கும் சென்றிருக்கிறார். ``ஆறுதல் சொன்னவர் கிளம்புறப்ப ஒரு கவர்ல பணத்தைக் கொடுத்தார். வாங்க மாட்டோம்னு எவ்வளவோ சொன்னோம். கைல திணிச்சுட்டு கிளம்பிட்டார்'' என்றார் ஸ்னோலின் அம்மா.

விடைபெறும் முன்பு சற்றே தயக்கத்துடன் அந்தக் கேள்வியைக் கேட்டேன். ``ஒருவேளை மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தால் மறுபடியும் போராடப் போவீங்களா?''

நொடியும் தயங்காமல் பதில் வந்தது... ``கண்டிப்பாப் போவோம்!''

ஸ்னோலினின் டைரியிலிருந்த சில குறிப்புகள் :

``ப்ளீஸ் ப்பா குடிக்காதீங்க. நீங்க இந்த உலகில் நிறைய நாள் வாழணும். நீங்களும், அம்மாவும் என்னை நல்லா படிக்க வெச்சு ஒரு வேலைக்குப் போன பிந்தி, உங்களையும், அம்மாவையும் நா தான் பார்த்துப்பேன். ப்ளீஸ் ப்பா குடிக்க மட்டும் செய்யாதீங்க.. ப்ளீஸ்.. ஐ லவ் யூ..!''