Published:Updated:

ரஜினி கல்யாண விருந்து, காந்திக்கு காபி... - 'அறுசுவை அரசு' நடராஜன் நினைவலைகள்

ரஜினி கல்யாண விருந்து, காந்திக்கு காபி... - 'அறுசுவை அரசு' நடராஜன் நினைவலைகள்
ரஜினி கல்யாண விருந்து, காந்திக்கு காபி... - 'அறுசுவை அரசு' நடராஜன் நினைவலைகள்

சென்ற நூற்றாண்டில், 'கல்யாண சமையல் சாதம்' என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருபவர், நடராஜன். சமையல் சாம்ராஜ்ஜியத்தில், இனிப்பு, காரம், புளிப்பு என அத்தனை சுவைக்கும் தனித் தன்மையைக் கொண்டுவந்து, 'அறுசுவை அரசு' என்று மகுடம் சூட்டப்பட்ட நடராஜன், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று (17.9.18) காலமானார்.

1923-ல் கும்பகோணம் அடுத்துள்ள நன்னிலத்தில், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் நடராஜன். தலைமுறை தலைமுறையாய் கும்பாபிஷேகம், குருபூஜை போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு சமைத்துத்தரும் குடும்பத்திலிருந்து வந்த இவர், 16-வது தலைமுறையாக சமையல் கலையை நிலைப்படுத்தியவர். இவருடைய வாரிசுகளுக்கும் இவரின் கைப்பக்குவத்தைச் சொல்லிக்கொடுக்கத் தவறவில்லை.

படிக்கவேண்டிய வயதில் புத்தகமூட்டையைச் சுமக்காமல், துணி மூட்டையைச் சுமந்தும், மற்றவர்களின் வீட்டு வாசலை சுத்தம்செய்து, கோலமிட்டு, அதில் கிடைக்கும் ஒரு ரூபாயை வைத்துத் தன் காலத்தை நகர்த்தினார். பிறகு, சென்னையை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினார். கிடைத்த சின்னச்சின்ன வேலைகளையெல்லாம் செய்தார்.

தன் குடும்பத்தினரைப்போல இல்லாமல், வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்று எண்ணி, தனக்குத் தெரிந்த சமையல் கலையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். அதுதான், 'கல்யாண சமையல் சாதம்'. இலையை எந்தப் பக்கம் போட வேண்டும், வலது முதல் இடது பக்கம் வரை என்னென்ன உணவு வகைகளை வைக்க வேண்டும், எதன்பின் எந்த உணவு வைக்க வேண்டும், பச்சடி, பாயசம் போன்றவற்றை எப்படி சாப்பிடவேண்டும்.. இப்படி பரிமாறுவதில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் கட்சிதமாக கடைபிடித்து, மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவது இவரின் தனித்தன்மை. இதுவே, இவரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டுசேர்த்தது. பக்கத்துவீட்டுக்காரர் விசேஷம் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மூப்பனார், அம்பானி போன்ற பல பிரபலங்களின் வீட்டு கல்யாண விருந்து வரை இவரின் கைப்பக்குவத்தில் தயாரான உணவை சாப்பிடாதவர்கள் அந்தக் காலத்தில் குறைவுதான். 

அதுமட்டுமல்ல, தன் ஒன்பதாவது வயதிலேயே காந்திக்கு காபி போட்டுக்கொடுத்தவர் இவர். ஜவஹர்லால் நேரு, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், பக்தவத்சலம் போன்ற பெரும் தலைவர்கள் கலந்துகொண்ட பஞ்சாயத் யூனியன் கான்ஃபரென்ஸின் தலைமைச் சமையல் பொறுப்பை ஏற்று நடத்திய பெருமையும் இவருக்கு உண்டு. 1987-ம் ஆண்டு, R.வெங்கட்ராமன் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது, ஜனாதிபதி மாளிகையின் தலைமைச் சமையல் பொறுப்பாளராக நடராஜனுக்கு மகுடம் சூட்டப்பட்டது.  இப்படி கல்யாண சாப்பாடு, பிரபலங்களின் ஃபேவரைட் செஃப் என மூன்று தலைமுறையையும் தாண்டி கொடிகட்டிப்பறந்தார். தொடர்ந்து தன் மகன் மகள்களோடு இணைந்து கேட்டரிங் ஆரம்பித்து, அவர்களுக்கென்றே தனித்துவமான மசாலாக்களை அரைத்து உணவு வகைகளை தயார் செய்து, ஆயிரக்கணக்கான திருமணங்களை ஆனந்தமாய் நடத்திவைத்துள்ளனர்.

இன்றும் பல திருமண நிகழ்ச்சிகளில் இவரின் ரெசிப்பிகளைத்தான் உபயோகிக்கின்றனர். எண்ணிலடங்கா பல சைவ உணவு வகைகளை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம்செய்து வைத்த நடராஜன், இம்மண்னைவிட்டுப் பிரிந்தது பெரும் இழப்பு.