Published:Updated:

3 பேரின் தூக்கை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்

3 பேரின் தூக்கை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்
3 பேரின் தூக்கை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்
3 பேரின் தூக்கை ரத்து செய்ய அமைச்சரவையில் தீர்மானம்: கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: "சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை தமிழக அரசு நிறைவேற்றி அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும்'' என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூக்குத் தண்டனை என்பது அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான நிலைப்பாடு. இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மரண தண்டனை இருக்கலாமா அல்லது அதை நீக்க வேண்டுமா என்ற பிரச்னை உலகமெங்கும் மிகப் பெரிதாக எழுப்பப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நேற்றைய தினம், இந்திய உச்ச நீதி மன்றம் "கருணை மனு மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததைக் காரணம் காட்டி மரண தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று வழங்கியுள்ள தீர்ப்பு, தூக்கு தண்டனையை எதிர் பார்த்திருக்கும் பலருடைய மனதிலும், ஏன் நம்முடைய எண்ணவோட்டத்திலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற நிகழ்வுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிட ஒரு மாநில அரசு எந்த விதிமுறைப்படி அவர்களின் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமோ அவ்வாறு தமிழகத்தில் தி.மு.க அரசு பொறுப்பில் இருந்த போது மாற்றியமைத்து  அவர்களை வாழ விட்டிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்களாக தோழர்கள் தியாகு, கலிய பெருமாள் போன்றவர்கள் திகழ்கிறார்கள்.

இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தியாகு நல்ல எழுத்தாளராக, கட்டுரையாளராக, புத்தகங்கள் வெளியிடுபவராக இந்தச் சமுதாயத்தில் இப்போது மதிப்புடன் உலவுவதைப் பார்த்தாவது சாந்தனுக்கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ்வளித்து அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் மனித நேயத்தோடு பிரச்னையை உண்மையிலேயே அணுக வேண்டுமானால் அதற்குரிய சட்ட விதி முறைப்படி ஏற்கனவே கழக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையின் அடிப்படையில்  உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டதையே மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.