Published:Updated:

`நான் எந்தத் தவறும் செய்யவில்லையே?' - இடமாற்றத்தால் உயிரை மாய்த்த வேளாண் அதிகாரி!

மலையரசு
`நான் எந்தத் தவறும் செய்யவில்லையே?' - இடமாற்றத்தால் உயிரை மாய்த்த வேளாண் அதிகாரி!
`நான் எந்தத் தவறும் செய்யவில்லையே?' - இடமாற்றத்தால் உயிரை மாய்த்த வேளாண் அதிகாரி!

சேலம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சேலம் அருகே உள்ள பாரப்பட்டிப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் துணை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, அவரது வீட்டில் இருக்கும் மரத்தில் சிவக்குமார் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்துக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டதால்தான் சிவக்குமார் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்து விசாரிப்பதற்காக அவருடன் பணிபுரிந்த ஒருவரிடம் பேசினோம். ``சிவக்குமார் கடந்த 25 வருடகாலமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிலைகளில் வேளாண் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். நல்ல முறையில் தன் பணியை அவர் செய்து வந்தார். இதனால் சிறப்பாக பணிபுரிந்ததற்காக கலெக்டரிடம் இருந்து `சிறந்த பணியாளர்' விருது வாங்கியுள்ளார். 

இந்த நிலையில்தான் ஒரு மாதத்துக்கு முன்பு, விழுப்புரம் மாவட்டத்துக்குப் பணி மாற்றம் செய்யப்பட்டார் சிவக்குமார். இதனால் அவருக்கு மன உளைச்சல் இருந்துவந்தது. `நான் எந்தத் தவறும் செய்யவில்லையே, அப்படி இருந்தும் ஏன் இடம் மாற்றினார்கள்' என அடிக்கடி மன வருத்தத்துடன் புலம்பிக்கொண்டே இருந்தார். பிறகு விழுப்புரத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரில் உள்ள வேளாண்மை துறை அலுவலகத்தில் துணை வேளாண் அதிகாரியாகப் பணி மாற்றம் வாங்கினார். அங்கு அதிகாரிகள் பற்றாக்குறை இருந்ததால் இவருக்கு அதிக அளவு பணிச்சுமை இருந்தது. அவருக்கு இது கூடுதல் மன உளைச்சல் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் அவர் வீட்டில் இருக்கும் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்" எனக் கூறினார்.