சமூகம்
Published:Updated:

நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

நெல்லையில் தொடரும் படுகொலைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

குண்டு வீசி... கதைவை உடைத்து... கத்தியால் குத்தினர்

“அந்தக் கொலைகாரக் கும்பல் திடீர்னு சுவர் ஏறி குதிச்சது. அதைப் பார்த்துட்டு, என் மருமகனை வீட்டுக்குள் இழுத்துட்டுப் போய் கதவைப் பூட்டினேன். அந்த கும்பல், வெடிகுண்டை வீசி கதவை உடைச்சுட்டு உள்ளே வந்துருச்சு. உடனே என் மனைவி, என்னை ஒரு ரூமுக்குள் தள்ளினாங்க. மருமகனையும் ரூமுக்குள் தள்ளுறதுக்குள், அந்த கும்பல் அவரைக் கத்தியால் குத்திருச்சு. அதை என் மனைவி தடுத்தப்போ, அவளோட கையில் வெட்டிட்டாங்க. என் மகள், கிச்சன்ல இருந்து மிளகாய் பொடியை எடுத்துவந்து வீசியதும், அந்தக் கும்பல் ஓடிருச்சு. என் மருமகனைக் காப்பாத்த முடியாம போயிருச்சு” என்று கதறுகிறார் குமார்.

நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

நெல்லை மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் நெருக்கமாக இருந்தவர், பிறகு அ.தி.மு.க-வில் இணைந்தார். மனைவி விஜயலட்சுமி, மகள் அனுசுயா, மருமகன் செந்தில்குமார், பேத்தி அஸ்மிதா ஆகியோருடன் பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். குமாருக்கும், ராக்கெட் ராஜாவின் உறவினரான டாக்டர் பாலமுருகனுக்கும் இடையே, 1.75 ஏக்கர் நிலம் தொடர்பாக தகராறு. ராக்கெட் ராஜா, பல மாதங்களாக  போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி. பிப்ரவரி 26-ம் தேதி காலை மருமகன் செந்தில்குமாருடன் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தார் குமார். அப்போது, காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்த கும்பல், செந்தில்குமாரைக் குத்திக் கொன்றது. இந்தச் சம்பவத்தால், நெல்லையில் இரு நாள்களாக பதற்றம் நிலவியது. கொலை தொடர்பாக ராக்கெட் ராஜா, அவரின் அண்ணனும் வழக்கறிஞருமான பாலகணேசன், டாக்டர் பாலமுருகன் உள்பட ஒன்பது பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.  கூலிப்படையைச் சேர்ந்த நால்வர் கைதாகி உள்ளனர்.

நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

“நெல்லை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள 1.75 ஏக்கர் நிலத்துக்கு  பவர் பத்திரம் வாங்கி வைத் துள்ளேன். அந்த நிலத்துக்கு, டாக்டர் பாலமுருகனும் உரிமை கோரினார். நான் சிவில் வழக்குத் தொடர்ந்தேன். இதில் இறுதிக்கட்ட விசாரணை, மார்ச் 6-ம் தேதி நடக்கவுள்ளது. என்னை நேரிலும் போனிலும் மிரட்டினர். இப்படிச் செய்வாங்கன்னு நினைக்கலை. என்னைக் கொல்ல வந்து  என் மருமகனை கொலை பண்ணிட்டானுங்க’’ எனக் கதறினார் குமார்.

செந்தில்குமாரின் மனைவி அனுசுயா கர்ப்பமாக உள்ளார். தன் கண்முன்பாக கணவன் கொலைசெய்யப்பட்ட அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. செந்தில் குமாரின் இறுதிச் சடங்குகளில், அவர் பணியாற்றிய பொறியியல் கல்லூரி மாணவர்கள் கண்ணீருடன் பங்கேற்றனர். “செந்தில்குமார் மாணவர் களிடம்  ஃபிரண்ட்லியா பேசுவார். ஏழை மாணவர் களாக இருந்தால், அவர்களுக்கு உதவிகள் செய்வார். அப்படிப் பட்டவருக்கு இப்படி ஒரு கோர முடிவு ஏற்பட்டது ரொம்ப வருத்தமா இருக்கு’’ என்றனர் செந்தில்குமாருடன் பணியாற்றிய பேராசிரியர்கள்.

ராக்கெட் ராஜா தரப்பில்  “இந்த சம்பவத்துக்கும் ராக்கெட் ராஜா குடும்பத்துக்கும் எந்தத் தொடர்புமே கிடையாது’’ என்றனர்.

நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

ராக்கெட் ராஜாவின் அண்ணனும், வழக்கறிஞருமான பாலகணேசனுக்கு ஆதரவாக, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கபில்குமார் சாரட் கரைச் சந்தித்த வழக்கறிஞர் சங்கத்தினர், ‘பாலகணேசன் பெயரை வழக்கிலிருந்து நீக்கா விட்டால், தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம்’ எனத் தெரிவித்துள்ளனர். கமிஷனரிடம் நாம் கேட்டதற்கு, “தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள் ளோம். அதில் வழக்கறிஞர் பாலகணேசனின் பெயரையும் சேர்த்துள்ளோம். விசாரணை யில், அவருக்கு உண்மையிலேயே இந்தச் சம்பவத்தில் தொடர்பில்லை என்று தெரிந்தால், அவரது பெயரை நீக்குவோம். தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்துக் குற்ற வாளிகளும் பிடிபடுவார்கள்’’ என்றார்.

நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

நெல்லை மாவட்டத்தில், கடந்த இரு மாதங்களில் 12 கொலைகள் நடந்துள்ளன. காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது?

- பி.ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

60 நாள்கள்... 12 கொலைகள்!

இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் நெல்லையில் 12 கொலைகள் நடந்துள்ளன. அந்தப் பட்டியல் இதோ...

ஜன. 5: கங்கை முருகன் (ரியல் எஸ்டேட் பிரச்னை), பாளையங்கோட்டை

ஜன. 12: ஐ.டி.ஐ மாணவன் முருகன் (பைக்கில் வேகமாகச் சென்றபோது ஏற்பட்ட தகராறு ), மேலக்கடையநல்லூர்

ஜன. 17: தங்கப்பாண்டி (பேருந்து நிலையத்தில் கொலை), சேரன்மகாதேவி

ஜன. 23: மகாலிங்கம் (பைக்கில் வேகமாகச் சென்றதைக் கண்டித்ததால் வெட்டிக் கொலை), வீரவநல்லூர்

ஜன. 23: ஆனந்தராஜ் (கொலை செய்து மூட்டையில் சுற்றி தாமிரபரணி ஆற்றில் வீசினர்), பாளையங்கோட்டை

பிப். 11: ஆறுமுகம் (மனைவியே அம்மிக் கல்லைப் போட்டுக் கொன்றார்), சிவந்திபட்டி

பிப். 12: அந்தோணியம்மாள் (கணவனே கொலை செய்தார்), சமாதானபுரம்

பிப்.  19: மாடசாமி (சீட்டு விளையாட்டில் மோதல்) கீழ அழகுநாச்சியார்புரம்

பிப்.  24: பேச்சியம்மாள் (லாரி டிரைவர் செய்த கொலை) சீதபற்பநல்லூர்

பிப். 26: ரோஸ்லின் (கணவனாலேயே கத்தரிக்கோலால் குத்திக் கொலை), பாளையங்கோட்டை

பிப். 26: செந்தில்குமார் (கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசிக் கொலை), பாளையங்கோட்டை

பிப். 23: முருகன் (பீர் பாட்டிலால் கழுத்தில் குத்திக் கொலை), நெல்லை சந்திப்பு