Published:Updated:

தூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை! திட்டக்குடியில் அதிர்ச்சி

ஜி.சதாசிவம்
தூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை! திட்டக்குடியில் அதிர்ச்சி
தூக்கில் கிடந்த மனைவி... மணிக்கட்டுகள் அறுத்த நிலையில் கணவன், குழந்தை! திட்டக்குடியில் அதிர்ச்சி

திட்டக்குடியில் வீட்டில் மர்மமான முறையில் கணவன், மனைவி மற்றும் குழந்தை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்குத் திருமணமாகி உஷா (25) என்ற மனைவியும் பிரதிக் ஷா (2) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். கணவன்- மனைவி இடையே சில மாதங்களாகப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், பிரகாஷ் வேலைக்காக குஜராத் சென்றுவிட்டார். நீண்டநாள்களுக்குப் பிறகு நேற்று குஜராத்திலிருந்து தனது சொந்த கிராமமான இடைச்செருவாய் வந்துள்ளார். பிரகாஷ் தன் மனைவி உஷா மற்றும் குழந்தையை அழைத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

நேற்று இரவு உறங்கச் சென்றவர்கள் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால், அப்பகுதியினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது உஷா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். பிரகாஷ் மற்றும் குழந்தை பிரதிக் ஷா மணிக்கட்டு அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.  இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக திட்டக்குடி காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், மூவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.