Published:Updated:

‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்

‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்
‘மூன்று இரவுகள் தங்கினோம்’ - டெல்லி கூட்டு தற்கொலை பயத்தைப் போக்கத்துடிக்கும் மகன்

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கூட்டு தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு யாரும் செல்ல மறுத்த நிலையில் அவ்வீட்டின் மூத்த மகன் அங்கு தங்கியுள்ளார். 

ஜூலை 1, 2018 டெல்லி வாசிகளால் மறக்க முடியாத நாள். டெல்லி புராரி பகுதியில் பட்டியாலா என்ற குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மொத்தமாகத் தற்கொலை செய்துகொண்டனர். முதலில் இவர்களின் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. பின்னர், அவர்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் அவர்கள் மூடநம்பிக்கையால் இறந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இறந்தவர்கள் அனைவரும் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை சடங்கு செய்யும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம்  எனப் பிரேதபரிசோதனையின் முடிவில் தெரியவந்தது. 

11 பேரின் தற்கொலையைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு அருகில் செல்லக்கூட அப்பகுதி பொதுமக்கள் பயந்து வருகின்றனர். அந்த வீட்டில் அமானுஷ்யம் இருப்பதாகவும் யாரும் செல்லக் கூடாது என்பது போன்ற பல புரளிகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடு தற்போது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புரளிகள் உண்மையில்லை என்பதை நிரூபிக்க இறந்த நாராயணி தேவியின் மூத்த மகன் தினேஷ் சிங் தன் குடும்பத்தாருடன் புராரியில் உள்ள இல்லத்துக்குச் சென்று மூன்று இரவுகள் தங்கியுள்ளார். 

இது பற்றி பேசிய தினேஷ், “நான் என் மனைவியுடன் மூன்று இரவுகள் அந்த வீட்டில் இருந்தேன். நாங்கள் இருந்த இந்த நாள்களில் அந்த வீட்டில் எந்த பயமும் உணரவில்லை. ஆனால், ஓர் அமைதியான சூழல் மட்டும் இருந்தது. அங்குள்ள பொருள்கள் இறந்தவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. பிறகு, ஒரு நாள் முழுவதும் வீட்டைத் தூய்மைப் படுத்தி கலைந்து கிடந்த பொருள்களை சரிசெய்தோம். இந்த வீட்டை புணரமைக்கவுள்ளோம் அந்தப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளது. இதையடுத்து அடுத்த வருடம் என் மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமணம் முடிந்தவுடன் அவன் இங்கு வந்து தங்கவுள்ளான். அந்த வீட்டில் எங்களின் குடும்பத்தாரின் நினைவுகள் மட்டுமே உள்ளது பயம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். இறந்த நாராயணி தேவியின் மூத்த மகனான தினேஷ் தன் குடும்பத்துடன் ராஜஸ்தானில் வாழ்ந்துவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.