Published:Updated:

`எனது மருமகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுங்கள்!'- ரயில் விபத்தில் மகனை இழந்த தாயார் கண்ணீர்

`எனது மருமகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுங்கள்!'- ரயில் விபத்தில் மகனை இழந்த தாயார் கண்ணீர்
`எனது மருமகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுங்கள்!'- ரயில் விபத்தில் மகனை இழந்த தாயார் கண்ணீர்

அமிர்தசரஸில் நடந்த கோர விபத்தில் தசரா கொண்டாட்டத்தில் ராவணன் வேடமிட்டு நடித்தவர் பலியாகியுள்ளார்.

Photo Credit: ANI

நாடு முழுவதும் தசரா பண்டிகை நேற்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் தசரா பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின் ஒரு பகுதியாக ராவணனின் உருவ பொம்மை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். தசரா விழாவின்போது ராம்லீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கம். அமிர்தசரஸில் போடப்பட்ட நாடகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த தல்பீர் சிங் ராவணன் வேடமிட்டு நடித்திருந்தார். இவர் தன் தாய் மற்றும் மனைவி, குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். ராம்லீலா நாடகத்தில் நடித்த தல்பீர் ராவணனின் உருவ பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சியை நண்பர்களுடன் தண்டவாளத்தில் நின்று கண்டுகளித்துள்ளார். சற்றும் எதிர்பாராதவிதமாக வந்த விரைவு ரயில் தல்பீர் உட்பட 60 பேரின் உயிரைக் காவு வாங்கியது. தல்பீரின் தாய், மனைவி மற்றும் குழந்தை இந்தக் கோர விபத்திலிருந்து தப்பினர்.

இதுகுறித்து தல்பீரின் தாய் கூறுகையில், ``எனது மருமகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அவளுக்கு 8 மாதக் குழந்தை உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்துக்கு அரசு உரிய வகை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்திலிருந்து தப்பியவர்கள் கூறுகையில், ``தசரா விழாவில் பட்டாசு, மேளச் சத்தங்களினால் ரயில் வருவது தெரியவில்லை. அங்குக் கூடியிருந்தவர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதில் கவனமாக இருந்தனர். ரயில் அருகில் வந்தபோதுதான் எங்களுக்குத் தெரிந்தது. 300-க்கும் அதிகமானவர்கள் தண்டவாளத்தின் மீது நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், சில விநாடிகளில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நிறைய உடல்கள் அங்குக் கிடந்தன. சிலரது தலைகள் துண்டிக்கப்பட்டு கிடந்தன. உடல் பாகங்கள் சிதறிக்கிடந்தன. மூட்டுகள், கைகள் என தண்டவாளத்துக்கு அருகில் கிடந்தன. அந்த நிமிடங்களை விவரிக்க வார்த்தையே இல்லை. செல்போன் வெளிச்சத்தில் நண்பர்களையும், உறவினர்களையும் தேடினோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 31பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ரயில் சக்கரத்தில் சிக்கியதில் பலரது உடல்களை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.