Published:Updated:

நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி: பீதியில் மக்கள்!

நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி: பீதியில் மக்கள்!
நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி: பீதியில் மக்கள்!

நெல்லை: நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் அடுத்தடுத்து இரண்டு சிறுவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளதால், அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
 

நெல்லையில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி: பீதியில் மக்கள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரவிய டெங்கு காய்ச்சல், 50 உயிர்களை பலிவாங்கியது. அதன் பின்னர், மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

ஜனவரி மாதத்தில் இரண்டாவது கட்டமாக மீண்டும் பரவிய டெங்கு, 15க்கும் மேற்பட்டோரை பலிகொண்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சல் மாவட்டம் முழுவதும் பரவி வருகிறது. இதனால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடையநல்லூர், தென்காசி, கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மாநகர பகுதிகளில் மேலப்பாளையம், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகம்மது அப்துல்லா என்ற ஐந்து வயது சிறுவன், டெங்கு காய்ச்சலால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சோகம் மறைவதற்குள், புறநகர் பகுதியான துறையூரில் மூன்றாவது வகுப்பு படிக்கும் ரிஜோ என்ற சிறுவன் இன்று மரணமடைந்தான்.

கடந்த மூன்று தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட அந்த சிறுவன், கங்கைகொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தான். மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும், அந்தக் கிராமத்தில் குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பீதி நிலவுகிறது.

##~~##
கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பரவியபோதே சுகாதாரத் துறையினர் 2,500 தற்காலிக பணியாளர்களை நியமித்து கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்தினர். அவர்கள் அனைவரும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது பரவலாக பெய்துவரும் கோடை மழையால் கொசுக்கள் அதிகரித்துள்ளன. சுகாதாரத்தை மேம்படுத்தி கொசு ஒழிப்பைத் தீவிரப்படுத்தினால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும் என்பது பொதுமக்களின் கருத்து.
சுகாதாரத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இவற்றை கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட்டால் மட்டுமே, மேற்கொண்டு உயிர்பலி ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.
ஆண்டனிராஜ்