Published:Updated:

4 பெண்கள் பலி எதிரொலி: கோவையில் விதிமீறிய 201 கட்டிடங்கள் மீது நடவடிக்கை

4 பெண்கள் பலி எதிரொலி: கோவையில் விதிமீறிய 201 கட்டிடங்கள் மீது நடவடிக்கை
4 பெண்கள் பலி எதிரொலி: கோவையில் விதிமீறிய 201 கட்டிடங்கள் மீது நடவடிக்கை

கோவை: கோவையில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் இறந்த நிலையில், கோவையில் விதி மீறிய 201 கட்டடங்கள் மீதான நடவடிக்கையை உள்ளூர் திட்டக்குழுமம் இன்று தொடங்குகிறது. இதற்காக 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 

4 பெண்கள் பலி எதிரொலி: கோவையில் விதிமீறிய 201 கட்டிடங்கள் மீது நடவடிக்கை

கோவை அவினாசி சாலையில் லட்சுமி மில் சந்திப்பு அருகே விக்னேஸ்வர் பிளாசா வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் காலை ஏற்பட்ட தீ விபத்தி்ல் 4 பெண்கள் உடல் கருகி பலியானார்கள்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை மாநகர போலீசார், கட்டிடத்தின் மேலாளர் பாஸ்கரன் மற்றும் செர்கான் பங்குவர்த்தக நிறுவன மேலாளர் மோகன கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் கட்டிடத்தின் உரிமையாளர் ஆதித்யாவை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், கட்டிட விதிமீறலே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளதால், இது தொடர்பாக உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டு இருப்பதால் அதை இடிக்க உடனடியாக சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உள்ளுர் திட்ட குழும அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கருணாகரன் அறிவுறுத்தினார்.

அதன்படி கோவை மாநகரில் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக 201 வணிக வளாக கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இருப்பதாகவும், இவற்றிக்கு சீல் வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த கட்டிடங்கள் மீது இன்று முதல் நடவடிக்கையை துவக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக காவல் துறை, தீயணைப்பு துறை, வருவாய்துறை, நகரமைப்பு துறை ஆகிய துறைகள் கொண்ட கூட்டுகுழு அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழுக்களுக்கு 5 கட்டிடங்கள் வீதம் பிரித்து கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இந்த 201 கட்டிடங்கள் தவிர மற்ற கட்டடங்களில் விதிமீறல்கள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று மாலை முதல் விதி மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை முடிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ச.ஜெ.ரவி