Published:Updated:

பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!
பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

பிரீமியம் ஸ்டோரி

‘பேரிடர் மேலாண்மையைவிட பேரிடரே பரவாயில்லை’ எனப் பொங்க ஆரம்பித்துள்ளனர் மக்கள். ஆபத்துக் காலத்தில் உதவும் பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியை வைத்துப் பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டத்தால், கோவையில் கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் உயிர் பறிபோய்விட்டது. இதனால், மக்களின் கோபம் உச்சத்தில் உள்ளது.

பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

ஆபத்துக் காலத்தில் கைகொடுக்கும் பேரிடர் மேலாண்மை என்பது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒரு பாடப் பிரிவாகவே உள்ளது. அப்படி கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி ஜூலை 12-ம் தேதி நடந்தது. ‘தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர்’ என்று கூறிக்கொண்ட ஆறுமுகம் என்பவர், மூன்று பேரைக் கூட்டிக்கொண்டு கல்லூரிக்கு வந்தனர்.  மாடியிலிருந்து கயிற்றில் இறங்குவது, வலை விரித்துக் கீழே குதிப்பது போன்ற பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எந்த முன்அனுபவமும் இல்லாத கல்லூரி மாணவர்கள்தான், கீழே வலை பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, கயிற்றின் வழியாகக் கீழே இறங்குவதற்காகச் சென்ற,  பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஸ்வரியை, “நீங்க ஜம்ப் பண்ணுங்க” என்று கூறியுள்ளார் ஆறுமுகம். பயத்தில் அமர்ந்திருந்த லோகேஸ்வரியை வலுக்கட்டாயமாக ஆறுமுகம் பிடித்துத் தள்ள, முதல் மாடி சன்ஷேடில் அடிபட்டு மயங்கிக் கீழே சரிந்தார் லோகேஸ்வரி.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்குள், லோகேஸ்வரியின் உயிர் பிரிந்துவிட்டது. அந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான், “நாங்கள் அந்தப் பயிற்சியை நடத்தவில்லை. அந்தப் பயிற்சியாளர் எங்களின் துறையைச் சேர்ந்தவர் இல்லை” என்ற அதிர்ச்சித் தகவலைத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது. அடுத்தடுத்து, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் தொடங்கி கல்லூரி நிர்வாகம் வரை, “ஆறுமுகம் யாரென்றே தெரியாது” என்று கைவிரித்தனர். கைதுசெய்யப்பட்டுள்ள ஆறுமுகம் தனது முகநூல் பக்கத்திலேயே, ‘Trainer at NDMA’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆறுமுகம் ஒரு மாற்றுத்திறனாளி. இதுவரை, 1,200-க்கும் மேற்பட்ட கேம்ப்களை நடத்தியுள்ளது ஆறுமுகம் அண்ட் கோ.

பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

பேரிடர் தற்காப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மேலாண்மை சங்கத்தின் செயலாளர் சரவணகுமார், “இயற்கைச் சீற்றங்கள் நடைபெறும் பகுதிகளில் இதுபோன்ற பயிற்சிகள் அதிகம் நடக்கும். இதில், உறுப்பினராகச் சேருவது மிகவும் எளிது. ஏதாவது, மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தால்கூட, அவர்களின் பணியைப் பாராட்டித் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் சான்றிதழ் வழங்கும். மீனவர்கள் உள்பட சாமானியர்களும் இதில் உறுப்பினர் களாக இருப்பர். தங்களின் அனுபவத்தை மாணவர்களிடம் அவர்கள் பகிர்ந்துகொள்ள லாம். ஆனால், பயிற்சியளிக்கச் சில விதிமுறை கள் உள்ளன. ‘மாக்’ பயிற்சி கொடுப்பதற்கு கோர்ஸ்களும் உள்ளன. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்களோ, இந்த கோர்ஸ்களை முடித்த வர்களோதான் பயிற்சி அளித்துவந்தனர். பள்ளி, கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை என்பது இப்போது படிப்பாகவே உள்ளது. அதற்கும் சேர்த்துதான், கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன. அதுகுறித்த பயிற்சிக்காக, கல்லூரிகளே அழைப்பு விடுக்கும். அதைக் குறிவைத்துத்தான், பணம் சம்பாதிப்பதற்காகச் சில கும்பல்கள் கிளம்பியுள்ளன” என்றார்.

இதுதொடர்பாக வருவாய்த் துறை அரசு செயலாளர் சத்யகோபால், “தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பாக, எந்த ஒரு தனி நபரையும் நாங்கள் மாக் பயிற்சிகளுக்கு அனுமதிப்பதில்லை” என்றார்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு, “சம்பந்தப்பட்ட நபர்மீது கிரிமினல் ஆக்‌ஷன் எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை கிடைத்தபின்பு, வருவாய்த் துறை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் அதை அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்போம். இதுபோன்ற போலி பயிற்சியாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் உள்பட அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து முடிவுசெய்வோம்” என்றார்.

பேரிடர் மேலாண்மையை பிசினஸ் ஆக்கிவிட்டார்கள்!

“அந்த நபரை நாங்கள் அழைக்கவில்லை. அவர்தான் எங்களை அணுகினார். மெயில் மற்றும் தொலைபேசி உரையாடலின்போது, அவர் தன்னைத் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் போலி பயிற்சியாளர் என்பதை நாங்களே ஊடகங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது” என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே கல்லூரி நிர்வாகம், ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என்று தெரிவதற்கு முன்பாக, ‘லோகேஸ்வரி தடுக்கியே விழுந்தார்’ என்று கூறியிருந்தது. ஆனால், ஆறுமுகம் போலி என்று தெரிந்தவுடன் கல்லூரி நிர்வாகம் வாயே திறக்கவில்லை.

பேரிடர் மேலாண்மையை வைத்துப் பணம் பார்க்கும் கும்பல் ஒரு பக்கம் பீதியைக் கிளப்ப, மறுபக்கம் தங்கள் பெயர் டேமேஜ் ஆகிவிடக்கூடாது என்பதில் கல்லூரி நிர்வாகம் கவனமாக இருக்கிறது. மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையின் மனைவி பானுமதி, கலைமகள் கல்வி அறக்கட்டளையின் கௌரவத் தலைவர். இந்தக் கல்லூரி இருப்பது அமைச்சர் வேலுமணியின் தொகுதிதான். வேலுமணியே மாணவியின் வீட்டுக்குச் சென்று, அரசு அறிவித்த நிதியை அளித்து விட்டு, “உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க” என்று லோகேஸ்வரி குடும்பத்திடம் கூறியுள்ளார்.
 
அனுபவங்களிலிருந்து பாடம் கற்க வேண்டும். அதை அக்கறையுடன் நடை முறைப்படுத்த வேண்டும்.

- இரா.குருபிரசாத்
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு