Published:Updated:

குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!
குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

பிரீமியம் ஸ்டோரி

‘ஜெயலலிதா ஸ்வீட் சாப்பிட்டார்’ என்று அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா வுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் சாட்சியம் அளிக்க... ‘ஜெயலலிதாவுக்கு ஸ்வீட் வழங்கப்பட வாய்ப்பே இல்லை’ என்று செவிலியர் சொல்ல... குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது ஆறுமுகசாமி விசாரணை ஆணையம். ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து விசாரணை நடத்திவரும் இந்த ஆணையம், தினம் தினம் புதுப்புதுக் குழப்பங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

சசிகலா குடும்பத்தினர், போயஸ் கார்டன் ஊழியர்கள், அப்போலோ மருத்துவமனையின் ஊழியர்கள் என வரிசையாக விசாரணைப் படலத்தை நீட்டித்துவருகிறது ஆறுமுகசாமி ஆணையம். இந்த ஆணையத்தில், அப்போலோ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அளித்த வாக்குமூலங்கள் ஒருபுறம் பரபரப்பையும், மறுபுறம் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கு  ஜூலை 29-ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தப்படும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிவித்துள்ளது. இந்த விசாரணையின்போது, ஆணையத்தின் வழக்கறிஞர், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள், ஆணையம் தரப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கெடுப்பார்கள் என்று தெரிகிறது.

குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

குழப்பம்: 1 ஆணையத்துக்கு அப்போலோ மருத்துவமனை அளித்த அறிக்கையில், ‘2016 நவம்பர் மாதத்தில் ஒருநாள் பாதுஷா, ஜாங்கிரி, பாதாம் அல்வா உள்ளிட்ட ஸ்வீட்களை ஜெயலலிதா சாப்பிட்டார்’ என்று குறிப்பிடப் பட்டிருந்தது. ஆணையத்தில் ஆஜரான மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால், “மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்றதைக் கொண்டாடும்விதமாக ஸ்வீட் சாப்பிட்டார். இனிப்பு சாப்பிட்டதால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை” என்று கூறினார். அடுத்த சில நாள்களிலேயே, விசாரணைக்கு ஆஜரான அப்போலோ செவிலியர் ஹெலனா, “எனக்குத் தெரிந்தவரை ஜெயலலிதாவுக்குப் பழங்களோ, இனிப்பு வகைகளோ கொடுக்கப்படவில்லை” என்று சொன்னார். ஜூலை 17-ம் தேதி ஆஜரான அப்போலோ மருத்துவர் டாக்டர் வெங்கட்ராமன், ‘‘ஜெயலலிதாவுக்கு 1,200 கலோரி அளவுக்கு இனிப்பு கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவருக்கு இந்த அளவுக்கு இனிப்பு கொடுக்கக் கூடாது. நார்ச் சத்துள்ள பொருள்களையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சர்க்கரையின் அளவு குறையாமல் இருந்ததால், அவருக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப் பட்டுவந்தது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்வீட் சாப்பிட்ட விவகாரத்தில், அப்போலோ மருத்துவமனை தரப்பினரே இப்படிப் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

குழப்பம்: 2
மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, கவர்னர் உள்ளிட்ட சிலர், கதவில் இருந்த கண்ணாடி வழியாக ஜெயலலிதாவைப் பார்த்தார்கள் என்று சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், செவிலியர் ஹெலனா அளித்த வாக்குமூலத்தில், “ஜெயலலிதா அறையில் சசிகலா, டாக்டர் சிவக்குமார் ஆகியோரைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல், கண்ணாடி வழியாகவும் யாரும் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார்.

குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

குழப்பம்: 3 ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட டிசம்பர் 4-ம் தேதி மதியம் அவர், மதிய உணவை எடுத்துக்கொண்டார் என்று அப்போலோ மருத்துவர் ரமா, கேஸ் ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளார். அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த ரிப்போர்ட்டில், ‘டிசம்பர் 4-ம் தேதி காலை 50 மி.லி காபி சாப்பிட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செவிலியர் ஹெலனாவின் சாட்சியத்தில், “காலை உணவு மட்டுமே ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்டது. 2-ம் தேதியிலிருந்து வென்டிலேட்டரில்தான் ஜெயலலிதா வைக்கப்பட்டிருந்தார். 4-ம் தேதி முழுவதும் ஜெயலலிதாவுடனே இருந்தேன். என்னைத் தவிர யாரும் அவருக்கு மதிய உணவு அளிக்க வாய்ப்பில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்று மாலை டி.வி-யில் ஜெயலலிதா சீரியல் பார்த்துக்கொண்டிருந்ததாகவும், காபி கொண்டுவரப்பட்டபோதுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுடனே இருந்த ஹெலனாவின் வாக்குமூலத்தில் இதுகுறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.

குழப்பம்: 4 “ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி மாலை மாரடைப்பு ஏற்பட்டபோது, அவர் இருந்த அறையிலேயே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதைக் கண்டு நான் பதறி மருத்துவர்களிடம் கேட்டேன்” என்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சாட்சியம் அளித்திருந்தார். அன்று பணியில் இருந்த டாக்டர் ரமா, “ஜெயலலிதாவை ஆபரேஷன் அறைக்குக் கொண்டுசென்றோம்” என்று குறிப்பிட்டிருந்தார். டாக்டர் ஷில்பா வாக்குமூலத்தில், “மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, ஜெயலலிதா அறையிலிருந்து ஐ.சி.யூ அறைக்கும், அதன்பிறகு ஆபரேஷன் தியேட்டருக்கும் கொண்டுசெல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

அப்போலோ தரப்பு வாக்குமூலங்களில் ஏன் இத்தனை குளறுபடிகள்?

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: வெ.நரேஷ்குமார்

குளறுபடி வாக்குமூலங்கள்... ஜெ. மரணத்தில் குழப்பும் அப்போலோ!

எனக்கு சம்பந்தம் இல்லை!’

ணையத்தில் ஜூலை 16-ம் தேதி ஆஜராகுமாறு துக்ளக் ஆசிரியர் குரூமூர்த்திக்கு சம்மன் போயிருந்தது. அவர் சார்பில் வழக்கறிஞர் மட்டும் ஆஜராகி சில விளக்கங்களைக் கொடுத்துள்ளார். ‘ஜெயலலிதாவை மருத்துவ மனையில் நான் சந்திக்கவே இல்லை என்பதால், எனக்கும் இந்த விசாரணைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கு அனுப்பப்பட்ட சம்மனைத் திரும்பப் பெறவேண்டும்’ என்று குருமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு