Published:Updated:

நோயால் செத்து மடியும் நாட்டுக்கோழிகள் - கலங்கும் நெல்லை விவசாயிகள்

நோயால் செத்து மடியும் நாட்டுக்கோழிகள் - கலங்கும் நெல்லை விவசாயிகள்
நோயால் செத்து மடியும் நாட்டுக்கோழிகள் - கலங்கும் நெல்லை விவசாயிகள்

நெல்லை மாவட்டத்தில் அம்மை நோய் காரணமாக நாட்டுக்கோழிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நோயிலிருந்து கோழிகளைப் பாதுகாக்க சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆடு மாடு மற்றும் கோழி வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாயம் பொய்த்துப் போனாலும் இந்தக் கால்நடைகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்கிற நம்பிக்கையுடன் அவற்றை வளர்த்து வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சந்தையில் நாட்டுக்கோழிகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருவதால், அவற்றை மிகுந்த அக்கறையுடன் விளை நிலங்களில் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோழிகள், நோய் காரணமாக உயிரிழந்து வருவது விவசாயிகளை கவலை அடைய வைத்திருக்கிறது. குறிப்பாக, கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை, விஜயாபதி உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் கொத்துக் கொத்தாக செத்து மடிகின்றன. 

இது பற்றி கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டதற்கு, அம்மை நோயால் கோழிகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். அதனால் கோழிகளை ராதாபுரத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு விவசாயிகள் கொண்டு செல்கிறார்கள். ஆனால், அங்கு போதுமான அளவுக்கு அம்மை நோய்த் தடுப்பு மருந்துகள் கையிருப்பில்லை என்பதால் விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 

வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் திறந்தவெளிப் பண்ணைகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், அம்மை நோயிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கும் வகையில், கால்நடைத்துறையினர் விஜயாபதி, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.