Published:Updated:

நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

ளரியும் கதகளியுமாக மகிழ்ச்சியுடன் ஓணம் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்க வேண்டிய கேரள மக்கள், நிலச்சரிவின் இடிபாடுகளிலும் வெள்ளப்பெருக்கிலும் சிக்கி மரண அவஸ்தையை அனுபவித்துவருகிறார்கள்.

ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி, விடாமல் பெய்துவரும் மழையால் ஏற்பட்ட உயிரிழப்பு 256-க்கு மேல் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் மிகுந்த சோகத்துடன் அறிவித்திருக்கிறார். மழைநீர் வடிந்த பிறகு, சரிந்துவிழுந்த நிலப்பரப்பைக் கிளறிப் பார்த்தால்தான் எத்தனைப் பேர் இறந்திருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும். மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 58 அணைகள், நீர்வள ஆதார அமைப்பின்கீழ் 22 அணைகள் என மொத்தம் 80 அணைகள் கேரளாவில் உள்ளன. அனைத்து அணைகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. காட்டாற்று வெள்ளம், அணை திறப்பால் ஏற்பட்ட வெள்ளம், திடீரென ஏற்படும் நிலச்சரிவு என ஒட்டுமொத்த மாநிலமும் துவம்சமாகிக் கிடக்கிறது.

நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

கேரளத்தின் 14 மாவட்டங்களும் ஒருசேர வெள்ள அபாயத்தில் இருப்பதால், கப்பல் படையினரால் அனைவரையும் உடனடியாக மீட்க முடியாத நிலைமை ஏற்பட்டது. நெடுமங்காடு மீனவர்களின் உதவியைக் கேரள அரசு நாடியது. மீனவர்கள் தங்கள் படகுகளுடன் மீட்புப் பணியில் இறங்கினர். மீட்புப் பணிகள் நிறைவடைவதற்கே இன்னும் பல நாட்களாகும். இன்னும் கூடுதல் பேரிடர் மீட்புப்படையினர் உதவிக்கு வேண்டுமென்று மத்திய அரசிடம் கேட்டிருக்கிறார் முதல்வர் பினராயி விஜயன்.

“3,500-க்கும் அதிகமான மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. அதனால், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. கேரளத்தில் பல நகரங்களும், கிராமங்களும் தீவுகளாக மாறிவிட்டன. பத்தணம்திட்டா மாவட்டத்தில் மின்சாரம் இல்லாததாலும், மலையிலிருந்து பாய்ந்துவரும் காட்டாற்று வெள்ளத்தாலும் ராணுவத்தினரின் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. மூணாறு நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள மக்கள் அனைவரும் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், ஆலுவா, செங்கனூர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. கொல்லத்தில் கல்லிடையாறு, அச்சன்கோவில் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டனர். மழை குறையும் என்ற நம்பிக்கையில் மூடப்பட்ட அணைகளின் ஷட்டர்களை, ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து தீவிரமான கனமழையால் மீண்டும் திறக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பாணாசுர சாகர் அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

பம்பா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தந்திரிகள்கூட அங்கு செல்லமுடியாத நிலை. ஐயப்பசாமி கோயிலில் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியும், மாளிகைப்புறம் கோயிலில் அனீஸ் நம்பூதிரியும் பூஜை செய்துவருகிறார்கள். ஆடி மாதம் அத்தம் நட்சத்திரம், பஞ்சமி திதியில் நிறை புத்தரிசி பூஜை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். ஆகஸ்ட் 15-ம் தேதி, நிறை புத்தரிசி பூஜைக்காக நெல் பயிர்களை இரு இளைஞர்கள் ஆற்றில் நீந்திச்சென்று சபரிமலை கோயிலில் கொடுத்ததால், நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டது. மழை தொடர்வதால், 14 மாவட்டங்களுக்கும் மாறி மாறி ரெட் அலர்ட் என்னும் அதி தீவீர எச்சரிக்கை விடப்பட்டுள்ளது” என்கிறார்கள் அங்கு களத்தில் இருக்கும் அதிகாரிகள்.

மாநிலம் முழுவதும் சுமார் 250 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து தண்ணீர் எந்தப் பாதையில் வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை. மலையிலிருந்து எப்போது மண் சரிந்து விழும் என்று கணிக்க முடியவில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில் மட்டும் ஆகஸ்ட் 16-ம் தேதி நிலவரப்படி, 70 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு 5,204 பேர் தங்கவைக்கப்பட்டனர். கண்ணூர் மாவட்டத்தில் 13 முகாம்களில், 1,100 பேர் தங்க வைக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். எர்ணாகுளம் - சாலக்குடி பாதையில் ரயில் இயக்கப்படவில்லை.

நீரில் மூழ்கிய கேரளம்... மண்ணில் புதைந்த மனிதர்கள்!

“பிரளயம் ஏற்பட்டபோது கடற்படை, விமானப்படை, போலீஸ், தீயணைப்புத் துறை, அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என்று பல தரப்பினரும் இந்தத் துயரத்தைத் துடைப்பதற்காகக் களம் இறங்கியிருக்கிறார்கள். எந்தத் துயரத்தையும் எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இன்னும் தண்ணீர் பரப்பளவு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் அழைத்தால் உடனே வீட்டைவிட்டு வெளியேறிவிடுங்கள். எங்கள் பகுதியில் தண்ணீர் இல்லை என மெத்தனமாக இருந்து விடாதீர்கள்” என்று முதல்வர் பினராயி விஜயன் எச்சரித்துள்ளார்.

இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து கேரளம் முழுமையாக மீண்டுவர சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதற்கு மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு நிச்சயம் அவசியம்.

- ஆர்.சிந்து