Published:Updated:

``கறுப்புக் கவுனி கஞ்சினா ஐயாவுக்கு ரொம்ப இஷ்டம்'' - உடன் பயணித்த மேனகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``கறுப்புக் கவுனி கஞ்சினா ஐயாவுக்கு ரொம்ப இஷ்டம்'' - உடன் பயணித்த மேனகா
``கறுப்புக் கவுனி கஞ்சினா ஐயாவுக்கு ரொம்ப இஷ்டம்'' - உடன் பயணித்த மேனகா

``கறுப்புக் கவுனி கஞ்சினா ஐயாவுக்கு ரொம்ப இஷ்டம்'' - உடன் பயணித்த மேனகா

இந்த மாத தொடக்கமே சோகத்தோடுதான் ஆரம்பித்திருக்கிறது. ஆம், நெல் ஜெயராமன் ஐயாவின் இறப்புச் செய்தி. தோல் புற்றுநோய் காரணமாக இறந்த நெல் ஜெயராமனின் உடல் இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. நம்மாழ்வாருடன் பணியாற்றிய நெல் ஜெயராமன், அரிய வகை நெல் ரகங்களைப் பாதுகாத்து வந்தவர். இறப்புச் செய்தியிலிருந்து அவர் குடும்பம் விரைவாக மீளட்டும்.

நெல் ஜெயராமன் பயணத்தில் சில காலம் பணியாற்றியவர் சென்னையைச் சேர்ந்த மேனகா. `மண்வாசனை' என்ற பெயரில் பாரம்பர்ய நெல் பற்றிய விழிப்புஉணர்வில் ஈடுபட்டு வரும் மேனகா, தன் கணவர் விவசாய லட்சியத்தை நிறைவேற்றுவதற்காக அவர் இறந்த மூன்றாவது நாளிலிருந்து விவசாயக் களத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். 

``என் கணவர், `நெல் ஜெயராமன்' ஐயாவைப் பார்த்து, அவர் கூடவே இருந்து நெல் ரகங்கள் பற்றித் தெரிஞ்சிகிட்டார். நம்மாழ்வாருக்கு அப்புறம் இயற்கை விவசாயத்தைப் பாதுகாக்குறதுல ஜெயராமன் ஐயாவோட பங்கு குறிப்பிடத்தக்கது. விவசாயத்தில் இறங்க என் கணவருக்கு உத்வேகம் தந்ததே ஜெயராமன் ஐயாதான்.

ஐயா வருடம் தோறும் நெல் திருவிழான்னு நடத்துவாங்க. ஒருமுறை நாங்க காட்சிப்படுத்தியிருந்த திடலுக்கு வந்தவர் எங்களோட ஐம்பது அரிசி வகைகளை பார்த்துட்டு, `தொடர்ந்து நிறைய ரகங்களை சேகரிச்சு காட்சிப்படுத்துங்க'னு ஊக்கப்படுத்திட்டுப் போனார். பாரம்பர்ய அரிசியை நாங்க காட்சிப்படுத்தினதுக்கு முக்கியக்காரணம் ஐயாதான். பணம், உறவுகள் எல்லாம் வந்துவந்து போகும். `அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு வைச்சுட்டு போறது பாரம்பர்ய அரிசிகளா இருக்கணும்'னு அடிக்கடி நெல் ஜெயராமன் ஐயா சொல்லிட்டே இருப்பாங்க. வருங்கால சந்ததிகளுக்காக தன் ரத்தம், மூளை, எண்ணம்னு அத்தனையும் அர்ப்பணித்தவர். 

என் கணவர் இறந்த சமயம் ஐயா மருத்துவமனையில் இருந்தாங்க. அப்பக்கூட, மருத்துவமனையிலிருந்து நேரா எங்க வீட்டுக்கு வந்து எனக்கு ஆறுதல் சொல்லிட்டு, `என்ன உதவி வேணும்னாலும் கேளும்மா'ன்னு சொன்னார். பாரம்பர்ய நெல் ரகங்கள் பற்றிய விழிப்பு உணர்வுல நான் ஈடுபடப்போறன்னு சொன்னதும் என்னை முதல் ஆளா சப்போர்ட் பண்ணினது ஐயா மட்டும்தான். இப்ப ஐயா நம்மளை விட்டுப் பிரிஞ்சு போயிட்டார். ஒரு குருவை, ஆசானை இழந்துட்டுச் சொல்ல முடியாத துயர்ல தவிக்கிறேன்'' என்றவர் நெல் ஜெயராமன் பற்றிய சிந்தனையில் மூழ்கிப் போகிறார்.

சிறிது மீண்டவராக, ``ஐயாவுக்குக் கறுப்பு கவுனி அரிசியில் நான் பண்ற கஞ்சி ரொம்பப் பிடிக்கும். புற்று நோயால ஐயா ஆஸ்பத்திரியில் இருந்தப்போகூட அவருக்காகக் கறுப்புக் கவுனி அரிசி கஞ்சி செய்து எடுத்துட்டுப் போனேன். அதைக் குடிச்சிட்டு அவ்வளவு அருமையா இருக்குதுனு பாராட்டினார். இனி, அவர் மாதிரியான ஒரு ஆசானை, நெல் பாதுகாப்பாளரை பார்க்கிறது கடினம். இனி யார் விவசாயப் பணிகளை, விழிப்பு உணர்வுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துட்டுப் போவாங்கனு தெரியலை. இந்தத் தருணத்தில் அவருக்கு நாம் செய்ற அஞ்சலி வார்த்தைகளா இல்லாம, அவர் ஆன்மாவை திருப்திப்படுத்துற மாதிரி இருக்கணும். அதுக்கு விவசாயத்தை அடுத்த தலைமுறை வளர்க்க, நாம முன்னெடுத்துட்டு போகணும். பாரம்பர்ய நெல் வகைகளைப் பாதுகாக்கவேண்டும்'' என்று சொல்லி முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு