Published:Updated:

கல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

கல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்!
கல்லூரியில் விளையாடியபோது சென்னை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

சென்னை தாம்பரத்தில் உள்ள கல்லூரி மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது மயக்கமடைந்த மாணவி மகிமா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலையூர், பேராசிரியர்கள் காலனியில் குடியிருப்பவர் போதகர் ஜெயராஜ். இவரின் மகள் மகிமா (18). இவர், தாம்பரத்தில் உள்ள பிரபலமான கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். கல்லூரி வளாகத்தில் `ஸ்போர்ட்ஸ் பார் ஆல்' என்ற திட்டத்தில் அனைவருக்கும் விளையாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவி மகிமா, கூடைப்பந்து விளையாடியபோது மயக்கமடைந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாணவி மகிமா மரணத்துக்குச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே காரணம் என்று மாணவ, மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அவர்களிடம் சேலையூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர். 

இதற்கிடையில் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மாணவி மகிமாவின் உடல் அவரின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் இதுவரை போலீஸில் புகார் கொடுக்கவில்லை. மாணவி எப்படி இறந்தார் என்று மாணவர்கள் கூறுகையில், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் அனைவரையும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடக் கட்டாயப்படுத்தியுள்ளது. அப்போது, மகிமா, விளையாட விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவரை உடற்கல்லூரி இயக்குநர் ஒருவர் கட்டாயப்படுத்தியதால் வேறுவழியின்றி பயிற்சியில் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மயக்கமடைந்தார். ஆம்புலன்ஸ் வரத் தாமதமும் மாணவி இறப்புக்கு ஒரு காரணம். எனவே, விருப்பம் இல்லாத மாணவ, மாணவிகளை விளையாட்டுப் பயிற்சியில் கட்டாயப்படுத்தக் கூடாது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

சம்பவத்தன்று உணவு வேளைக்குப் பிறகு விளையாட்டு பயிற்சி நடந்துள்ளது. இதனால் சாப்பிட்டவுடன் மகிமா விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாணவி மகிமாவுக்கு ஹார்ட் அட்டாக் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் மாணவி மகிமாவின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளையாடும்போது மாணவி மகிமா இறந்தது கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.