Published:Updated:

`கைகூப்பிக் கெஞ்சினேன்; இரவு முழுவதும் அடித்தார்கள்!'- வாட்ஸ்அப் அனுப்பி உயிரை மாய்த்த டிரைவர்

`கைகூப்பிக் கெஞ்சினேன்; இரவு முழுவதும் அடித்தார்கள்!'- வாட்ஸ்அப் அனுப்பி உயிரை மாய்த்த டிரைவர்
`கைகூப்பிக் கெஞ்சினேன்; இரவு முழுவதும் அடித்தார்கள்!'- வாட்ஸ்அப் அனுப்பி உயிரை மாய்த்த டிரைவர்

நெல்லை மாவட்டம், கடையநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர், காவலர்கள் தாக்கியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், தளவாய் சுந்தரம். 30 வயது நிரம்பிய இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். அத்துடன், கடையநல்லூரில் உள்ள எஸ்.டி.பி.ஐ ஆட்டோ தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரை விரும்பிய நிலையில், பெண்ணின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், காவல்துறையினர் தளவாய் சுந்தரத்தை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது போலீஸார் தளவாய் சுந்தரத்தைத் தாக்கியுள்ளனர். விசாரணை முடிந்து வீட்டுக்கு வந்த அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர் அவர் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார். அதனால் தன் நண்பரான ஹக்கீம் என்பவருக்கு வாட்ஸ்அப் மூலம் தனக்கு ஏற்பட்ட சம்பவம் குறித்துத் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தளவாய் சுந்தரம் அனுப்பியுள்ள வாட்ஸ்அப் செய்தியில், ``என் பெயர் தளவாய் சுந்தரம். நான் ஆட்டோ டிரைவர். எங்கள் தெருவில் ஒரு பெண் பிரச்னையில் என்னை போலீஸார் மிரட்டினார்கள். இரண்டு காவலர்கள் என்னை இரவு முழுவதும் அடித்தார்கள். தகாத வார்த்தைகளால் திட்டினார்கள். எனக்கு இந்த உலகத்தில் வாழ விருப்பம் இல்லை எனது மரணத்துக்கு முழுக்காரணம், அருணா, இசக்கி மற்றும் என்னை அடித்த இரண்டு காவலர்கள்.

நான் காவலர்களிடம் கைகூப்பிக் கெஞ்சினேன். ஆனாலும், அவர்கள் என்னை அடித்தார்கள். எனக்கு மிகுந்த மனஉளச்சல் ஏற்பட்டுள்ளது. எனக்கு வாழவே விருப்பம் இல்லை. அதனால் நான் நமது எஸ்.டி.பி.ஐ-யின் எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகிய அனைவரும் உண்மையான கட்சி என்பதால், நீங்கள் அந்த இரு காவலர்களையும் மற்றும் அருணா, இசக்கியையும் உடனே கைது செய்ய வலியுறுத்த வேண்டும். நமது நண்பர்கள் அனைவரும் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் கடையநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.