Published:Updated:

திருட்டு வழக்கு... அதிகாலை லாக்கப் மரணம் - பதற்றத்தில் சென்னை போலீஸ் நிலையம்

திருட்டு வழக்கு... அதிகாலை லாக்கப் மரணம் - பதற்றத்தில் சென்னை போலீஸ் நிலையம்
திருட்டு வழக்கு... அதிகாலை லாக்கப் மரணம் - பதற்றத்தில் சென்னை போலீஸ் நிலையம்

சென்னை எஸ்பிளனேடு போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் மரணமடைந்ததால் அவரின் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரின் மகன் ஜெயக்குமார் (20). இவர், பிராட்வே பகுதியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். கடையின் மாடிப்பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. ஜெயக்குமாருடன், அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரும் வேலைசெய்கின்றனர். இந்தநிலையில் குடியிருப்பில் உள்ள வீட்டில் நகை திருட்டுப் போனது. இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்பிளனேடு போலீஸார் விசாரணை நடத்தினர். 

ஹார்டுவேர்ஸ் கடையில் வேலைப்பார்க்கும் ஜெயக்குமார், விக்னேஷ், அஜித்குமார் ஆகியோர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின்போது ஜெயக்குமார் இறந்தார். இதுகுறித்து இன்று அதிகாலை ஜெயக்குமாரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரின் உறவினர்களும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். விக்னேஷ், அஜித்குமாரை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தினர். 

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்களிடம் உதவி கமிஷனர் லட்சுமணன், இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வாக்குவாதம் நீடித்தது. அப்போது ஜெயக்குமாரின் பெற்றோர், உறவினர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக்கப்பில் வைத்து அடித்தே கொன்றுவிட்டதாக போலீஸார் மீது குற்றம்சாட்டினர். மேலும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் அங்கு விரைந்துவந்தனர். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஜெயக்குமாரின் உறவினர்களிடம் உறுதியளித்தனர். போலீஸ் நிலைய பகுதி மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பகுதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் ஜெயக்குமாரின் லாக்கப் மரணத்தையடுத்து இன்ஸ்பெக்டர் குணசேகரன், உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றப்பட்டுள்ளார். ஜெயக்குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருட்டு வழக்கு தொடர்பாக ஜெயக்குமார், அவருடன் வேலை பார்க்கும் விக்னேஷ், அஜித்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினோம். அப்போது திடீரென மயக்கமடைந்த ஜெயக்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில்தான் ஜெயக்குமார் எப்படி இறந்தார் என்ற தகவல் தெரியும்" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``ஜெயக்குமார் குறித்த முழு விவரங்களை கேட்டுள்ளேன். மேலும், பிரேத பரிசோதனை முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் குணசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செய்துள்ளோம்" என்றார். 
 
அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அறைமுன் காத்திருந்த ஜெயக்குமாரின் உறவினர்கள் கூறுகையில், ``போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஜெயக்குமாரை போலீஸார் அடித்து உதைத்துள்ளனர். இதனால்தான் அவர் இறந்துவிட்டார். ஆனால், உடல்நலக்குறைவால் ஜெயக்குமார் இறந்துவிட்டதாக எங்களுக்கு அதிகாலையில் போன் மூலம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். ஜெயக்குமாருடன் போலீஸ் நிலையத்தில் இருந்த அஜித்குமார், விக்னேஷ் ஆகியோரிடம் விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும். இதனால் அவர்களை போலீஸார் மறைத்துவைத்துள்ளனர். ஜெயக்குமாரின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அதுவரை அவரின் சடலத்தை நாங்கள் வாங்க மாட்டோம்" என்றனர். 

ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஆனந்த், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரின் உறவினர்களிடமும் போலீஸாரிடமும் விசாரணை நடத்தினார். மாஜிஸ்திரேட் ரிப்போர்ட் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.