Published:Updated:

`யாருமே உதவ முன்வரல’ - ஆந்திராவில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை மீட்கப் போராடும் மகள்

`யாருமே உதவ முன்வரல’ - ஆந்திராவில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை மீட்கப் போராடும் மகள்
`யாருமே உதவ முன்வரல’ - ஆந்திராவில் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை மீட்கப் போராடும் மகள்

வேலைக்குச் சென்றுவருவதாகக் கூறிவிட்டுச் சென்ற தந்தை இறந்த செய்தி கேட்டும், பணம் இல்லாமல் அவரது உடலை மீட்க முடியாமல் சிரமப்படும் மகள், தன் தந்தையின் உடலை மீட்க உதவி செய்யுமாறு இன்று தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தார்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சபரிமூர்த்தி. இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, கேரளாவுக்கு வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு கிளம்பியுள்ளார். அதன் பின்னர் வீட்டின் தொடர்பு முற்றிலும் இல்லாமல் இருந்துள்ளார். சந்தேகம் அடைந்த உறவினர்கள், சபரி மூர்த்தியைத் தேடியுள்ளனர். ஆனால், எந்தப் பலனும் இல்லை. அடிக்கடி, வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் செல்லும் சபரி மூர்த்தி, விரைவில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த அவரின் உறவினர்களுக்கு, பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்திலிருந்து வந்த தகவல் பேரிடியாக இருந்தது.
 

``எப்போதும் வெளி ஊர்களுக்கு வேலைக்குச் சென்றால் வீட்டுக்குத் தகவல் கொடுப்பார். ஆனால், இந்த முறை எந்தத் தகவலும் இல்லை. கேரளாவுக்கு வேலைக்குச் சென்றவர், இப்போது விஜயவாடா ரயில் நிலையத்தில் பிணமாக இருப்பதாகப் பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்துக்குத் தகவல் வந்திருக்கிறது. எப்படி ஆந்திரா சென்றார், எப்படி உயிரிழந்தார் எனத் தெரியவில்லை. விவரம் கேட்டதற்கு, ரயிலில் பயணம் செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக விஜயவாடா ரயில்வே காவல்துறை கூறுகிறது. என் அப்பாவின் உடலைப் பார்க்கச் செல்லக்கூட எங்களிடம் காசு இல்லை. தினமும் வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் சாப்பாடு என்ற நிலையில், என் அப்பாவின் உடலைத் தேனிக்குக் கொண்டுவர எல்லோரிடமும் உதவி கேட்டுவிட்டோம். யாருமே எங்களுக்கு உதவ முன்வரவில்லை. மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக இன்று மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம்” என்றார் சபரிமூர்த்தியின் மகள் சண்முக ஈஸ்வரி. அவரின் அம்மா பொன்னுத்தாய் உடன் இருந்தார்.