Published:Updated:

‘சுனாமி நினைவு தினம்’ - குமரி கடற்கரையில் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

‘சுனாமி நினைவு தினம்’ - குமரி கடற்கரையில் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி
‘சுனாமி நினைவு தினம்’ - குமரி கடற்கரையில் உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

சுனாமியால் கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் உயிரிழந்தவர்கள் மொத்தமாக அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

ஆழிப் பேரலையான சுனாமி கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தியாவைத் தாக்கியது. அதில் குமரி மாவட்டத்தின் கடலோர கிராமங்களான குளச்சல், கொட்டில்பாடு, மணக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 பேர் பலியானார்கள். பலரது உடல்களைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்குச் சேதம் இருந்தது. குளச்சல் ஏ.வி.எம். சானலில் பிணக்குவியல்கள் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் தோண்டி எடுக்கும் அளவுக்கு அவலநிலை ஏற்பட்டிருந்தது. ஒரு வாரத்துக்கும் மேல் உடல்கள் தேடும் பணி நடந்தது. குளச்சல் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 414 பேரின் உயிர் பறிபோனது. கொட்டில்பாட்டில் மட்டும் 199 பலியானார்கள்.

உடல்களைத் தனித்தனியாக புதைக்கக் கால அவகாசமும் இல்லை இடமும் இல்லை என்பதால் அந்தந்த ஊர்களில் ஒரே இடத்தில் மொத்தமாகப் புதைத்தனர். மணக்குடி மீனவக் கிராமத்தில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சொல்லி அழக்கூட குடும்பத்தில் ஒருவர் கூட இல்லாமல் மொத்தமாக இறந்த சம்பவங்கள் நடந்தன. பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இறந்த பெற்றோர் என மக்கள் வாழ்வில் மறக்கமுடியாத துயரத்தை ஏற்படுத்திய சுனாமி பேரலையின் 14-வது நினைவு தினம் குமரி மாவட்டத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. மணக்குடி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்திராயர் தேவாலயத்தில் இன்று காலை நினைவு திருப்பலி நடந்தது. திருப்பலியில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். 

தேவாலயத்தில் இருந்து மௌன ஊர்வலமாகச் சுனாமியால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு வந்த உறவினர்கள் அங்கு கண்ணீருடன் அஞ்சலி  செலுத்தினர். சுனாமி பேரழிவால் தங்கள்  உறவினர்களைப் பலி கொடுத்தவர்கள் பலர் ஆறாத துயரத்துடன் கதறி அழுதது கண் கலங்கச் செய்தது. குளச்சல் மற்றும் கொட்டில்பாடு மீனவர் கிராமங்களிலும் சுனாமி நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது. சுனாமி நினைவு தினமான இன்று குமரி கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.