Published:Updated:

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று! தற்கொலைக்கு முயன்ற ரத்த தானம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு

கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று! தற்கொலைக்கு முயன்ற ரத்த தானம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு
கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று! தற்கொலைக்கு முயன்ற ரத்த தானம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில் ரத்த தானம் கொடுத்த கமுதி இளைஞர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுகாதாரத் துறை ஊழியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் இந்தநிலைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி பல்வேறு தரப்பினும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள ஐவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. 

கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தைத் தானமாகக் கொடுத்த கமுதி திருச்சிலுவைபுரத்தைச் சேர்ந்த இளைஞர், கடந்த சில நாள்களுக்கு முன்னர் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவர் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அவர் இன்று காலை 8.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிகாலை 3.30 மணியளவில் ரத்த வாந்தி எடுத்த அவருக்கு ஒரு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுகுறித்து பேசிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் (பொறுப்பு) சண்முகசுந்தரம், `அந்த இளைஞர் உயிரிழப்புக்கும் ஹெச்.ஐ.வி தொற்றுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. அவர் உட்கொண்ட விஷம் காரணமாகவே  அவர் உயிரிழந்தார்’ என்று தெரிவித்தார்.