Published:Updated:

காற்றில் கலந்த விதைநெல்

காற்றில் கலந்த விதைநெல்
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் கலந்த விதைநெல்

காற்றில் கலந்த விதைநெல்

காற்றில் கலந்த விதைநெல்

காற்றில் கலந்த விதைநெல்

Published:Updated:
காற்றில் கலந்த விதைநெல்
பிரீமியம் ஸ்டோரி
காற்றில் கலந்த விதைநெல்

“கஜா புயலால ஆதிரெங்கத்துல பெரிய பாதிப்பாமே... 30 ரகங்களுக்கு மேல அறுவடைக்குத் தயாரா இருந்துச்சு. என்னாகும்னு தெரியலே. அந்த வெளைச்சலை வச்சுத்தான் அடுத்த வருஷத்துக்கு நெல் திருவிழா நடத்தணும்...”

சென்றவாரம், ‘நெல்’ ஜெயராமனை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை.

வதங்கிய பூவைப்போலக் கிடந்தார். உடம்பெல்லாம் வெள்ளை படர்ந்திருந்தது. வார்த்தைகள் நாவில் ஒட்டிக்கொண்டன. பேசச் சிரமப்பட்டார். கண்களில் மட்டும் ஒளி மங்கவில்லை. மருத்துவர்கள், `நல்லவிதமா பாத்துக்கோங்க’ என்று சொல்லிவிட்டார்கள். ஆனால், ஜெயராமன் இயற்கையை நம்பினார்.  `நிச்சயம் சென்னையின் மருத்துவ வாடையிலிருந்து மீண்டுபோய் ஆதிரெங்கத்தில் நெல் திருவிழா நடத்துவோம்’ என்று நம்பினார். ஆனால், காலம் பறித்துக்கொண்டுவிட்டது. வியாழக்கிழமை அதிகாலை இயற்கையில் கலந்தார்.  

காற்றில் கலந்த விதைநெல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயராமனுக்குச் சொந்த ஊர், திருத்துறைப் பூண்டியை அடுத்துள்ள ஆதிரெங்கம். அப்பா, பெரிய விவசாயி. தொடக்கத்தில் ஜெயராமனுக்கு விவசாயத்திலெல்லாம் பெரிய ஈடுபாடில்லை. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஓர் அச்சகத்தில் வேலை செய்தார். நுகர்வோர் அமைப்புகளில் ஈடுபாடு வர, ‘ஃபெட்காட்’ அமைப்பில் சேர்ந்து பணியாற்றினார்.  நம்மாழ்வாரின் நட்பு, இயற்கை வேளாண்மையின் பக்கம் திருப்பியது.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகப் போய்  இயற்கை வேளாண்மை பற்றி பிரசாரம் செய்தார். அந்தத் தருணத்தில் ஒரு விவசாயி தான் சேர்த்து வைத்திருந்த காட்டுயானம், பூங்கார் நெல்ரகங்களைக் காட்ட, தொடங்கியது ஜெயராமனின் தேடல்.

எல்லாப் பக்கமும் அலைந்து திரிந்து விவசாயிகளைச் சந்தித்து பாரம்பர்ய நெல் ரகங்களைத் திரட்டினார். சேகரித்த நெல்லை தன் வயலில் விதைத்துப் பெருக்கி ஆர்வமுள்ள விவசாயிகளுக்குக் கொடுத்துப் பரவலாக்கினார். அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பர்ய நெல்ரகங்கள் உயிர் மீண்டன. இந்த ரகங்களுக்கு இருந்த சந்தைமதிப்பைப் பார்த்து பல விவசாயிகள் முழுமையாக பாரம்பர்ய இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினார்கள்.

இந்தப் பாரம்பர்ய விதைநெல் பரிமாற்றத்தை பெரும்திருவிழாவாக நடத்தத் தொடங்கினார். `நெல் திருவிழா’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த விழாக்களில் இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் பங்கேற்பார்கள். ஒரு விவசாயிக்கு 2 கிலோ வீதம் பாரம்பர்ய நெல் விதைகள் வழங்கப்படும். அதைப் பயிர் செய்து பெருக்கி அடுத்தாண்டு திருவிழாவில் நான்கு கிலோவாகத் திருப்பித்தரவேண்டும். இப்படி ஒன்றரை லட்சம் விவசாயிகள் கைகோத்திருக்கிறார்கள். 174 நெல் ரகங்கள் மீட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

2014-ல்  பிலிப்பைன்ஸில் உள்ள, `உலக நெல் ஆராய்ச்சி  நிறுவனம்’ நடத்திய கருத்தரங்கத்தில் பங்கேற்றார் ஜெயராமன். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய சில மாதங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டது. சோதனைகளுக்குப் பிறகு வந்திருப்பது `மெலிக்னென்ட் மெலனோமா’ (Malignant melanoma) எனப்படும் தோல் புற்றுநோய் என்பது தெரியவந்தது.

கடந்தவாரம் சந்திப்பின்போது, “தமிழ்நாட்டுல பத்தாயிரம் நெல் ரகங்கள் இருந்துச்சு. எல்லா ரகங்களையும் அமெரிக்காவுல இருக்கிற சில தனியார் நிறுவனங்கள் கொண்டு போய் சேமிச்சு வச்சுட்டாங்க. எதிர்காலத்துல, பேடன்ட் வாங்கிட்டு நம்மகிட்டையே விப்பாங்க. அதையெல்லாம் மீட்கணுன்னா பெரிய பெரிய நிறுவனங்களோட போராடணும். நிறைய பேர் வரணும்” என்றார்.

``வர்ற மே மாதம் நெல் திருவிழா வேலைகள் இருக்கு... உடம்பு இங்க கெடந்தாலும், மனசு வயக்காட்டுல கெடக்கு. அந்த இயற்கை, நிச்சயம் என்னைக் குணப்படுத்தி ஆதிரெங்கத்துக்கு அனுப்பி வைக்கும். வேலை நிறைய கெடக்கு...” என்று நம்பிக்கையோடு சிரித்தார். அருகில் நின்ற ஜெயராமனின் அண்ணன் கண்கலங்கினார். 
 
இறுதியில் இயற்கை ஜெயராமனைத் தன்னில் கரைத்துக்கொண்டது..!

வெ.நீலகண்டன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism