Published:Updated:

`கார்ல லேடி இருந்தும் அசிங்கமா போலீஸ்காரர் பேசினாரு!'- தற்கொலைக்கு முன் டிரைவர் வாக்குமூலம்

`கார்ல லேடி இருந்தும் அசிங்கமா போலீஸ்காரர் பேசினாரு!'- தற்கொலைக்கு முன் டிரைவர் வாக்குமூலம்
`கார்ல லேடி இருந்தும் அசிங்கமா போலீஸ்காரர் பேசினாரு!'- தற்கொலைக்கு முன் டிரைவர் வாக்குமூலம்

`என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம்' என்று தற்கொலைக்கு முன் டிரைவர் ஒருவர் வீடியோவில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். 

சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் பேசும் நபர், தன்னை டிரைவர் என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பிறகு அவர், ``இன்று காலையில 8 மணியிருக்கும், நான், அம்பத்தூர் பாடியிலிருந்து கோயம்பேடுக்கு காரில் சென்றேன். அண்ணாநகர் முதல் சிக்னலில் ஒரு பெண் எம்ப்ளாயை ஏற்றிக்கொண்டு இன்னொருவருக்காக சிக்னல் அருகே உள்ள குப்பைத் தொட்டியின் அருகே காத்திருந்தேன்.  அங்கு, 2 போலீஸ்காரர்கள் வந்தார்கள். பின்னால் லத்தியால் காரை அடித்தனர். பிறகு, வண்டியை இங்கு நிறுத்தாதே என்று சொன்னார்கள். உடனே காரை அங்கிருந்து எடுத்துக்கொண்டு தள்ளிப்போய் நிறுத்தினேன். ரோடு காலியாகத்தான் இருந்தது. அதன்பிறகு, அங்கு வந்த போலீஸ்காரர்கள் என்னைப்பார்த்து அசிங்கம் அசிங்கமாகத் திட்டினர். உடனே நான், சார் உள்ளே பெண் கஸ்டமர் இருக்கிறார் என்று கூறியதை அந்த போலீஸ்காரர் கேட்கவில்லை. இதனால் அந்த இடத்திலிருந்து வேறு இடத்தில் காரை நிறுத்தினேன். போலீஸ் யூனிபார்முக்காக மரியாதை கொடுத்தேன். போலீஸ்காரர் மட்டும் யூனிபார்மை கழற்றிவிட்டு வந்திருந்தால் நானும்... வேண்டாம் அப்படிப் பேசினால் நல்லா இருக்காது. எங்க போனாலும் போலீஸ்காரர்களால் தொல்லையாக இருக்கிறது.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்,  திருவொற்றியூர் சர்வீஸ் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு இரவில் படுத்திருந்தேன். உள்ளே நான் இருக்கும்போதே, போலீஸார் காரை லாக் செய்தனர். பிறகு, நோ பாக்கிங்கில் காலை நிறுத்தியதற்காக 500 ரூபாய் அபராதம் கேட்டார்கள். உடனே நான் பில் கேட்டேன். என்னையே எதிர்த்துப் பேசுகிறாயா என்று அந்த போலீஸ்காரர் கேள்வி கேட்டார். அங்கேயும் அசிங்கம் அசிங்கமாகத் திட்டினர். போலீஸ் இப்படிப் பண்ணலாமா? போலீஸ் தப்பு பண்ணினால் என்ன பண்றது. நீங்கள் வைப்பதுதான் சட்டம். நாங்கள் ஒருநாளைக்கு எவ்வளவு நேரம் வண்டி ஓட்டுகிறோம் தெரியுமா? காலையில் 5 மணிக்கு எழுந்து நைட் தூங்க இரவு ஒன்றரை மணி ஆகும். மூன்றரை மணி நேரம்தான் தூங்குகிறோம். என் சாவுக்கு சென்னை போலீஸ்தான் காரணம். ஒவ்வொரு டிரைவரும் டெய்லி செத்துச் செத்து வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். நோ பாக்கிங் என்றால் அபராதம் போடுங்க. 

என்னோடு இது முடியட்டும். தரமணியில் இதுபோலத்தான் ஒரு டிரைவர் இறந்தார். அதன்பிறகு  ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? சம்பந்தப்பட்டவர்களை இடமாற்றியதாக போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். இடமாற்றினால் மட்டும் போதுமா. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் நடவடிக்கை எடுங்க. இல்லையென்றால், மக்களிடம் கொடுத்திடுங்க" என்பதோடு அந்த வீடியோ முடிகிறது. 

இதையடுத்து, வீடியோவில் பேசிய டிரைவரின் சடலத்தை  தாம்பரம் ரயில்வே போலீஸார், தண்டவாளம் அருகிலிருந்து கைப்பற்றியுள்ளனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்த டிரைவரின் பெயர் ராஜேஸ் (25) என்றும்  காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.  

இதுகுறித்து சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``டிரைவர் ராஜேஸ் தற்கொலை குறித்தும் அவர் வீடியோவில் பேசியது குறித்தும் விசாரித்து வருகிறோம். அண்ணாநகர் சிக்னல் பகுதியில் டிரைவர் ராஜேஸிடம் அநாகரிகமாக போலீஸ்காரர்கள் பேசினார்களா என்று விசாரணை நடந்துவருகிறது. விசாரணையில் அது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ராஜேஸின் அண்ணன் கௌதமிடம் பேசினோம். "என்னுடைய தம்பி ராஜேஸ், தற்கொலை செய்த தகவலை 25.1.2019-ல் தாம்பரம் ரயில்வே போலீஸார் தெரிவித்தனர். சிங்கப்பெருமாள் கோயிலுக்கும் மறைமலைநகர் ரயில் நிலையத்துக்கும் இடையே ராஜேஸ் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறினர். பிரேதப் பரிசோதனைசெய்து ராஜேஸின் சடலத்தை எங்களிடம் போலீஸார் ஒப்படைத்தனர். அப்போது அவரின் உடமைகளையும் எங்களிடம் கொடுத்தனர். ராஜேஸின் செல்போன் சார்ஜ் இல்லாமல் இருந்தது. புதன்கிழமை (30.1.2019) செல்போனை சார்ஜ் போட்டு பார்த்தேன். உள்ளே எதுவும் இல்லை. பேக்-அப் எடுத்து பார்த்தபோது, ராஜேஸ் பேசிய வீடியோ இருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். என் தம்பியின் மரணம் குறித்து போலீஸிடம் புகார் கொடுக்க உள்ளோம்" என்றார்.