Published:Updated:

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்

அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் மரணம்

நாகை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் திடீரென மரணம் அடைந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

நாகை மாவட்டம், பொறையாருக்கு அருகேயுள்ள காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமமூர்த்தி-கம்சலா தம்பதிக்கு நான்கு குழந்தைகள். வாழ்க்கையில் வறுமையை விரட்ட இருவருமே கூலி வேலைக்கு சென்றனர்.

காவிரி நீர் கிடைக்காததால் விவசாயமும் கைவிட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையில் செங்கல் சூளைக்கு சென்று கல் அறுக்கும் வேலை செய்து வந்தனர் ராமமூர்த்தி தம்பதியினர்.

இந்தநிலையில், கடைசி குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கிராம செவிலியர் ஒருவரின் அறிவுரையின்படி அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்தார் கம்சலா. அதற்காக கடந்த 9 ஆம் தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு வந்து அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சையை கொஞ்சம் தள்ளிப்போட்டார்கள்.  இந்த நிலையில், உடல்நிலை சீராக இருந்ததால் நேற்று மதியம் 12 மணிக்கு மருத்துவர் சைமித்யாபானு தலைமையில் கம்சலாவுக்கு  அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

##~~##
மயக்கம் தெளியாத நிலையில் இருந்த கம்சலா மாலை 5 மணிக்கு நினைவு திரும்பாமலே இறந்து போனார். நான்கு குழந்தை பெற்றும் நலிவுற்ற உடல்நிலை கொண்ட கம்சலா மருத்துவர்களின் தவறான அறுவை சிகிச்சையால் தான் இறந்தார் என உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, மயிலாடுதுறை ஆர்.டி.ஓ சிவப்பிரியா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உடலை பரிசோதனை செய்து மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பதற்றம் தணிந்திருக்கிறது. ஆனாலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனையில் திரண்டு பிரேதப் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
கரு.முத்து