Published:Updated:

எதற்காக தற்கொலை செய்தார் காவலர் மணிகண்டன்?- துப்பாக்கியால் சுடுவதற்கு முன் வந்த போன்கால் 

எதற்காக தற்கொலை செய்தார் காவலர் மணிகண்டன்?- துப்பாக்கியால் சுடுவதற்கு முன் வந்த போன்கால் 
எதற்காக தற்கொலை செய்தார் காவலர் மணிகண்டன்?- துப்பாக்கியால் சுடுவதற்கு முன் வந்த போன்கால் 


சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரின் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த மணிகண்டன் குறித்து பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னைக் கீழ்ப்பாக்கத்தில் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரின் தலைமை அலுவலகத்தில் காவலர் மணிகண்டன் (27) நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலில் வலதுபக்க காதுப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தது. கீழ்ப்பாக்கம் போலீஸார் மணிகண்டனின் இறப்பு குறித்து விசாரித்துவருகின்றனர். எதற்காக மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டார் என்பதே ஒட்டுமொத்தக் காவலர்களின் கேள்வியாக உள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காவலர் மணிகண்டனின் சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகில் உள்ள வெளியகரம். இவரின் அப்பா கண்ணன், அம்மா ராதா. இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. மணிகண்டனுக்குத் திருமணமாகவில்லை. பி.எஸ்சி படித்த அவர், 2017-ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பயிற்சி முடிந்து 2018-ல் ஆவடி வீராபுரத்தில் காவலராகப் பணியில் சேர்ந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கீழ்ப்பாக்கத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வாரவிடுமுறையில் சொந்த ஊருக்குச் செல்வார். 

கடந்த 2-ம் தேதி மணிகண்டனுக்கு 27 வது பிறந்தநாள். பிறந்தநாளை நண்பர்கள், சக காவலர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அதன்பிறகுதான் 3-ம் தேதி வேலைக்கு வந்தார். வந்த சில மணி நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். அவர், கல்லூரியில் படித்த காலகட்டத்தில் ஒரு பெண்ணைக் காதலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் பெண்ணுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. அதன்பிறகு மனவருத்தத்தில் மணிகண்டன் இருந்ததாக அவருடைய நண்பர்கள் மூலம் தெரியவந்துள்ளது. 

இதனால் மணிகண்டனின் தற்கொலைக்குக் காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும் அவரின் இறப்புக்கான காரணத்தை விசாரித்துவருகிறோம். அவரின் செல்போன் அழைப்புகளை நாங்கள் ஆய்வு செய்தபோது தற்கொலை செய்வதற்கு முன் ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் யார் என்று விசாரித்துவருகிறோம். அதோடு மணிகண்டன் குறித்த தகவல்களைச் சேகரித்துள்ளோம். குடும்பப் பிரச்னையா அல்லது தனிப்பட்ட பிரச்னையா இல்லை வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சமீபகாலமாக சென்னையில் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்வது தொடர்கதையாகிவருகிறது. அயனாவரம் போலீஸ் நிலைய வளாகத்துக்குள் 2018 மார்ச் மாதத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்போது மணிகண்டன் தற்கொலை செய்திருக்கிறார். ஜெயலலிதா நினைவிடத்தில் காவலர் அருண்ராஜ், பரங்கிலமலையில் காவலர் கோபிநாத் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளனர். இதுதவிர இன்னும் சில காவலர்கள் தற்கொலை செய்துள்ளனர். காவலர்கள் தற்கொலையைத் தடுக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் காவலர்களின் குறைகளை கேட்டறிய கூட்டமும் நடத்தப்பட்டது. இருப்பினும் சொந்தக் காரணங்களாலும் பணிச்சுமை காரணங்களாலும் காவலர்கள் தற்கொலைச் சம்பவங்கள் நடப்பதாக எங்களுக்கு ரிப்போர்ட் வந்துள்ளது.  எதிர்காலத்தில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வழிவகை செய்யப்படும்.

மேலும், மணிகண்டன் வைத்திருந்த துப்பாக்கியில் ஒரே ஒரு தோட்டா மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. இதனால்தான் அவர் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து தற்கொலை செய்துள்ளார். மணிகண்டனுடன் பணியாற்றிய சக காவலர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. பணிக்கு வரும்போது அவர் எந்த மனநிலையில் இருந்தார் என்றும் விசாரித்துவருகிறோம். பிறந்தநாள் கொண்டாடியபோது அவரின் செயல்பாடுகள் எப்படியிருந்தன என்றும் விசாரித்துவருகிறோம். விசாரணையின் முடிவில்தான் மணிகண்டனின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும்" என்றார். 

இதற்கிடையில் மணிகண்டன் தற்கொலை செய்த தகவல் அவரின் உறவினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக மணிகண்டனின் சடலம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரின் சடலத்துக்கு போலீஸ் உயரதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன், மணிகண்டனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பிரேத பரிசோதனை முடிந்து மணிகண்டனின் சடலம் இறுதிஅஞ்சலிக்காக அவரின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.