Published:Updated:

`அண்ணன் மீதிருந்த கோபத்தில் தம்பிக்கு விஷம் கொடுத்து கொலை?' - போராட்டத்தில் இறங்கிய ஊர் மக்கள்

விகடன் விமர்சனக்குழு
`அண்ணன் மீதிருந்த கோபத்தில் தம்பிக்கு விஷம் கொடுத்து கொலை?' - போராட்டத்தில் இறங்கிய ஊர் மக்கள்
`அண்ணன் மீதிருந்த கோபத்தில் தம்பிக்கு விஷம் கொடுத்து கொலை?' - போராட்டத்தில் இறங்கிய ஊர் மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்ணனின் காதல் பிரச்னையால் அவரின் தம்பி மர்மமான முறையில் மரணமடைந்த விஷயம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் அய்யம்பேட்டை கடைத்தெருவில் மொபைல் சர்வீஸ் சென்டர் நடத்திவருகிறார். கடந்த 22.1.2019 அன்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் கடைக்குச் சென்றுள்ளார். மதியம் உணவு உண்ண வரவில்லை. இரவும் வீட்டுக்குத் திரும்ப வராத நிலையில், பெற்றோர்கள் மொபைலுக்கு தொடர்புகொண்டுள்ளனர். மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையில், வயதின் காரணமாக போலீஸுக்குப் புகார் ஏதும் கொடுக்காமல் இருந்துள்ளனர்.

ஆனால், நீண்ட நேரமாக வராததால் போலீஸில் மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக சாகுல் ஹமீது தாயார் காவல்துறைக்கு அளித்த புகாரில், 'என் மகன் காணாமல் போன பிறகு, சக்கராப்பள்ளி சாதிக் நகர் தெருவில் முதல் வீட்டில் வசித்து வரும் சாதிக் பாட்சா என்பவர், தன் மகள் சஃப்ரினா பிர்தெளஸ் காணவில்லை என்றுகூறி, இன்று இரவுக்குள் வீட்டுக்கு வராவிட்டால் என்னையும் என் குடும்பத்தையும் கொலை செய்வதாக மிரட்டினார். அத்துடன் என்னையும் என் குடும்பத்தினரையும் மிரட்டினார். 24.1.2019 அன்று மதியம் 2.30 மணியளவில், சக்கராப்பள்ளியைச் சேர்ந்த முகமது மஜீது, வழுத்தூரைச் சேர்ந்த மதனி, மாத்தூர் டேனி, மதனியின் மைத்துனர் அப்துல் சமது மற்றும் பெண்ணின் தந்தை சாதிக் பாட்சா ஆகியோர் என் அக்கா மகன் யாசினை கடத்தி உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளனர். மறுநாள் என் இளைய மகன் பைசல் ரஹ்மானை அழைத்து சாகுல் ஹமீதின் லேப்டாப்பை கொண்டுவந்து தருமாறு பெண்ணின் தந்தை சாதிக்பாட்சா அவர் வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கிருந்தவர்கள் லேப்டாப்பை வாங்கிக்கொண்டு பைசல் ரஹ்மானுக்கு டீ, பிஸ்கட் கொடுத்து வற்புறுத்திக் குடிக்க வைத்து, அனுப்பிவிட்டனர்' எனக் கூறியிருந்தார்.

``வீட்டுக்கு வந்த பைசல் ரஹ்மான் ரத்தம் ரத்தமாக வாந்தியெடுத்தார். அவரை உடனே அய்யம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். உயிருக்கு ஆபத்தாக உள்ளதாகவும், உடனே தஞ்சாவூர் செல்லுமாறும் கூறியதன் பொருட்டு, தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு 11 நாள்கள் சிகிச்சை மேற்கொண்டும் உடல்நிலை மோசமான நிலையில், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தோம்.

என் தம்பி பைசல் ரஹ்மானுக்கு கொடுத்த டீயில் விஷம் கலந்திருப்பது தஞ்சாவூர் மருத்துவமனை பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது. மேலும், என் தம்பி மரண வாக்குமூலம் எழுதிவைத்துள்ளான். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் தொடர்ந்து அலட்சியப்போக்கையே மேற்கொண்டு வந்தனர். சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்ந்துகொண்டு காவல்துறையே எங்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தது' என்கிறார் பைசல் ரஹ்மானின் மூத்த அண்ணன் ஆசாத்.

இந்த நிலையில், நேற்று இரவு 1.30 மணிக்குப் பைசல் ரஹ்மான் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆத்திரமடைந்த ஊர் மக்கள், அவர் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டம் நடத்தினர். பைசல் ரஹ்மானைக் கொலை முயற்சி செய்த பெண்ணின் தந்தை உட்பட்ட நபர்களை உடனே கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த பைசலின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று காவல்துறையினர் வாக்குறுதி அளித்தனர். பதற்றமான நிலையினால் காவல் துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.