Published:Updated:

`ராணுவ வீரர்கள் மரணமடைந்த தகவலை டி.வி-யில் பார்த்து அழுதுட்டோம்' - கலங்கிய சிறுவர்கள்

`ராணுவ வீரர்கள் மரணமடைந்த தகவலை டி.வி-யில் பார்த்து அழுதுட்டோம்' - கலங்கிய சிறுவர்கள்
`ராணுவ வீரர்கள் மரணமடைந்த தகவலை டி.வி-யில் பார்த்து அழுதுட்டோம்' - கலங்கிய சிறுவர்கள்

புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த 40 துணை ராணுவ வீரர்களுக்காக நாடே கண்ணீர் வடிக்கிறது. அதற்குக் காரணமான தீவிரவாத அமைப்புக்கு எதிராகக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், குளித்தலையில் நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சியில், சிறுவர்கள் பலர் ஆர்வமாகக் கலந்துகொண்டனர். மெழுகுவத்தி  ஏற்றி அஞ்சலிசெலுத்தினர். அதோடு, குளித்தலை முழுக்க பேரணியாக நடந்துபோய், "நாங்களும் ராணுவ வேலைக்குப் போவோம். தீவிரவாதிகளை அழிப்போம்" என்று சூளுரைத்து நெகிழ வைத்தனர்.


 

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரனும் அடங்குவர். இவர்களுக்காக தமிழ்நாடு எங்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிப் பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்பு, குளித்தலை காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, குளித்தலையில் உள்ள இன்னும் சில அமைப்புகளும் சேர்ந்து கைகளில் மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி ஊர்வலம் நடத்தினர்.

குளித்தலை பெரியபாலம் தொடங்கி மாரியம்மன்கோயில் வீதி, பஜனை மடம்,பேரளம்மன் கோயில் தெரு வழியாகப் பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து கடம்பர் கோயில் கடைவீதி வழியாக சுங்ககேட் வரை ஊர்வலம் சென்றனர். இந்த அத்தனை நிகழ்ச்சிகளிலும் ஏராளமான சிறுவர்கள் கலந்துகொண்டு, தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்காக மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலிசெலுத்தினர். அதோடு, ராணுவ வீரர்கள் பற்றி உருக்கமாகப் பேசினர். அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முகமது ரஹில், இளமாறன், விஷ்வந்த் மற்றும் சுகித் ஆகிய சிறுவர்கள்,  "ராணுவ வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலில் மரணமடைந்த தகவலை டி.வி-யில் பார்த்து அழுதுட்டோம்.

ராணுவ வீரர்கள் பற்றியும், அவர்களது சேவை பற்றியும் எங்கள் ஆசிரியர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். புத்தகங்களிலும் படித்திருக்கிறோம். இந்நிலையில், இவ்வளவு வீரர்கள் தீவிரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து பதைபதைத்து போய்ட்டோம். அதற்காக, குளித்தலையில் மௌன அஞ்சலி செலுத்துறாங்கன்னு தெரிஞ்சதும் ஆர்வமா வந்து கலந்துகிட்டோம்.

இங்கே, பலரும் ராணுவ வீரர்கள் பற்றிப் பேசியது எங்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. படிச்சு பெரிய ஆளா ஆனதும், நாங்களும் ராணுவ வீரர்களா ஆவோம். தீவிரவாதிகளை அழிப்போம்" என்று பேச, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் அவர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினர்.