Published:Updated:

50 பெண்களின் தலைகளை வெட்டி வீசிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் - சிரியாவில் பிரிட்டன் வீரர்கள் கண்ட கொடூரக் காட்சி

50 பெண்களின் தலைகளை வெட்டி வீசிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் - சிரியாவில் பிரிட்டன் வீரர்கள் கண்ட கொடூரக் காட்சி
50 பெண்களின் தலைகளை வெட்டி வீசிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் - சிரியாவில் பிரிட்டன் வீரர்கள் கண்ட கொடூரக் காட்சி

சிரியா... இந்தப் பெயருக்குள் சொல்லில் அடங்காத் துயரங்கள் புதைந்துகிடக்கின்றன. சிரியாவில் 2010-ம் ஆண்டு, அங்கு பதவியில் இருந்த பஷார் அல் ஆசாத்திற்கு எதிராக புரட்சி தொடங்கியது. அரசுக்கு எதிராக மக்களால் தொடங்கப்பட்ட புரட்சி, ஆயுதக் கிளர்ச்சியாக உருவெடுத்தது. அதன் பாதைகள் மெள்ள மாறத் தொடங்கியது. சிரியாவுக்குள் தற்போது பல நாடுகள் மறைமுகமாகத் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றன. கிளர்ச்சியாளர்களுக்கு ஒரு தரப்பும், அரசுப்படைகளுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் சண்டையிட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தக் கூட்டத்தை எல்லாம் ஒழித்துக்கட்ட வேண்டும் என ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் ஒரு பக்கம் மல்லுக்கட்டுகின்றனர். தங்களது நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் அப்பாவி பொதுமக்களும், குழந்தைகளும் கொல்லப்படுகின்றனர். தங்களது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கையில் எடுத்த மக்கள், இன்று அகதிகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணப்படுகின்றனர். இந்தப் பயணத்தில், கடலில் மாண்ட உயிர்கள் ஏராளம். தஞ்சமடைய முடியாமல் ஒவ்வொரு நாட்டின் எல்லையிலும் தவிக்கும் கூட்டங்கள் அதிகம். இந்தத் துயரங்களுக்கு மத்தியில், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் பாதுகாப்பு முகாம்களில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லில் அடங்காதவை.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பாதாள அறைகளில், பிரிட்டன் வீரர்கள் கண்ட அந்தக் கொடூரக் காட்சிகள், அவர்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது என பிரிட்டனின் ஸ்பெஷல் ஏர் சர்வீஸ் (SAC) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது . கிழக்கு சிரியாவில், இந்த மாதம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் பிரிட்டன் படையினருக்கும் நடைபெற்ற சண்டையில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த இரண்டு பிரிட்டன் வீரர்கள், ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதையடுத்து, அந்தப்பகுதியில் இருந்த ஐஎஸ்ஐஎஸ் படையினர் வெளியேறினர். அங்கு இருந்த பாதாள அறைகளிலிருந்து 600 வெடிகுண்டுகள் மற்றும் 1000-க்கும் அதிகமான இயந்திரத் துப்பாகிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  இந்த அறைகளில் 50 பெண்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் கிடந்துள்ளன. தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத பயங்கரவாதிகள், இந்தக் காட்டு மிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.


5 வருடங்களுக்கு முன்பு, கிழக்கு சிரியாவை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இந்த நகரத்தில் சுரங்கங்கள் அமைத்து செயல்பட்டுவந்துள்ளனர். வான்வெளித் தாக்குதலின்போது, பயங்கரவாதிகள் இந்தச் சுரங்கங்களில் சென்று பதுங்கிக்கொள்கிறார்கள். இவர்கள், யாஜிடி பெண்களைப் பாலியல் அடிமையாக பிடித்துச் சென்றுள்ளனர்.  இந்த மாதம் நடந்த போரில் பிரிட்டனின் கைகள் ஓங்கின. இந்த ஆத்திரத்தில், பாலியல் அடிமைகளாகப் பிடித்துவந்த 50 பெண்களின் தலையை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசிச்சென்றுள்ளனர். மேலும், தங்களது அமைப்பில் இருந்த சிலர் மீது ஏற்பட்ட சந்தேகங்களினால் அவர்களையும் கொன்று உடல்களை வீசிச்சென்றுள்ளனர். பயங்கரவாதிகள், மக்களோடு மக்களாகக் கலந்து இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர். சிரியாவில் இருக்கும் இதுபோன்ற சுரங்கங்களைக் கண்டறிந்தால், அங்கு என்னென்ன கொடுமைகள் நடந்தேறியுள்ளன என்பது தெரியவரும் என்கின்றனர், பிரிட்டன் அதிகாரிகள்.