Published:Updated:

ஒரு வருடத்தைக் கடந்த குரங்கணி தீ விபத்து... என்ன சொல்கிறார்கள் மக்கள்?

ஒரு வருடத்தைக் கடந்த குரங்கணி தீ விபத்து... என்ன சொல்கிறார்கள் மக்கள்?
ஒரு வருடத்தைக் கடந்த குரங்கணி தீ விபத்து... என்ன சொல்கிறார்கள் மக்கள்?

ஒரு வருடத்தைக் கடந்த குரங்கணி தீ விபத்து... என்ன சொல்கிறார்கள் மக்கள்?

நாட்டை உலுக்கிய சம்பவங்களில் குரங்கணி காட்டுத் தீ விபத்தும் ஒன்று. இந்தச் சம்பவம் நடைபெற்று இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. கடந்த வருடம் இதே நாளான மார்ச் 11-ம் நாள்தான் இந்தச் சம்பவத்தில் சிக்கி, 23 பேர் பலியான சோகம் இன்னும் மக்கள் மனங்களில் ஆறாத வடுவாக இருக்கிறது. இந்நிலையில், அதை அருகே இருந்து பார்த்த குரங்கணி மக்கள் எப்படி இருக்கிறார்கள்... அந்நினைவுகள் அவர்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன... குரங்கணி கிராமத்துக்குப் புறப்பட்டோம்.

``யார் பெத்த புள்ளைங்களோ தெரியல?’’

``சம்பவம் நடந்த அன்னைக்கு முந்தைய நாள்தான் எல்லாப் புள்ளைங்களும் இங்குவந்து இறங்குச்சு… மொத்தமா கொழுக்குமலைக்குப் போறோம்னு சொல்லி, கடைகளில் தண்ணி, திண்பண்டமெல்லாம் வாங்கிட்டுப் புறப்பட்டுப் போச்சுங்க… அடுத்த நாள் மதிய நேரம் காட்டுத்தீயில் மாட்டிக்கிட்டதா செய்தி வந்துச்சு… எங்களுக்கு உசுறே போச்சு…” என்று பேச ஆரம்பித்தார், குரங்கணி அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையம்மாள்.

“ஒவ்வொரு புள்ளைங்களா டோலி கட்டி தூக்கிட்டு வரும்போது, யார் பெத்த புள்ளைங்களோ தெரியலையே… இங்க வந்து உசுர விடணும்னு இருக்கேனு தோணுச்சு. இந்தச் சம்பவத்துக்கு அப்புறம் எங்க கிராமத்துல மூணு நாளைக்கு யாருமே உலை வைக்கவில்லை… எல்லோரும் அந்த மலையையே பார்த்துட்டு அழுதுட்டு இருந்தோம்” என்று குரல் தழுதழுத்துப் பேசினார்.

``மலையைப் பார்த்தாலே அந்த ஞாபகமா இருக்கு…’’

“முன்னெல்லாம் தனியா நிக்குற மரத்தையும் தாண்டி ஆடு, மாடு மேய்ப்பார்கள்… விறகு எடுக்கச் செல்வார்கள். இந்தச் சம்பவம் நடந்ததுக்குப் பிறகு யாருமே அந்தப் பக்கம் போவதில்லை. கொழுக்குமலைக்கு வேலைக்குச் செல்பவர்கள்கூட இப்போதெல்லாம் சூரியநெல்லி வழியாகத்தான் செல்கிறார்கள்.

சும்மா அந்த மலையை அண்ணாந்து பார்த்தால்கூட 23 பேர் தீயில் கருகிப் பலியான அந்தச் சம்பத்தின் ஞாபகமாவே இருக்கு” என்றார் குரங்கணியைச் சேர்ந்த தமிழரசன்.

``என் கையாலதான் எல்லோரையும் தூக்கினேன்!’’

குரங்கணி தீ விபத்தைக் கேள்விப்பட்ட உடன், சிலரை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு முதலில் விரைந்தவர் குரங்கணியைச் சேர்ந்த ராணுவ வீரர் பாக்கியராஜ். அவருடன் பேசியபோது, “தீவிபத்து நடந்து ஒரு வருடம் ஆன மாதிரி தெரியல. போன வாரம் நடந்தது மாதிரி இருக்கு. நாங்க முதலில் அங்க போய்ப் பார்த்தபோது எல்லோரும் பள்ளத்தில் எரிந்த நிலையில் கிடந்தாங்க… உடனே அவர்களைத் தூக்கினோம்.

என் கையால அவங்களைத் தூக்கி நாங்க போட்டிருந்த துணிகளை எடுத்து அவர்களுக்குப் போர்த்திவிட்டோம். அதை இப்போ நினைத்தால்கூட மனசு பதறுது. இப்படி ஒரு சம்பவம் எங்குமே நடக்கக் கூடாது” என்றார்.

உதவியவர்களை ஒடுக்க நினைக்கும் வனத்துறை :

``ட்ரெக்கிங் சென்றவர்கள் காட்டுத்தீயில் சிக்கிய செய்தி கேட்டதும் முதலில் ஓடியது குரங்கணி, முதுவாகுடி கிராம மக்கள்தான். அவர்களைத் தூக்கி டோலிகட்டி தங்கள் தோள்களில் தூக்கிவந்தார்கள். அச்சம்பவத்துக்குப் பிறகு, வனத்துறை அதிக அளவில் கட்டுப்பாடுகளை விதித்து அம்மக்களை முடக்க நினைத்தது. கடைசியாக முதுவாகுடி கிராமத்துக்குச் சென்றுகொண்டிருந்த பாதையை மூடியது வனத்துறை. இதுசம்பந்தமாக கலெக்டரிடம் முறையிட்டோம். எந்தப் பயனும் இல்லை. இதே கலெக்டர்தான், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் அதிகம் உதவியதற்கு நன்றி சொன்னார்.

இப்போது பிரச்னை என்றதும் அமைதியாகிவிட்டார். இப்பகுதியில் அஞ்சலி செலுத்த துணை முதல்வர்  வந்தார். அவரிடம், முதுவாகுடி மக்கள் முறையிட்டனர். பிரச்னையைத் தீர்ப்பதாக உறுதியளித்தார். 23 பேர் தீயில் கருகிப் பலியானதைக் கண்கொண்டு பார்த்து இப்போதுவரை மனதுக்குள் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கும் இப்பகுதி பழங்குடியின மக்களை, மேலும் வேதனைப்படுத்துவது எந்த விதத்திலும் நியாயமாகாது” என்றார் குரங்கணியைச் சேர்ந்த பாஸ்கரன்.

குரங்கணி, முட்டம், மேல் முட்டம், கீழ் முட்டம், நரிப்பட்டி, முதுவாகுடி, சாலப்பாறை ஆகிய பழங்குடியின குடியிருப்புகளைக் கொண்டுள்ள குரங்கணி மலைப்பகுதியில் வசிக்கும் யாரைக் கேட்டாலும், “குரங்கணி காட்டுத்தீ சம்பவம் இன்னும் எங்க நெஞ்சுக்குள்ளேயே இருக்கு” என்றுதான் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு