Published:Updated:

``முடிவுக்கு வந்த சகாப்தம்” - கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் இயக்குநர் மகேந்திரன் உடல் அடக்கம்!

``முடிவுக்கு வந்த சகாப்தம்” - கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் இயக்குநர் மகேந்திரன் உடல் அடக்கம்!
``முடிவுக்கு வந்த சகாப்தம்” - கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் இயக்குநர் மகேந்திரன் உடல் அடக்கம்!

``முடிவுக்கு வந்த சகாப்தம்” - கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் இயக்குநர் மகேந்திரன் உடல் அடக்கம்!

கண்ணீர் குரல்களுக்கு மத்தியில் மந்தைவெளி கொண்டுவரப்பட்ட மகேந்திரன் உடல் மேரிஸ் சர்சில் அடக்கம் செய்யப்பட்டது. 

இதில் சரத் பாபு, கோபி நயினார், ஜீவன், ஏஎல் விஜய் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். சந்தனப்பேழையில் வைத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை பள்ளிக்கரணையில் மறைந்த இயக்குநர் மகேந்திரனின் இறுதி ஊர்வலம் நடக்கிறது. இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள் மற்றும் திரைத்துறையினர் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். மந்தவெளியிலுள்ள மேரிஸ் சர்சில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

இயக்குநர் லெனின் பாரதி, பாலா, வசந்தபாலன், சேரன், அமீர், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் ரமேஷ் கண்ணா, பாண்டியராஜன் ஆகியோரும் நேரில் வந்து மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமாக கமல்ஹாசன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள இயக்குநர் மகேந்திரனின் வீட்டுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ``எனக்கே என்னை அடையாளம் காட்டியவர் இயக்குநர் மகேந்திரன். நடிப்பின் புதிய பரிணாமத்தை எனக்கு கற்றுக்கொடுத்தவர். எதற்காகவும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர். தமிழ் சினிமா உள்ளவரை இயக்குநர் மகேந்திரனுக்கென்று தனி இடம் இருக்கும். இயக்குநர் மகேந்திரன் உடன் சினிமாவைத் தாண்டி நட்பு உள்ளது” என புகழஞ்சலி செலுத்தினார். 

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன்,  இயக்குநர்கள் மணிரத்னம், அகத்தியன், திரு,  நடிகைகள் வரலட்சுமி, சுஹாசினி, ராதிகா, நடிகர் மோகன், சந்தானபாரதி, தலைவாசல் விஜய்  ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். 

அதன் பின்னர் வந்த இயக்குநர் பாரதிராஜா, மகேந்திரனின் உடலைப் பார்த்து, சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி அழுதார். 

மகேந்திரன் மறைவு தொடர்பாக ட்வீட் செய்துள்ள பி.சி ஸ்ரீராம்,  `மகேந்திரன். அவர் குறைவாகப் பேசுவார். ஆனால், அவரது படங்கள் அதிகம் பேசும். எனக்கு அவரது படங்கள் மிகப்பெரிய உத்வேகம் தரும். உதிரிப்பூக்கள் படம் பார்த்துவிட்டுத் தூங்காமல் இருந்த நாள்களை எப்படி மறக்க முடியும்’ எனப் பதிவிட்டுள்ளார். 

தி.மு.க தலைவர் ஸ்டாலின்,  ``தமிழ்த் திரையுலக இயக்குநர்களில் கதாநாயகராக விளங்கியவர் இயக்குநர் மகேந்திரன். எளிமைக்கு இலக்கணம் - யதார்த்த சினிமா இயக்குநர் - வசனகர்த்தா - நடிகர் என பன்முகத் திறமை கொண்ட இயக்குநர் மகேந்திரனின் மறைவு பேரிழப்பு! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்திருக்கிறார். 

நடிகை ரேவதி நேரில் வந்து இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.   

கவிஞர் வைரமுத்து மகேந்திரனின் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நவீன சினிமா கண்ணீர் சிந்துகிறது. செயற்கை நாடகத்தன்மை கொண்ட தமிழ்த் திரைப்படங்களைச் செவ்வியல் தன்மைக்கு உயர்த்திக் காட்டிய இயக்குநர்களில் உன்னதமானவர் மகேந்திரன். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் கொடுத்தவர். நாவல்களைத் திரைப்படமாக்கிப் படைப்பிலக்கியத்துக்குப் பக்கத்தில் திரைப்படத்தைக் கொண்டுவந்தவர்.

‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்’ என்று ஒரு புகழ்பெற்ற நடிகரைக் கேள்வி கேட்டார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர். நடிகர் பதில் சொன்னார் ‘மகேந்திரன்’ என்று. கேள்வி கேட்டவர் கே.பாலசந்தர்; பதில் சொன்னவர் ரஜினிகாந்த். ‘மகேந்திரன் பாணிதான் என்னுடைய பாணி’ என்று என்னிடம் மனம்விட்டுப் பேசும்போது சொல்லியிருக்கிறார் மணிரத்னம். இன்றைய இளம் இயக்குநர்களுள் பலருக்குக் காட்சிப் படிமங்களைக் கற்றுத் தந்தவர் மகேந்திரன். இப்படி ஒரு தலைமுறையைத் தன் படைப்பாளுமையால் பாதித்தவர் மகேந்திரன். 

‘ஒரு குதிரை வீரன் பாட்டுப்பாடிக்கொண்டே எப்படிப் பயணம் செய்ய முடியும்?’ என்ற மகேந்திரனின் கேள்விதான் எம்.ஜி.ஆரையே அவரை நோக்கித் திருப்பியது. ‘தங்கப் பதக்க’த்தில் அவர் எழுதிய `அழகான தவறு’ என்ற வசனம் சிவாஜியைப் போலவே மறக்க இயலாதது. 

எனது கலைவாழ்க்கைக்கும் மகேந்திரனுக்கும் மறக்கமுடியாத ஓர் உறவுண்டு. திரையுலகில் பாரதிராஜாவுக்கு நான் எழுதிய முதல் பாட்டு ‘பொன்மாலைப் பொழுது’ என்றாலும் நான் பாட்டெழுதி முதலில் வெளிவந்த படம் ‘காளி’. அந்தப் படத்தின் கதாசிரியராய் இருந்த மகேந்திரன்தான் அந்தப் பாடலின் கதைச் சூழலைச் சொல்லி என்னை எழுத வைத்தார்.

புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற நாவலைத் தழுவிப் படைக்கப்பட்ட அவரது உதிரிப்பூக்கள் இந்திய சினிமாவின் நல்ல படங்களுள் ஒன்று. ‘வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை’ என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி. இன்னும் நீண்ட காலங்களுக்கு அவர் நினைக்கப்படுவார். இத்தனை பெரிய கலை இயக்குநரின் நதிமூலம் ஒரு பத்திரிகையாளர் என்பது பெருமைக்குரியது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் கலையன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். 

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 79. அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு