Published:Updated:

`மொழிகளைக் கடந்த இலக்கியவாதி' - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்துவந்த பாதை

`மொழிகளைக் கடந்த இலக்கியவாதி' - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்துவந்த பாதை
`மொழிகளைக் கடந்த இலக்கியவாதி' - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்துவந்த பாதை

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் இன்று அதிகாலை நெல்லையில் காலமானார். அவருக்கு வயது 75. நெல்லை பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்களின் அஞ்சலிக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.  

`மொழிகளைக் கடந்த இலக்கியவாதி' - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்துவந்த பாதை


குமரி மாவட்டத்தின் தேங்காய்பட்டனம் பகுதியில் உள்ள ஒரு தோப்பு வீட்டில் 1944-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பிறந்தார், தோப்பில் முகமது மீரான். தமிழக கேரள எல்லைப் பகுதியில் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளையும் பேசும் மக்கள் வசித்தார்கள். தோப்பில் முகமது மீரான் தனது பள்ளிப் படிப்பை மலையாளத்தில் படித்தார். 

பின்னர் மலையாள மொழியில் பி.ஏ பட்டம் பெற்றார். அந்தக் காலகட்டத்தில் பிரபலமான மலையாள எழுத்தாளரான வைக்கம் முகமது பஷீரின் எழுத்துகளால் கவரப்பட்டார். அதனால் மலையாள மொழியிலேயே தொடக்கத்தில் எழுதி வந்தார். அவரது எழுத்துகள் எளிய மக்களின் மீது கரிசனத்தைக் காட்டுவதாக இருந்தன.

பின்னர் திருவனந்தபுரத்தில் வசித்த சாகித்ய எழுத்தாளரான அ.மாதவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் நிறைய தமிழ்ப் புத்தகங்களைக் கொடுத்து படிக்க வைத்தார். அதன் பின்னர் தானும் தமிழில் எழுத வேண்டும் என்கிற ஆர்வமும் ஆசையும் அவருக்கு ஏற்பட்டது. மலையாளத்தில் கல்வி கற்றதால் எழுத்து நடையில் தமிழில் எழுதுவதற்குச் சற்று சிரமம் ஏற்பட்டது. அதனால் அவர் சொல்லச் சொல்ல வேறொருவர் எழுதிக் கொடுத்தார். ஆனால், விரைவிலேயே நேரடியாகத் தமிழில் எழுதக் கற்றுத் தேர்ந்து சிறப்பாக எழுதத் தொடங்கினார். 

தமிழில் அவர் முதலாவதாக எழுதிய `ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’ இலக்கிய வட்டாரத்தில் கொண்டாடப்பட்டது. ஆனால், அந்தக் கதை ’முஸ்லிம் முரசு’ பத்திரிகையில் வெளிவந்தபோது யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. அந்தச் சமயத்தில் அவருக்குத் தமிழ் பதிப்பாளர்கள் யாரையும் தெரியாது என்பதால் 1988-ம் தானே பதிப்பித்தார். அந்த நாவல் இலக்கியவாதிகளின் கவனத்தைக் கவர்ந்தது. 

`மொழிகளைக் கடந்த இலக்கியவாதி' - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்துவந்த பாதை


பின்னர் அவருக்கு எழுத்தாளர் சுந்தர ராமசாமியுடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு கடலோரக் கிராமத்தின் கதை நாவலை சுந்தர ராமசாமியிடம் அவர் கொடுத்தார். அந்த நாவலைப் படித்துப் பார்த்த சுந்தர ராமசாமி, அதில் இருந்த எழுத்து நடையால் கவரப்பட்டார். அதன் பின்னர் இருவரும் நெருக்கமான நண்பர்களானார்கள். 

வசதி வாய்ந்த ஒரு குடும்பம் அனைத்தையும் இழந்தது குறித்து `சாய்வு நாற்காலி’ என்ற நாவலை எழுதினார். அந்த நாவலுக்கு 1997-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. துறைமுகம், அஞ்சு வண்ணம் தெரு, கூனன் தோப்பு, குடியேற்றம் ஆகிய நாவல்களும் அவருடைய பெயரைச் சொல்லும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தன. வைக்கம் முகமது பஷீரின் சுயசரிதையை மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.     

`மொழிகளைக் கடந்த இலக்கியவாதி' - எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் கடந்துவந்த பாதை


`அன்புக்கு முதுமை இல்லை, ஒருகுட்டித் தீவின் வரிப்படம்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்தவராகத் திகழ்ந்த தோப்பில் முகமது மீரான் தனது 75-வது வயதில் மரணம் அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுத் திரும்பினார். இந்த நிலையில் 10-ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு ஜலீலா என்ற மனைவியும் ஷமீம் அகமது, மிர்ஷாத் அகமது ஆகிய இரு மகன்களும் உள்ளனர். 

அவரது உடலுக்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மலரஞ்சலி செலுத்தினார். மார்க்சிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளரான கே.ஜி.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகுரு, த.மு.எ.க.ச நெல்லை மாவட்டத் தலைவரான எழுத்தாளர் நாறும்பூநாதன், கவிஞர் கிருஷி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்திய பின்னர், தோப்பில் முகமது மீரானின் உடல் அடக்கம் நெல்லையில் ரகுமான் பேட்டை,  ஜும்மா மசூதியில், நடைபெற்றது. 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு