Published:Updated:

`ஆசையாக ஏரிக்குக் குளிக்கக் கிளம்பினாங்க...!’- புதுக்கோட்டை சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்

Representational Image
Representational Image

வீட்டிற்கு அருகே உள்ள ஏரிக்குக் குளிக்கச் சென்ற சிறுமிகள் இருவரும் ஏரியில் படர்ந்திருந்த தாமரைக் கொடியில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில் அருகே பழங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகள் பவதாரணி(18), ராயப்பன் மகள் பிரியா(16). இவர்கள் விடுமுறை நாள்களில் இந்தப் பகுதியில் உள்ள வெளிவயல் ஏரியில் குளிப்பது வழக்கம். தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில்தான் நீண்ட நாள்களுக்குப் பிறகு சிறுமிகள் ஆசையாகக் குளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வழக்கத்தை விடவும் சற்றே கூடுதல் தூரத்திற்குச் சென்று குளித்தாகத் தெரிகிறது. அங்கு படர்ந்து இருந்த தாமரைச் செடிக்குள் இருவரின் கால்களும் மாட்டிக் கொண்டாதக் கூறப்படுகிறது. இதனால், வெளியே வரமுடியாமல் சிக்கித் தவித்து அலறல் சத்தம் போட்டுள்ளனர். அப்போது, ஏரிப்பகுதிக்கு யாரும் வராததால், தண்ணீரில் இருவரும் மூழ்கினர். மாலை நேரத்தில் ஏரிக்கு வந்த ஒருவர் பார்த்துவிட்டு கிராம மக்களுக்குத் தகவல் கொடுத்தார்.

Representational Image
Representational Image

இதையடுத்து, கிராம மக்களே இருவரையும் மீட்டு மீமிசல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமிகளைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இருவரின் உடல்களையும் வீட்டுக்கு எடுத்து வந்த உறவினர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து 10க்கும் குறைவானவர்களே கலந்துகொண்டு இருவரின் உடலையும் அடக்கம் செய்தனர். இதுபற்றி ஆவுடையார்கோயில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி போலீஸார் கூறும்போது,``கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களைத் தொடர்ந்து அத்தியாவசியத் தேவை தவிர்த்து வெளியே வரவேண்டாம் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், துர்திஷ்டவசமாக சிறுமிகள் இறப்புச் சம்பவம் நடந்துள்ளது. சிறுவர், சிறுமிகளை ஏரிக்கு அனுப்பக்கூடாது என்று இங்குள்ளவர்களிடம் வலியுறுத்தி உள்ளோம். தொடர்ந்து, கண்காணிக்கவும் உள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு