அலசல்
Published:Updated:

ஆக்ஸிஜன் கசிவு... மூச்சுத்திணறல்... துடிதுடித்து இறந்த 24 உயிர்கள்!

ஆக்ஸிஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன் கசிவு காரணமாக டேங்க் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் வெண்புகை பரவியிருந்ததால், கசிவு ஏற்பட்ட இடத்தை உடனே அடையாளம்காண இயலவில்லை.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நாடே மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் நிலையில், ஆக்ஸிஜன் விநியோகம் தடைப்பட்டதால் நாசிக்கில் 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது அச்சமூட்டுகிறது. மருத்துவமனை வளாகமெங்கும் எதிரொலிக்கும் உயிரைப் பறிகொடுத்த உறவுகளின் கதறல்கள், இதயத்தை அறுக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கிலுள்ள ஜாஹீர் உசேன் மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தார்கள். இங்கு மொத்தம் 157 நோயாளிகள் ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்தனர். நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு வெளியே இரண்டு டேங்க் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து மருத்துவமனைக்குள் ஆக்ஸிஜன் செல்லும் குழாயில், ஏப்ரல் 21-ம் தேதி பிற்பகல் 12:30 மணிக்கு திடீரெனக் கசிவு ஏற்பட்டது.

ஆக்ஸிஜன் கசிவு காரணமாக டேங்க் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் வெண்புகை பரவியிருந்ததால், கசிவு ஏற்பட்ட இடத்தை உடனே அடையாளம்காண இயலவில்லை. தீயணைப்புத் துறையினரும், டெக்னீஷியன்களும் கசிவாகும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கே 20 நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. அதன் பிறகு, ஒரு மணி நேரம் போராடிய பிறகே அந்தக் கசிவை அடைக்க முடிந்தது. அதற்குள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் விநியோகத்தில் தடை ஏற்பட்டதால், நோயாளிகள் மூச்சுத்திணறலால் துடிக்க ஆரம்பித்தார்கள். ஆக்ஸிஜன் கசிவு குறித்த தகவல் கிடைத்ததும், பதற்றத்துடன் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனைக்குப் படையெடுத்தார்கள். ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சுத்திணறலால் நோயாளிகள் துடிதுடித்து உறவினர்கள் கண்முன்னே உயிரிழக்க ஆரம்பிக்க... அதைப் பார்த்து செய்வதறியாமல் உறவினர்கள் கதற ஆரம்பித்தார்கள்.

ஆக்ஸிஜன் கசிவு... மூச்சுத்திணறல்... துடிதுடித்து இறந்த 24 உயிர்கள்!

உயிர்கள் பலியாகாமல் தடுக்க மருத்துவப் பணியாளர்களும் எவ்வளவோ போராடினர். சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியுடன் நோயாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்தும் இரு சக்கர வாகனங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டுவரப்பட்டன. ஆனாலும், அவர்கள் வருவதற்குள் 22 நோயாளிகளின் உயிர்கள் பறிபோய்விட்டன. அடுத்த சிறிது நேரத்தில் மேலும் இரண்டு பேர் மரணத்தைத் தழுவ, ஒரு மணி நேரத்திலேயே பலி எண்ணிக்கை 24-ஆக உயர்ந்தது. அன்றைய தினம் முழுக்க உறவினர்களின் அழுகுரல்கள் மருத்துவமனை வளாகம் முழுக்க ஒலித்துக்கொண்டேயிருந்தன.

கடந்த மார்ச் 1-ம் தேதிதான் இந்த மருத்துவமனையில் இரண்டு ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்க்குகள் கட்டப்பட்டு, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பைத் தனியார் நிறுவனம் ஒன்றிடம் மாநகராட்சி நிர்வாகம் கொடுத்தது. இரண்டு மாதங்கள் முடிவடைவதற்குள் இப்படியோர் அசம்பாவிதம் நடந்தேறிவிட்டது.

இதற்கிடையே, பீட் மாவட்டத்திலுள்ள அம்பஜொகாய் என்ற இடத்திலுள்ள ராமானந்த் மருத்துவக் கல்லூரியிலும் அதே நாளில் 11 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், ‘‘அவர்களின் உயிரிழப்புக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை’’ என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஆக்ஸிஜன் கசிவு, மருந்துத் தட்டுப்பாடு... என்று தினந்தோறும் உயிர்கள் பலியாவது என்றுதான் முடிவுக்கு வருமோ?