Published:Updated:

மாணவி தற்கொலை: பேராசிரியர்கள் கைதை கண்டித்து மாணவர்கள் பேரணி!

Vikatan Correspondent
மாணவி தற்கொலை: பேராசிரியர்கள் கைதை கண்டித்து மாணவர்கள் பேரணி!
மாணவி தற்கொலை: பேராசிரியர்கள் கைதை கண்டித்து மாணவர்கள் பேரணி!

புதுச்சேரி: புதுச்சேரியில் கல்லூரி வளாகத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து விநாயகர் பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் பேரணி நடத்தினர்.
 

மாணவி தற்கொலை: பேராசிரியர்கள் கைதை கண்டித்து மாணவர்கள் பேரணி!

புதுச்சேரி சுல்தான் பேட்டையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரது மகள் வினோதினி, மதகப்பட்டியில் உள்ள  ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். பிற மாணவர்கள் முன்னிலையில் பேராசிரியர்கள், வினோதினியை திட்டியதாக கூறப்படுகிறது. அதனால், மனமுடைந்த அவர் கடந்த 24ஆம் தேதி கல்லூரியின் 4வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாணவி தற்கொலை சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவைச் சந்தித்து, மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
இதன் எதிரொலியாக, ஐந்து பேராசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 4 பேராசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், பேராசிரியர்கள் கைதை கண்டித்து ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்ப கல்லூரி குழுமத்தின் சார்பில் பேராசிரியர்கள், மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திரா காந்தி சிலை அருகே காலை 8 மணிக்கு குவிந்த மாணவர்களும், பேராசிரியர்களும் பின்னர் 9 மணிக்கு அண்ணாசாலை வழியாக முக்கிய வீதியாக வழியாக பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர்களை விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். மேலும், போராட்டத்தை தூண்டிய மாணவ அமைப்பினரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இந்த பேரணியில் கலந்து கொள்ளும்படி நேற்று மாலையே கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தொலைபேசி மூலம் கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால், மாணவர்கள் வேறு வழியின்றி கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்ப கல்லூரியில் கடந்த ஆண்டுகளில் நடந்த 9 பேரின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி அண்ணா சிலை அருகே உள்ள பாலபவன் பூங்காவில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.