Published:Updated:

ஐஸ் பெட்டிகளோடு கடலில் குதித்த மீனவர்கள்! -பாட்டி வீட்டுக்கு வந்த மாணவரும் பலியான சோகம்

மாணவர் ஆஸ்டின் சுஜீந்தர்
மாணவர் ஆஸ்டின் சுஜீந்தர்

படகுகள் கரை திரும்பிவிட்டன என அதிகாரிகள் அறிக்கை அளித்த நிலையில், இரு நாட்களுக்குப் பின் ஹெட்ரோவின் படகு கரைக்கு வராதது குறித்த தகவல் வெளியானது, மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டுகளை முறையாக சரிபார்க்காமல் அலட்சியமாக செயல்பட்டதாலும், கரை திரும்பாதவர்களைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாததாலும், பாட்டி வீட்டுக்கு வந்த மாணவன் உட்பட 3 மீனவர்கள் பலியான அவலம் நடந்துள்ளது.

பலியான மீனவர்கள்
பலியான மீனவர்கள்

மீன்பிடி தடைக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த 13-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 80 நாட்களுக்குப் பின் மீன்பிடிக்கச் செல்வதால், சுமார் 800 விசைப்படகுகள் அன்றைய தினம் மீன்பிடிக்கச் சென்றன. இந்தப் படகுகள் அனைத்தும் மறுநாள் காலை கரை திரும்பிய நிலையில், ஹெட்ரோ என்பவருக்குச் சொந்தமான படகு மட்டும் கரை திரும்பவில்லை. இதனால், இதில் சென்ற மீனவர்களான சேசு, ரெஜின்பாஸ்கர், மலர்வண்ணன் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் ஆஸ்டின் சுஜீந்தர் ஆகியோர் கதி என்ன ஆனது எனத் தெரியாத நிலை உருவானது.

மீனவர்கள் போராட்டம்
மீனவர்கள் போராட்டம்
உ.பாண்டி

கடந்த 13-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற படகுகள் அனைத்தும் கரை திரும்பிவிட்டன என மீன்வளத் துறை அதிகாரிகள் அறிக்கை அளித்த நிலையில், இரு நாட்களுக்குப் பின், ஹெட்ரோவின் படகு கரைக்கு வராதது குறித்த தகவல்கள் வெளியானது மீனவர்களின் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி,, அவர்களது குடும்பத்தினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர், தமிழக மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மீன்வளத் துறை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

2 நாட்களுக்குப் பின், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினரிடம், கரை திரும்பாத மீனவர்களை கண்டுபிடிக்கக் கோரி மீன்வளத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் 15-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதி மீனவர்கள், கடலில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சேசு என்ற மீனவரைக் காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், படகு கடலில் மூழ்கியதும் மீனவர்கள் உயிர் பிழைக்க ஐஸ் பெட்டிகளை பிடித்துக்கொண்டு கடலில் குதித்ததும் தெரியவந்தது. இதனால் கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

உயிருடன் மீட்கப்பட்ட மீனவர் சேசு
உயிருடன் மீட்கப்பட்ட மீனவர் சேசு

இந்நிலையில், மல்லிபட்டினம் கடற்பகுதியில் மிதந்த மீனவர் ரெஜின்பாஸ்கரின் உடல் மீட்கப்பட்டு நேற்றிரவு ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டது. மற்றொரு மீனவரான மலர்வண்ணன் மற்றும் மாணவர் ஆஸ்டின் சுஜீந்தர் உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரைச் சேர்ந்த ஆஸ்டின் சுஜீந்தர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா விடுமுறையினால் பாம்பனில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்துள்ளார். நீச்சல் தெரியாத இவருக்கு மீனவருக்கான அடையாள அட்டையும் இல்லை. இந்நிலையில், கடலுக்குச் சென்ற ஆஸ்டின் சுஜீந்தர் உயிரிழந்துள்ளார்.

‘கொரோனா அச்சம்.. சத்தியமங்கலம் எல்லையில்  ராமநாதபுரம் மீனவர்கள்!’ - சொந்த ஊர் திரும்ப முடியாத சோகம்

பாக் நீரிணை பகுதியில் விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், மீன்வளத் துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். இதற்கென ராமேஸ்வம் துறைமுகத்தில் டோக்கன் அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றும் மீன்வளத் துறையினர் கடலுக்குச் செல்லும் படகின் தரம், அதில் செல்லும் நபர்கள் மீனவர்கள்தானா என்பதற்கான அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் படகில் உள்ளனவா என ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், இவை எதுவுமே முறையாக நடப்பதில்லை.

படகின் உரிமையாளர் வழங்கும் மீனவர் அடையாள அட்டைகளை மட்டும் பதிவு செய்துகொண்டு, அந்தப் படகில் யார் செல்கிறார் என்பதை ஆய்வு செய்வதில்லை. நீண்டகால நடைமுறையாக பின்பற்றப்படும் இந்தத் தவறுகளை உள்ளூரில் இருக்கும் மீன்வளத் துறை உதவி இயக்குநரோ, மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை.

பலியான மீனவர்களின் குடும்பத்தினர்
பலியான மீனவர்களின் குடும்பத்தினர்

மீன்வளத் துறையினரின் இந்த அக்கறையின்மையால், ஒருவரது அடையாள அட்டையைக் காட்டிவிட்டு, வேறு நபரை கடலுக்கு அனுப்பியது, கரை திரும்பாத மீனவர்களைத் தேடுவதற்கு இரு நாட்களுக்குப் பின் நடவடிக்கை எடுத்த அலட்சியம் போன்றவற்றால் பாட்டி வீட்டுக்கு விடுமுறையில் வந்த மாணவர் உள்ளிட்ட 3 மீனவர்களின் உயிர் பறிபோய்விட்டது.

அடுத்த கட்டுரைக்கு